Sunday, 31 March 2024

நமக்கும் பொறுப்பு வேண்டும்!

 

சில இறப்பு வீடுகளில் நம் இளைஞர்கள் செய்யும் வெறித்தனமான செய்கைகள் நம்மைத் தலைகுனிய வைக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்  என்று நமக்கும் புரிவதில்லை.

காலம் நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரம் பார்த்தாலும் குடியும் கும்மாளமும்.  பக்கத்தில் குடியிருப்பவர்களைப் பற்றி  எந்தக் கவலையும் இல்லை.  நான் எதையும் செய்வேன் யார் என்னைக் கேட்பது என்கிற மூர்க்கத்தனம்.

வருங்காலங்களில் இறப்பு வீடுகளுக்குப் போவது கூட குற்றமோ என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்படுகிறோமோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு நமது இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர்.

சாவு வீடு  என்றால் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தோடு இருப்பார்கள்  என்கிற எண்ணமே இருப்பதில்லை.  இறந்தவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்கையில் என்ன ஆர்ப்பாட்டம்.  மோட்டார் சைக்கள் ஊர்வலம், பட்டாஸ் வெடிகளின் வெடிச்சத்தம்  -  சாவு என்கிற துக்கம் போய்  ஏதோ  பிறந்தநாள் கொண்டாட்டம் போல் மாற்றிவிடுகின்றனர்.

கடைசியில் நிலைமை என்னவாகிறது?  காவல்துறை  தலையிட வேண்டியநிலைக்கு ஆளாகிறது.

பொதுவாகவே நமது இளைஞர்கள் நல்லவர்கள். நல்லதைச் செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் உள்ளன.  அவர்களைத் தவறான வழிகளில் கொண்டு செல்லவதற்குத்தான்  வழிகாட்டிகள் உள்ளனர்.  இந்த வழிகாட்டிகள் எல்லாம் பெரிய மனிதர்கள்  போர்வையில் வலம் வருகின்றவர்கள்.  இந்த வழிகாட்டிகள் எது பற்றியும் கவலைப்படாதவர்கள். பணம், பதவி, பட்டம்  இப்படித்தான்  இவர்கள் மூளை  வேலை செய்யும்.

நமது இளைஞர்களுக்கு வேலை இல்லாததும் ஒரு பிரச்சனையே. நமது இளைஞர்களுக்குப் பல தொழிற்திறன் பயிற்சிகள்  அளிக்கப்படுகின்றன. பலர் பயன்பெறத்தான் செய்கின்றனர். பலருக்கு இந்த செய்தியே எட்டுவதில்லை.  காரணம் எஸ்.பி.எம். முடித்த பிறகு என்ன செய்யலாம் என்கிற தேடல் இல்லை.  வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தேடிப் போவதில்லை.  பெற்றோர்களும் தடையாக இருக்கின்றனர்.

நம்முடைய குற்றச்சாட்டெல்லாம் நமது பெற்றோர்களின் மீது தான். அவர்களும் கல்வியைப் பெரிதாகக் கருதுவதில்லை. பிள்ளைகளும் அது பற்றி கவலைப்படுவதில்லை. பொறுப்பு பெற்றோரிடமிருந்து தொடங்க வேண்டும்.  அப்போது தான் அது பிள்ளைகளிடம் போய் சேரும்.

Saturday, 30 March 2024

ஏன் கண்டு கொள்ளவில்லை?

 

சமயத்தைப் பற்றி பேசுவதை யாரும் விரும்புவதில்லை.  ஆனால் இந்து சமயத்தைக் கேவலப்படுத்தி  சிலர் பேசுவதை  யாராலும் தடுக்க  முடிவதில்லை.  தடுப்பதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு  என்றும்  புரியவில்லை.  எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தேவையற்ற ஒரு பிரச்சனையை, தேவையில்லாமல் கிளப்பிவிட்டு, அது பற்றி பேசி,  தேவையற்ற  விவாதங்களைக் கிளப்பி  ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சமயத்தைப் பற்றி பேசி அதனை சர்ச்சையாக்குவதில்  யாருக்கென்ன   இலாபம்?

எந்த ஒரு மதத்துக்காரனும் தன்னுடைய மதம் தாழ்ந்தது என்று எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் கரடியாய்க் கத்துங்கள் அதற்காக உங்கள் மதம் உயர்ந்தது  என்று  எந்த கரடியும் ஒத்துக்கப் போவதில்லை.  ஏன்?  எவரஸ்ட் மலை மீது ஏறி  எகிறி எகிறி குதித்து  தலைகீழாக நின்று கத்துங்கள்  அதற்கெல்லாம் யாரும் மசியப்போவதில்லை.

ஒரே காரணம் தான். அவனவனுக்கு ஒரு மதம் உண்டு. அதைத்தான் அவன் காலங்காலமாக வழிபட்டு வருகிறான். அந்த மதத்தின் மூலம் அவனுக்கு எந்தத் தாழ்வும் வந்ததில்லை.   உலகில் சராசரி மனிதன் வாழும் வாழ்க்கையைத் தான்  அவனும் வாழ்கிறான்.  அதனால் உங்கள் மதமோ எங்கள் மதமோ அவனை உயர்த்தி விடவாப் போகிறது?  மதம் உயர்த்தாது உழைப்புத்தான்  உயர்த்தும்.

மனிதன் சாமி கும்புடுகிறானே  அதுவே பெரிய விஷயம்.  சாமியே வேண்டாம் என்று வெறுப்பவர்களும் இருக்கிறார்கள்.  நாத்திகர்கள் அதைத்தானே  செய்கிறார்கள்?  ஆனால் ஒன்றை யோசித்தது உண்டா?  நாத்திகம் பேசுகிறவனால் எந்த  மதப்பிரச்சனையும் வந்ததில்லை.  மதத்துக்காக அடித்துக் கொள்வதில்லை.  எந்த நாட்டிலாவது  நாத்திகனால் வம்புதும்பு  ஏதேனும் வந்ததுண்டா?  அடிதடி வந்ததுண்டா? 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.  உங்களுக்கு அதனால் இலாபம் வருகிறது என்றால்  தாராளமாக வரட்டும், கொட்டட்டும்! முடிந்தால் மலேசியாவின் ஒரு  கோடிஸ்வரனாக வர முயலுங்கள். உங்களைப் பாராட்டுகிறோம். யாருக்கும் உங்கள் மீது கோபமில்லை.  ஒரு மதத்தைத் தேர்ந்து எடுப்பது, தொழிலை தேர்ந்தெடுப்பது  உங்கள் உரிமை. ஆனால் பிற மதத்தினரின் நம்பிக்கையைச் சிதைப்பது  உங்களுக்கு உரிமையில்லை.     

பிற மதங்களைப் பற்றி பேச யாரும் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்!

Friday, 29 March 2024

நல்ல காலம் பொறக்குது!

 

நாட்டின் பொது எதிரி என்றால் ஊழல் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன பயன்?  வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். காரணம் அது அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் போது  அனைவருமே அடங்கிப் போகத்தான் வேண்டியுள்ளது.

பிரதமர் அனவார் பதவிக்கு வந்த பிறகு ஒரு சில மாற்றங்கள் தெரிந்தன. அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக, ஒரு சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன.  ஊழலை அவ்வளவு எளிதில்  வெளிக்கொண்டு வந்துவிட முடியாது. பிரதமர் என்ன தான் முயற்சி செய்தாலும்  அவர் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகத்தான் வேண்டும்.

இந்த நேரத்தில் நல்ல செய்தி ஒன்றும் வெளியாகி இருக்கிறது.  நமது மாமன்னரே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தான் அந்த செய்தி. ஆமாம் அவர் சொந்த மாநிலமே சிங்கப்பூர் அருகில்  இருப்பதால் அங்கு ஊழல்வாதிகளுக்கு என்ன தண்டனை என்பதை அறிந்தவர்.  சிங்கப்பூர் நாடு  ஊழலற்ற நாடு என்பது போல,  அவர் ஆளும் மலேசியா நாடும் ஊழலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பதில்  எந்த குற்றமுமில்லையே!

மாமன்னர் பதவிக்கு வருமுன்னரே பல கருத்துக்களைக் கூறி இருந்தார். அதில் ஊழல், இலஞ்சம்  என்பதில்  அதிகக் கவனம் செலுத்து விரும்புவதாகக் கூறி இருந்தார்.  சொன்னது போலவே  தனது பணியை ஆரம்பித்துவிட்டார்.

நமக்கு அதிலே மகிழ்ச்சி தான்.  பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பேசிக் கொண்டிருந்த நமக்கு  "இதோ நான் இருக்கிறேன்!"  என்று  முழக்கமிட ஆரம்பித்துவிட்டார் மாமன்னர்!  மணி கட்டுவது என்பதெல்லாம்  அதிகாரத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.

இதில் இந்தியர்களில் நிலைமை என்னவாக இருக்கும்?  சிடேக், மித்ரா என்று சொல்லி எத்தனையோ அரசியல்வாதிகள் கொள்ளயடித்தார்களே அவர்கள் மட்டும்  தப்பிக்க முடியுமா? அவர்களுக்கும் இருக்கிறது  ஆப்பு என நம்பலாம்.

மித்ரா மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ கொள்ளைகள் நடந்தன.  யாரால் என்ன செய்ய முடிந்தது?  அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது.  அதனால் யாராலும் எதனையும் செய்வதற்கில்லை.  இப்போது தான்  கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. பார்ப்போம்!

நல்ல காலம் பொறக்குது!