Sunday, 31 March 2024

நமக்கும் பொறுப்பு வேண்டும்!

 

சில இறப்பு வீடுகளில் நம் இளைஞர்கள் செய்யும் வெறித்தனமான செய்கைகள் நம்மைத் தலைகுனிய வைக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்  என்று நமக்கும் புரிவதில்லை.

காலம் நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரம் பார்த்தாலும் குடியும் கும்மாளமும்.  பக்கத்தில் குடியிருப்பவர்களைப் பற்றி  எந்தக் கவலையும் இல்லை.  நான் எதையும் செய்வேன் யார் என்னைக் கேட்பது என்கிற மூர்க்கத்தனம்.

வருங்காலங்களில் இறப்பு வீடுகளுக்குப் போவது கூட குற்றமோ என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்படுகிறோமோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு நமது இளைஞர்கள் நடந்து கொள்கின்றனர்.

சாவு வீடு  என்றால் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தோடு இருப்பார்கள்  என்கிற எண்ணமே இருப்பதில்லை.  இறந்தவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்கையில் என்ன ஆர்ப்பாட்டம்.  மோட்டார் சைக்கள் ஊர்வலம், பட்டாஸ் வெடிகளின் வெடிச்சத்தம்  -  சாவு என்கிற துக்கம் போய்  ஏதோ  பிறந்தநாள் கொண்டாட்டம் போல் மாற்றிவிடுகின்றனர்.

கடைசியில் நிலைமை என்னவாகிறது?  காவல்துறை  தலையிட வேண்டியநிலைக்கு ஆளாகிறது.

பொதுவாகவே நமது இளைஞர்கள் நல்லவர்கள். நல்லதைச் செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் உள்ளன.  அவர்களைத் தவறான வழிகளில் கொண்டு செல்லவதற்குத்தான்  வழிகாட்டிகள் உள்ளனர்.  இந்த வழிகாட்டிகள் எல்லாம் பெரிய மனிதர்கள்  போர்வையில் வலம் வருகின்றவர்கள்.  இந்த வழிகாட்டிகள் எது பற்றியும் கவலைப்படாதவர்கள். பணம், பதவி, பட்டம்  இப்படித்தான்  இவர்கள் மூளை  வேலை செய்யும்.

நமது இளைஞர்களுக்கு வேலை இல்லாததும் ஒரு பிரச்சனையே. நமது இளைஞர்களுக்குப் பல தொழிற்திறன் பயிற்சிகள்  அளிக்கப்படுகின்றன. பலர் பயன்பெறத்தான் செய்கின்றனர். பலருக்கு இந்த செய்தியே எட்டுவதில்லை.  காரணம் எஸ்.பி.எம். முடித்த பிறகு என்ன செய்யலாம் என்கிற தேடல் இல்லை.  வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தேடிப் போவதில்லை.  பெற்றோர்களும் தடையாக இருக்கின்றனர்.

நம்முடைய குற்றச்சாட்டெல்லாம் நமது பெற்றோர்களின் மீது தான். அவர்களும் கல்வியைப் பெரிதாகக் கருதுவதில்லை. பிள்ளைகளும் அது பற்றி கவலைப்படுவதில்லை. பொறுப்பு பெற்றோரிடமிருந்து தொடங்க வேண்டும்.  அப்போது தான் அது பிள்ளைகளிடம் போய் சேரும்.

No comments:

Post a Comment