சமயத்தைப் பற்றி பேசுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்து சமயத்தைக் கேவலப்படுத்தி சிலர் பேசுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை. தடுப்பதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு என்றும் புரியவில்லை. எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தேவையற்ற ஒரு பிரச்சனையை, தேவையில்லாமல் கிளப்பிவிட்டு, அது பற்றி பேசி, தேவையற்ற விவாதங்களைக் கிளப்பி ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமயத்தைப் பற்றி பேசி அதனை சர்ச்சையாக்குவதில் யாருக்கென்ன இலாபம்?
எந்த ஒரு மதத்துக்காரனும் தன்னுடைய மதம் தாழ்ந்தது என்று எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கரடியாய்க் கத்துங்கள் அதற்காக உங்கள் மதம் உயர்ந்தது என்று எந்த கரடியும் ஒத்துக்கப் போவதில்லை. ஏன்? எவரஸ்ட் மலை மீது ஏறி எகிறி எகிறி குதித்து தலைகீழாக நின்று கத்துங்கள் அதற்கெல்லாம் யாரும் மசியப்போவதில்லை.
ஒரே காரணம் தான். அவனவனுக்கு ஒரு மதம் உண்டு. அதைத்தான் அவன் காலங்காலமாக வழிபட்டு வருகிறான். அந்த மதத்தின் மூலம் அவனுக்கு எந்தத் தாழ்வும் வந்ததில்லை. உலகில் சராசரி மனிதன் வாழும் வாழ்க்கையைத் தான் அவனும் வாழ்கிறான். அதனால் உங்கள் மதமோ எங்கள் மதமோ அவனை உயர்த்தி விடவாப் போகிறது? மதம் உயர்த்தாது உழைப்புத்தான் உயர்த்தும்.
மனிதன் சாமி கும்புடுகிறானே அதுவே பெரிய விஷயம். சாமியே வேண்டாம் என்று வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். நாத்திகர்கள் அதைத்தானே செய்கிறார்கள்? ஆனால் ஒன்றை யோசித்தது உண்டா? நாத்திகம் பேசுகிறவனால் எந்த மதப்பிரச்சனையும் வந்ததில்லை. மதத்துக்காக அடித்துக் கொள்வதில்லை. எந்த நாட்டிலாவது நாத்திகனால் வம்புதும்பு ஏதேனும் வந்ததுண்டா? அடிதடி வந்ததுண்டா?
நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் நாடகம் ஆடாதீர்கள். உங்களுக்கு அதனால் இலாபம் வருகிறது என்றால் தாராளமாக வரட்டும், கொட்டட்டும்! முடிந்தால் மலேசியாவின் ஒரு கோடிஸ்வரனாக வர முயலுங்கள். உங்களைப் பாராட்டுகிறோம். யாருக்கும் உங்கள் மீது கோபமில்லை. ஒரு மதத்தைத் தேர்ந்து எடுப்பது, தொழிலை தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை. ஆனால் பிற மதத்தினரின் நம்பிக்கையைச் சிதைப்பது உங்களுக்கு உரிமையில்லை.
பிற மதங்களைப் பற்றி பேச யாரும் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்!
No comments:
Post a Comment