Friday 29 March 2024

நல்ல காலம் பொறக்குது!

 

நாட்டின் பொது எதிரி என்றால் ஊழல் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன பயன்?  வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். காரணம் அது அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் போது  அனைவருமே அடங்கிப் போகத்தான் வேண்டியுள்ளது.

பிரதமர் அனவார் பதவிக்கு வந்த பிறகு ஒரு சில மாற்றங்கள் தெரிந்தன. அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக, ஒரு சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன.  ஊழலை அவ்வளவு எளிதில்  வெளிக்கொண்டு வந்துவிட முடியாது. பிரதமர் என்ன தான் முயற்சி செய்தாலும்  அவர் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகத்தான் வேண்டும்.

இந்த நேரத்தில் நல்ல செய்தி ஒன்றும் வெளியாகி இருக்கிறது.  நமது மாமன்னரே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தான் அந்த செய்தி. ஆமாம் அவர் சொந்த மாநிலமே சிங்கப்பூர் அருகில்  இருப்பதால் அங்கு ஊழல்வாதிகளுக்கு என்ன தண்டனை என்பதை அறிந்தவர்.  சிங்கப்பூர் நாடு  ஊழலற்ற நாடு என்பது போல,  அவர் ஆளும் மலேசியா நாடும் ஊழலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பதில்  எந்த குற்றமுமில்லையே!

மாமன்னர் பதவிக்கு வருமுன்னரே பல கருத்துக்களைக் கூறி இருந்தார். அதில் ஊழல், இலஞ்சம்  என்பதில்  அதிகக் கவனம் செலுத்து விரும்புவதாகக் கூறி இருந்தார்.  சொன்னது போலவே  தனது பணியை ஆரம்பித்துவிட்டார்.

நமக்கு அதிலே மகிழ்ச்சி தான்.  பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பேசிக் கொண்டிருந்த நமக்கு  "இதோ நான் இருக்கிறேன்!"  என்று  முழக்கமிட ஆரம்பித்துவிட்டார் மாமன்னர்!  மணி கட்டுவது என்பதெல்லாம்  அதிகாரத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.

இதில் இந்தியர்களில் நிலைமை என்னவாக இருக்கும்?  சிடேக், மித்ரா என்று சொல்லி எத்தனையோ அரசியல்வாதிகள் கொள்ளயடித்தார்களே அவர்கள் மட்டும்  தப்பிக்க முடியுமா? அவர்களுக்கும் இருக்கிறது  ஆப்பு என நம்பலாம்.

மித்ரா மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ கொள்ளைகள் நடந்தன.  யாரால் என்ன செய்ய முடிந்தது?  அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது.  அதனால் யாராலும் எதனையும் செய்வதற்கில்லை.  இப்போது தான்  கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. பார்ப்போம்!

நல்ல காலம் பொறக்குது!

No comments:

Post a Comment