Tuesday, 30 April 2024

தேர்தலில் அனைவரும் பங்குபெறுங்கள்!


 கோலகுபுபாரு இடைத்தேர்தல் நெருங்க நெருங்க இந்தியத் தலைவர்களின்  பிரச்சார அனல் தீவிரமாகிக் கொண்டு வருகிறது என்று பார்க்கிறோம்.

சீனர், மலாய்க்காரர் கூட  அமைதியாக தங்களது பிரச்சாரத்தைச் செய்து கொண்டு வருகின்றனர்.  ஆனால்  இந்தியத் தலைவர்கள் மட்டும் தான் என்னவோ 'இன்றைக்கே! நாளைக்கே!' அனைத்துப் பிரச்சனைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடுவோம் என்பது போன்று பிரச்சரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த ஏமாற்று வேலையெல்லாம் நமக்கும் தெரியும்  என்பது அவர்களுக்கும் தெரியும்.  அறுபது  ஆண்டு காலம் அனைத்துக்கும் பொறுத்துப்போன  சமூகம் அல்லவா நாம்? நாம் பொறுத்துபோனதினாலே  மரத்துப்போன நிலைக்கு வந்துவிட்டோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

நாம்  அப்படியே இருந்துவிடுவதற்கு  நாம் ஒன்றும்  மரக்கட்டைகள் அல்ல.  நேரம் வரும்போது பொங்கி எழத்தான் செய்வார்கள்.

கோலகுபுபாருவில்  நமது தலைவர்கள் என்னன்னவோ பேசுகிறார்கள் என்பது உண்மை தான்.  தேர்தலை புறக்கணியுங்கள்  என்று பேசுவதையெல்லாம் நம்மால் ஏற்றுக்கொள்ளத்தான்  முடியவில்லை.  ஆனால் ஏன் அப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.  ஏன் அப்படி ஒரு மனநிலை நமக்கும் ஏற்பட்டது?  அறுபது ஆண்டு கால ஆத்திரம் நம்மை அப்படி ஒரு சூழலுக்கு இழுத்துச் சென்றுவிட்டது என்பது தான் உண்மை.  இப்படி ஒரு இழுத்தடிப்பு  அல்லது காத்திருப்பு  எங்கே போய் முடியும் என்பது இனிமேல் தான் புரியும்.

பிரதமரை எடுத்துக் கொண்டால்  அவர் இந்தியர்களின் மீது எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.  சமீபத்திய பேட்டியின் போது கூட  இந்திய மாணவர்களின் மெட் ரிகுலேஷன்  எண்ணிக்கைப் பற்றி  அவர் கருத்துரைக்கவில்லை.  அவர் தனது பாதையில் சரியாகவே செல்கிறார்.  ஆகவே நமது பாதையை நாம் சரியாகத்  தேர்ந்தெடுத்து  அதன்படி தான்  நாம் செல்ல வேண்டும்.

இடைத்தேர்தலில் அனைவரும் பங்குப் பெறுங்கள்.  புறக்கணிப்பு எந்தப்பயனையும் தராது.  தொகுதி அளவில் கூட நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் கையாலாகதவர்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை!

Monday, 29 April 2024

அரசாங்க வேலைக்கு ஆள் சேர்க்கிறீர்களோ!

 

நமது கல்வி கொள்கைப்பற்றி நமக்கே எந்தக் காலத்திலும் நம்பிக்கையில்லாமல் தான் இருக்கிறோம்!

உண்மையில் அது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.   நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது  என்கிற நிலையில், நமது எதிர்ப்புக்குரலை காதுகொடுத்துக் கேட்க மறுக்கும் அதிகார வர்க்கத்தின்  அகங்காரத்தை  நாம் எப்போதும் போல தலையாட்டிவிட்டுப் போக வேண்டிய சூழல் தான்.

ஆனால் இப்போது உலக வங்கியே  நமது நாட்டு கல்வி நிலையைப் பற்றி ஓர் அச்சுத்துறுத்தலான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.  இதுவும் கல்வி அமைச்சின் காதில் விழுமா  என்பது நமக்குத் தெரியவில்லை! கல்வியிலும்  எங்களுக்குச் சலுகை வேண்டும் என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்பட்டுவிட்டோம்!

ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களில் சுமார்  42 விழுக்காடு மாணவர்கள்  வாசிக்கின்ற திறனற்று இருக்கின்றனர்! மலேசிய  மாணவர்கள் சுமார் 12.5 ஆண்டுகள் பள்ளி சென்று கல்வி கற்கின்றனர். ஆனால் அவர்களின் கல்வித் திறனோ 8.9 ஆண்டுகளுக்குச் சமமான கல்வியே கற்கின்றனர்.  இதனையே வியட்னாமிய மாணவர்கள் சுமார் 12.9 ஆண்டுகளும் அவர்களின் திறன் 10.7 ஆண்டுகள் எனவும்  அதனையே சிங்கப்பூர்  மாணவர்கள் 13.9 ஆண்டுகளும் அவர்களது கல்வித்திறன்  12.8 ஆண்டுகள் எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகின்றது.

ஒரு  காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மலேசியா இன்று வியட்னாமியர்களை விட தாழ்ந்த நிலையில் உள்ளோம்.  சிங்கப்பூர்....? சொல்லவே வேண்டாம்.  அது எட்டாத கனி!அப்படி ஒரு சூழலுக்குக் கொண்டு சென்று விட்டார்கள் நமது கல்வியாளர்கள்!  கல்வியில் அரசியல்வாதிகள் தலையீடு இருந்தால்  இப்படித்தான் நமக்குத்  தலைகுனிவு  ஏற்படும்  என்பது  புரிகிறது!

சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டிய கல்வி அமைச்சு ஏதோ அரசாங்க  வேலைக்கு ஆள் சேர்க்கும்  வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது!  மிகவும் கேவலமான சூழ்நிலை.  இனிமேலாவது ஏதாவது சீர்த்திருத்தத்தை ஏற்படுத்துமா கல்வி அமைச்சு? சந்தேகந்தான்!

அரசாங்க வேலைக்கு ஆள் வேண்டுமே!

Sunday, 28 April 2024

தீயணப்பு துறையில் வேலை வாய்ப்புகள்

 


தீயணைப்புத்  துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக  "வணக்கம் மலேசியா"  செய்தி வெளியிட்டிருந்தது.

வேலை தேடும் இளைஞர்கள்களுக்காக  இந்தச் செய்தியை வெளியிடுகிறோம். சீருடை அணிந்து வேலை செய்யும் துறைகளை  நமது இளைஞர்களில் பலர் விரும்பவே செய்கின்றனர்.

சுமார் 1500 இடங்கள்  காலி இருப்பதாகக் கூறப்படுகிறது.  தகுதி உள்ளவர்கள்  முயற்சிகளைச் செய்யலாம்.  வழக்கம் போல "நமக்கெல்லாம் எங்கே கொடுக்கப் போகிறார்கள்"  என்கிற பல்லவியை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்க வேண்டாம்.  அள்ளி கொடுக்கவில்லை என்றாலும் கிள்ளியாவது கொடுக்கத்தான் செய்வார்கள்.  வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான்  இருக்கின்றன. தேவை எல்லாம் நமது முயற்சி மட்டும் தான்.

கணினியை நாடுங்கள்.  சம்பந்தப்பட்ட துறையைத் தேடுங்கள்.  எல்லா விபரங்களும் அங்கே கிடைக்கும்.  யாரோ ஓடிவந்து உதவுவார்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.  உங்களுக்கு நீங்களே தான் உதவிக்கொள்ள வேண்டும்.

உங்களின் முயற்சி செய்யாமல் எதுவும் அசையப்போவதில்லை.  முயற்சி உங்களுடையது.  நிச்சயம் பலன் கிட்டும். வாழ்த்துகள்!