Monday 29 April 2024

அரசாங்க வேலைக்கு ஆள் சேர்க்கிறீர்களோ!

 

நமது கல்வி கொள்கைப்பற்றி நமக்கே எந்தக் காலத்திலும் நம்பிக்கையில்லாமல் தான் இருக்கிறோம்!

உண்மையில் அது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.   நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது  என்கிற நிலையில், நமது எதிர்ப்புக்குரலை காதுகொடுத்துக் கேட்க மறுக்கும் அதிகார வர்க்கத்தின்  அகங்காரத்தை  நாம் எப்போதும் போல தலையாட்டிவிட்டுப் போக வேண்டிய சூழல் தான்.

ஆனால் இப்போது உலக வங்கியே  நமது நாட்டு கல்வி நிலையைப் பற்றி ஓர் அச்சுத்துறுத்தலான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.  இதுவும் கல்வி அமைச்சின் காதில் விழுமா  என்பது நமக்குத் தெரியவில்லை! கல்வியிலும்  எங்களுக்குச் சலுகை வேண்டும் என்கிற நிலைமைக்கு நாம்  தள்ளப்பட்டுவிட்டோம்!

ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களில் சுமார்  42 விழுக்காடு மாணவர்கள்  வாசிக்கின்ற திறனற்று இருக்கின்றனர்! மலேசிய  மாணவர்கள் சுமார் 12.5 ஆண்டுகள் பள்ளி சென்று கல்வி கற்கின்றனர். ஆனால் அவர்களின் கல்வித் திறனோ 8.9 ஆண்டுகளுக்குச் சமமான கல்வியே கற்கின்றனர்.  இதனையே வியட்னாமிய மாணவர்கள் சுமார் 12.9 ஆண்டுகளும் அவர்களின் திறன் 10.7 ஆண்டுகள் எனவும்  அதனையே சிங்கப்பூர்  மாணவர்கள் 13.9 ஆண்டுகளும் அவர்களது கல்வித்திறன்  12.8 ஆண்டுகள் எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகின்றது.

ஒரு  காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மலேசியா இன்று வியட்னாமியர்களை விட தாழ்ந்த நிலையில் உள்ளோம்.  சிங்கப்பூர்....? சொல்லவே வேண்டாம்.  அது எட்டாத கனி!அப்படி ஒரு சூழலுக்குக் கொண்டு சென்று விட்டார்கள் நமது கல்வியாளர்கள்!  கல்வியில் அரசியல்வாதிகள் தலையீடு இருந்தால்  இப்படித்தான் நமக்குத்  தலைகுனிவு  ஏற்படும்  என்பது  புரிகிறது!

சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டிய கல்வி அமைச்சு ஏதோ அரசாங்க  வேலைக்கு ஆள் சேர்க்கும்  வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது!  மிகவும் கேவலமான சூழ்நிலை.  இனிமேலாவது ஏதாவது சீர்த்திருத்தத்தை ஏற்படுத்துமா கல்வி அமைச்சு? சந்தேகந்தான்!

அரசாங்க வேலைக்கு ஆள் வேண்டுமே!

No comments:

Post a Comment