கோலகுபுபாரு இடைத்தேர்தல் நெருங்க நெருங்க இந்தியத் தலைவர்களின் பிரச்சார அனல் தீவிரமாகிக் கொண்டு வருகிறது என்று பார்க்கிறோம்.
சீனர், மலாய்க்காரர் கூட அமைதியாக தங்களது பிரச்சாரத்தைச் செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் இந்தியத் தலைவர்கள் மட்டும் தான் என்னவோ 'இன்றைக்கே! நாளைக்கே!' அனைத்துப் பிரச்சனைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடுவோம் என்பது போன்று பிரச்சரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஏமாற்று வேலையெல்லாம் நமக்கும் தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியும். அறுபது ஆண்டு காலம் அனைத்துக்கும் பொறுத்துப்போன சமூகம் அல்லவா நாம்? நாம் பொறுத்துபோனதினாலே மரத்துப்போன நிலைக்கு வந்துவிட்டோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்!
நாம் அப்படியே இருந்துவிடுவதற்கு நாம் ஒன்றும் மரக்கட்டைகள் அல்ல. நேரம் வரும்போது பொங்கி எழத்தான் செய்வார்கள்.
கோலகுபுபாருவில் நமது தலைவர்கள் என்னன்னவோ பேசுகிறார்கள் என்பது உண்மை தான். தேர்தலை புறக்கணியுங்கள் என்று பேசுவதையெல்லாம் நம்மால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. ஆனால் ஏன் அப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. ஏன் அப்படி ஒரு மனநிலை நமக்கும் ஏற்பட்டது? அறுபது ஆண்டு கால ஆத்திரம் நம்மை அப்படி ஒரு சூழலுக்கு இழுத்துச் சென்றுவிட்டது என்பது தான் உண்மை. இப்படி ஒரு இழுத்தடிப்பு அல்லது காத்திருப்பு எங்கே போய் முடியும் என்பது இனிமேல் தான் புரியும்.
பிரதமரை எடுத்துக் கொண்டால் அவர் இந்தியர்களின் மீது எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. சமீபத்திய பேட்டியின் போது கூட இந்திய மாணவர்களின் மெட் ரிகுலேஷன் எண்ணிக்கைப் பற்றி அவர் கருத்துரைக்கவில்லை. அவர் தனது பாதையில் சரியாகவே செல்கிறார். ஆகவே நமது பாதையை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்து அதன்படி தான் நாம் செல்ல வேண்டும்.
இடைத்தேர்தலில் அனைவரும் பங்குப் பெறுங்கள். புறக்கணிப்பு எந்தப்பயனையும் தராது. தொகுதி அளவில் கூட நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் கையாலாகதவர்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை!
No comments:
Post a Comment