Wednesday 11 January 2017

வெட்கமே இல்லாத ஜென்மங்கள்!




ஏதோ ஒரு முறை தவறு நடக்கலாம் அல்லது இரண்டு முறை தவறுகள் நடக்கலாம்.

ஆனால் அதுவே தொடர்கதையாக தொடர்ந்தால்.....? என்னவென்று சொல்லுவது? என்ன வெட்கங்கெட்ட ஜென்மங்கள் என்று தான் நமக்குத் தோன்றும்.

இப்போதும் இந்த நிகழ்ச்சி இந்தியாவின் ஓரிசா மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது. இதற்கு முன்பும் - நாம் கேள்விப்பட்டவரை - முதன் முதலாக இதே மாநிலத்தில் தான் கணவர் ஒருவர் இறந்து போன தனது மனைவியைத் தோளில் சுமந்து சென்றதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு முன்னும் இது நடந்து இருக்கலாம். ஆனால் செய்திகள் வெளியாகவில்லை. இப்போது இருக்கும் நவீன தொழில் நுட்பங்கள் உடனடியாகச் செய்திகளை வெளிக்கொணர்ந்து விடுகின்றன.

இதில் நாம் குறிப்பாகப் பார்க்க வேணடியவை தங்களைப்  படித்தவர்கள் என்று நினைப்பவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்பது தான். மனிதாபிமானமே இல்லாத ஈன ஜென்மங்களாக இவர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது?

ஏழைகள் என்றால் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டுமா?

இறந்த போன ஏழு வயது குழந்தையை ஒரு தகப்பன் 15 கிலொமீட்டர் தூரம் சுமந்து கொண்டு செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.

முன்பு நமக்குக் கிடைத்த செய்தி  -  இறந்து போன தனது மனைவியை கணவர் தோளில் சுமந்து கொண்டு போனதாக வந்தது - ஆனால் இது போன்ற செய்திகள் வரும் போது சம்பந்ததப்பட்ட மருத்துவமனை என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது சுகாதார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது மாநில அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது நடுவண் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று ஒன்றுமே தெரியவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கு வழியில்லை.

இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அரபு நாட்டு அரசர் ஒருவர் அந்த ஏழைக்கு பண உதவி செய்ததாக செய்திகள் வெளியாயின. எங்கோ இருக்கும் ஒருவருக்கு இந்தியாவில் நடக்கும் அசிங்கங்கள் தெரிகின்றன. ஆனால் தனது மாநிலத்தில் நடக்கும் இந்த அசிங்கத்தை சுகாதார அமைச்சருக்குத் தெரியவில்லை!

யார் என்ன செய்வது? இது போன்ற ஒரு படத்தை எடுத்து சமுகவலைத்தளங்களில் போடுபவர்கள் கொஞ்சம் மனிதாபிமனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாலைந்து  பேர் சேர்ந்து கொஞ்சம் பணம் போட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கலாம்.

இனி இது போன்ற செய்திகள் வராமலிருக்க இறைவனை வேண்டுவோம்.

No comments:

Post a Comment