Friday 29 April 2022

எல்லா உரிமங்களும் உண்டு!

            பாட்டி ராதாமணிக்கு எல்லா வகையான உரிமங்களும் உண்டு!

மண்ணில் பிறந்துவிட்டால் ஏதாவது அடையாளத்தை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று ஒருசிலர் நினைப்பர். ஒருசிலருக்கு அது இயல்பாகவே நடந்துவிடும்.

ஒரு காலத்தில் சைக்கள் ஓட்டும் பெண்களைப் பார்த்தாலே  அதிசயமாக இருந்தது. அதன் பின்னர் மோட்டார் சைக்கள் ஓட்டுவது அதிசயமாக இருந்தது. அப்புறம் கார் ஓட்டினார்கள். இப்போது பேரூந்தும் ஓட்டுகிறார்கள். அதற்கு மேல் நான் பார்த்ததில்லை! 

ஆனால் இந்தியா, கேரளாவைச் சேர்ந்த பாட்டி ராதாமணி  எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டார்.   இப்போது அவருக்கு வயது பெரிசா ஒன்றுமில்லை. 71. வயது தான்!  ஆனால் பாட்டி  சாலைகளில் என்னன்ன ஓடுகிறதோ அனைத்தையும் ஓட்டுகிறார்! ஓட்டும் எல்லா வாகனங்களுக்கும் உரிமம் வைத்திருக்கிறார்!  பதினோரு வகையான உரிமங்கள் அவரிடம் உண்டு!

கார், பஸ், லாரி,  Tractor, Excavator, Forklift, Crane, Road Roller, Container Trailer Truck  - வேறு தெரியவில்லை! மன்னிக்கவும்!

பாட்டி முதன் முதலாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது  அவருக்கு வயது முப்பது. அப்போது அவரது கணவர் கார் ஓட்டும் பயிற்சி பள்ளி நடத்திக் கொண்டு வந்தார். அப்போது கணவரின் வற்புறுத்தலால் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். அதன் பிறகு வரிசையாக என்னன்ன வாகனங்கள் உள்ளனவோ அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிறந்துவிட்டது!

துரதிர்ஷ்டவசமாக அவரது கணவர் சாலை விபத்து  ஒன்றில் அகால மரணமடைந்தார். அவரது மகன்கள் அவருடைய பயிற்சி பள்ளியைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். அப்போது அவரது பிள்ளைகளுக்கு உதவியாக இருந்தார். பின்னர் பயிற்சி பெற வரும் மாணவர்களுக்காக அவர் அனைத்து வாகனங்களையும் கற்றுக்கொள்ளும் கட்டாயம்  அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது மாணவர்களுக்கு அனைத்துவகை வாகனங்களையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருக்கிறார்!

இப்போது அவர்களது பயிற்சி பள்ளி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பாட்டியும், அவரது இரண்டு மகன்களும்,  மருமகளும், பேரனுடனும் சேர்ந்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பதினோரு வகையான, வாகன உரிமங்கள் வைத்திருக்கும் பெண்மணி இந்தியாவில் இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இதனூடே இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இப்போது அவர் பாலிடெக்னிக் ஒன்றில் மெக்கனிக்கல் எஞ்சினியரிங் டிப்ளோமா படிப்பையும்  மேற்கொண்டு வருகிறாராம்!

ஒன்று புரிகிறது.மனிதன் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதிலே ஆணோ, பெண்ணோ வேறுபாடில்லை!

No comments:

Post a Comment