இப்படி ஒரு பிரச்சனை சமீபத்தில் எழுப்பபட்டிருக்கின்றது. இது என்னவோ நமக்குத் தெரியாதது போலவும் இப்போது தான் புதிதாக முகிழ்த்து எழுந்தது போலவும் பேசப்படுவது தான் நமக்கு ஆச்சரியம்.
மலேசியாவில் சீன ஆண்களாக இருந்தாலும் சரி சீனப் பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் மலாய்க்காரர்களைவிட இந்தியர்களைவிட அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பது நாம் அறிந்தது தான். இவைகள் அனைத்தும் சீன தனியார் நிறுவனங்களில் தான்.
பெரும் பெரும் நிறுவனங்களில், அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களில், இந்த வேற்றுமை என்பது குறைவு தான். ஆனால் சீனர்கள் சீனர்களாகத்தான் இருப்பார்கள். பொருள்கள் வாங்கும் போதும் கூட சீனர்களுக்கு ஒரு விலை மற்ற இனத்தவர்களுக்கு ஒரு விலையில் தான் அவர்கள் தங்கள் பொருள்களை விற்பார்கள்! அது ஒன்றும் சிதம்பர இரகசியம் அல்ல!
இப்போது ஒரு மலாய்ப் பெண்மணி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனக்கு 1000 வெள்ளி சம்பளமும் அதே வேலை செய்யும் சீனப்பெண்ணுக்கு 1400 வெள்ளி சம்பளமும் நிர்வாகம் கொடுப்பதாக புகார் கூறியிருக்கிறார்.
இந்தியப் பெண்கள் இது போன்ற பிரச்சனைகளில் குரல் எழுப்புவதில்லை. காரணம் அப்படி எழுப்பினால் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்! இப்படித்தான் இது எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டு வருகிறது! மலாய்ப் பெண்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினால் அவர்களுக்கு உதவ அம்னோ இளைஞர் அணி பொங்கி எழுவார்கள்! அதனாலேயே மலாய்ப் பெண்கள் விஷயத்தில் நிறுவனங்கள் அடக்கியே வாசிப்பார்கள்! இந்தியப் பெண்கள் விஷயத்தில் கேட்க ஆளில்லாத அனாதைகள் போன்றவர்கள். அதனால் கிடைப்பது போதும் என்று ஒரு பக்கம் முனகிக்கொண்டே காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள்.
இவைகள் எல்லாம் எல்லாக் காலங்களிலும் நடக்கும் சம்பவங்கள் தான். அரசாங்கத்தில் ஆள்பல அமைச்சு இருக்கிறது. அவர்களின் பார்வையின் கீழ் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. அவர்களும் மலாய்ப் பெண்கள் விஷயத்தில் தான் அக்கறை காட்டுவார்களே தவிர மற்றபடி இந்தியப் பெண்களின் மேல் அவர்களது தெய்வீகப்பார்வை விழுவதில்லை!
கிடைத்தது போதும் என்கிற மனப்பக்குவம் எப்போதுமே நமக்குண்டு. காரணம் எதிர்த்துப் பேசினால் இருப்பதும் போய்விடும் என்கிற அச்சத்திலேயே நாம் வாழ்பவர்கள். இன்னொன்று வீட்டிற்கு அருகிலேயே வேலை வேண்டும் என்கிற கொள்கையும் நமக்குண்டு. தூரமாகப் போய் வேலை செய்தால் பிள்ளைகள் கெட்டுப் போவார்கள் என்கிற பயம்!
ஆனால் இதற்கெல்லாம் முடிவு காண்பது என்பது அரசாங்கம் தான். வேலைகள் எல்லாம் ஒன்று தான். அப்புறம் சம்பளத்தில் ஏன் வேறுபாடு? அப்படியென்றால் ஆள்பல அமைச்சில் உள்ள அதிகாரிகள் தங்களது கடமைகளை அரைகுறையாக செய்கிறார்கள் என்பது தான் பொருள்
இந்த விஷயத்தில் ஆள்பல அமைச்சின் பொறுப்பே அதிகம்!
No comments:
Post a Comment