எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மகள் நூருல் இஸா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். ஏற்கனவே அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்பட்ட கருத்து தான்.
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசானின் அபிர்தமான வெற்றி யாரும் எதிர்பார்க்கவில்லை தான். ஒரு சில விஷயங்கள் பாரிசானுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மிக முக்கியமானது கோவிட்-19 தொற்று. பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதில் ஏகப்பட்ட கெடுபிடிகள். எதிர்கட்சிகளால் கூட்டங்களை நடத்த முடியவில்லை. வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்திப்பதிலும் அவர்களால் முடியவில்லை.
பாரிசானுக்கும் இதே நிலை தானே என்று கேட்கலாம். ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் ஏற்கனவே மக்களிடையே வெகு ஆழமாக வேரூன்றிய ஒரு கட்சி. மாநிலம் முழுவதிலும் அவர்களுக்குக் கிளைகள் உண்டு. அந்த அந்தக் கிளைகளைச் சார்ந்தவர்களே பிரச்சாரம் செய்தாலே போதும். எதிர்கட்சிகள் அங்கு எந்த தொடர்புகளையும் ஏற்படுத்த முடியவில்லை. அதற்குத் தொற்று மிகவும் பிரதானத் தடை.
இப்போது நூருல் இஸா என்ன சொல்ல வருகிறார்? மக்கள் திரண்டு வந்து வாக்களித்தால் ஒழிய பக்காத்தான் வெற்றி சந்தேகத்திற்குரியது தான் என்கிறார். அது தான் உண்மை.
இன்றைய நிலையில் கோவிட்-19 ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது உண்மை. அதனால் என்ன? நமது அடுத்த பொதுத் தேர்தல் என்பது அடுத்த ஆண்டு தான் நடைபெற வேண்டும்.
ஆனால் அம்னோ தரப்பு இப்போதே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. காரணம் இப்போது நடந்தால் மக்கள், ஜொகூரில் நடந்தது போலவே, அவர்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள்! மக்கள் இன்னும் தொற்று நோயினால் வெளியே போவதில் ஆர்வம் காட்டவில்லை. இது அம்னோவுக்குச் சாதகமாக அமையும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அம்னோ நீண்ட காலமாக மலாய் மக்களிடையே வேரூன்றிப்போன ஒரு கட்சி. சுமார் அறுபது எழுபது ஆண்டு கால வரலாறு அவர்களுக்கு உண்டு. பழைய தலைமுறையினர் அவர்களுக்கு இன்னும் விசுவாசமாகவே இருக்கின்றனர். அதனால் அவர்களுக்குப் பெரிய பிரச்சாரங்கள் எல்லாம் தேவை இல்லை.
ஆனால் எதிர்கட்சிகளுக்குப் பலவாறான சிக்கல்கள் உண்டு. இந்த கட்சிகள் இன்னும் மக்களிடையே சரியாகப் போய்ச் சேரவில்லை. ஜ.செ.க. ஓரளவு சீனர்களிடையே பிரபலமாக இருக்கின்ற கட்சி. பி.கே.ஆர். ஓரளவே பிரபலம். மற்ற கட்சிகளும் இன்னும் மக்களிடையே பிரபலமாகவில்லை! இந்த கட்சிகளுக்குத் தேர்தல் கூட்டத்தைப்போட்டுத் தான் வாக்குகள் பெற வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் அம்னோ எந்த அறிமுகமும் தேவையில்லை. அதுவே அவர்களுக்குச் சாதகம்.
அடுத்த பொதுத் தேர்தல் என்பது 2023-ம் ஆண்டு ஜூன் ஜூலை வாக்கில் நடைபெற வேண்டும். அதனால் தான் எதிர்க்கட்சிகள் இப்போது தேர்தல் வருவதை விரும்பவில்லை. இதுவே சாதகமான நேரம் என்பதால் அம்னோ இப்போது தேர்தல் வருவதை விரும்புகிறது.
நமக்குத் தெரிந்ததெல்லாம் நூருல் இஸா சொல்லுவது போல மக்கள் வாக்களிக்க திரண்டு வந்தால் வெற்றி நிச்சயம்! அதில் சந்தேகமில்லை!
No comments:
Post a Comment