சிலாங்கூர் சுல்தான் மிகவும் நகைச்சுவை மிக்க ஓர் ஆட்சியாளர் என்பதில் ஐயமில்லை!
சமீபத்தில் அவர் வாங்கியிருக்கும் ஓர் ஓவியம் அனைவராலும் பாராட்டப்படுகிறது!
நாடாளுமன்றத்தில் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த ஓவியம். அங்கே மக்களின் நலனுக்காக போராட வேண்டிய நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய - அவர்களுடைய பிள்ளைகளுடைய- அவர்களின் பதவிக்காக - அவர்கள் அமைச்சராவதற்காக - அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!
இவர்கள் தங்களின் நலனின் போராட்டத்திற்காக அவர்கள் செய்கின்ற காரியங்கள் என்ன? சமீப காலங்களில் நாம் நிறைய தவளைகளைப் பார்க்கிறோம். இங்கே இருந்து அங்கே மாறுவது, அங்கே இருந்து இங்கே மாறுவது, அறிவே இல்லாதவனுக்கு தீடிரென்று ஏதோ ஓரு அமைச்சர் பதவி, பெரிய நிறுவனத்தில் உயர் பதவி - இப்படி கோமாளித்தனமான துக்ளக் வேலையெல்லாம் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சராசரி மனிதனுக்குக் கூட கோபம் வரத்தான் செய்யும்.
சிலாங்கூர் ஆட்சியாளரான சுல்தானுக்கு அது எவ்வளவு வேதனையைத் தரும் என்பது நமக்குப் புரிகிறது. நாட்டில் நல்ல ஆட்சி நடக்க வேண்டும் என்பதைதான் ஒவ்வொரு ஆட்சியாளரும் விரும்புவர். நல்ல ஆட்சி என்றால் நிலையான ஆட்சி. ஊழலற்ற ஆட்சி.
இன்றைய அரசாங்கம் கூட நிலைத்து நிற்கிறது என்றால் அது மாமன்னர் தலையீட்டினால் தான் என்பது நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் இந்நேரம் அடித்துக் கொண்டும், சண்டைப் போட்டுக் கொண்டும் நாட்டையே நாறடித்திருப்பார்கள்! அரசியல்வாதிகளுக்கு அறிவு என்பது குறைவு! வெட்கம், ரோஷம் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி விட்டுத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்!
இப்படி ஓர் ஓவியத்தை சுல்தான் அவர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்றால் அவர் ஏதோ ஜாலிக்காக வாங்கவில்லை. அவரின் வேதனையை அது வெளிப்படுத்துகிறது.
நாட்டில் என்று நல்லாட்சி நடக்குமோ அன்று தான் அவர் அந்த ஓவியத்தை விற்பனைக்குக் கொண்டு வருவார் என நம்பலாம். அது வரையில் அந்த ஓவியம் அவர் அலுவலகத்தில் தொங்கிக் கொண்டுதான் இருக்கும்.
அடுத்த பொதுத்தேர்தல் வரும் போது நாம் தேர்ந்தெடுப்பது குரங்குகளாக இருக்கக் கூடாது! தவளைகளாக இருக்கக் கூடாது! மனிதர்கள் தான் நமக்குத் தேவை. அதுவும் மனித நேயம் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றம் நாட்டுக்காக! நட்டுக் கழன்றவர்களுக்காக அல்ல!
No comments:
Post a Comment