Thursday 7 April 2022

ஒரு இலட்சத்திற்கு அதிகமான சம்மன்கள்!


 இப்படியும் சொல்லலாம்:  சிங்கப்பூரர்கள் தவறு செய்வார்களாம்! மலேசிய காவல்துறை அதைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிப்பார்களாம்!

அதனால் தான் சிங்கப்பூர், மலேசியர்களை ஏமாளிகளாகவே அளந்து வைத்திருக்கின்றனர்! இதுவரை சிங்கப்பூர் தங்களது உரிமைகளை சிறியளவில் கூட மலேசியாவிற்கு விட்டுக் கொடுத்ததில்லை. அதில் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களது கடமையை அவர்கள் செய்கின்றனர். அதனை நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும்?

நாம் நமது கடமைகளைச் செய்யாததற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. இப்போது நம்மிடையே உள்ள கேள்வி ஏன் இவர்கள் மீது இத்தனை ஆண்டுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான். குற்றச் செயல்கள் எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது ஒரு இலட்சத்திற்கு மேலான குற்றப்பதிவுகள் தேங்கிக்கிடைக்க வேண்டிய அவசியமில்லையே!

2016-ம் ஆண்டிலிருந்து இதுவரை 143,427  சம்மன்கள்  சிங்கப்பூரர்களுக்குக் கொடுக்கப்பட்டதில் இதுவரை 34,636 சம்மன்களே செலுத்தப்பட்டிருக்கின்றன.  இன்னும் 74 விழுக்காட்டினர் சம்மன்களைக் கட்டவில்லை! சிங்கப்பூரில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியர்களை சும்மா விட்டிருப்பாளர்களா? நாமும் அவர்களைப்போல கறாராக இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை!

சிங்கப்பூரர்களுக்கு மலேசியாவிடமிருந்து இப்போது பல சலுகைகள் கிடைக்கின்றன. தங்களது கார்களுக்குக் குறைவான விலையில் பெட் ரோல் ஊற்றிக் கொள்கின்றனர். குறைவான விலையில் வீடுகளுக்கு வாடகைக் கொடுக்கின்றனர்.அதே வீடு சிங்கப்பூரில் கிடைப்பதும் இல்லை அந்த வாடகையில் வீடுகளும் இல்லை. இந்நாட்டில் குறைவான விலையில் சொத்துக்கள் வாங்குகின்றனர்.மலேசியர்களின் சொத்துக்களைக் குறைவான விலையில் சிங்கப்பூரர்கள் வாங்குவதால் மலேசியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  மலேசியா தனது தண்ணீரை மலிவான விலையில்  அவர்களிடம் விற்று பின்னர் சுத்திகரித்த நீரை அதிக விலையில் மலேசிய வாங்குகிறது.

இப்படியெல்லாம் அவர்களுக்குச் சலுகைகளைக் கொடுத்து அவர்களை மலேசிய வளர்த்துக் கொண்டு வருவதால் மலேசியர்களுக்குப் பயனில்லை. சிங்கப்பூரர்கள் பல வழிகளில் பயன் அடைகிறார்கள்.  ஆனாலும் மலேசியா,  சிங்கப்பூரர்கள் செய்கின்ற போக்குவரத்துக் குற்றங்களைக் கூட கண்டு கொள்ளாமல் அவர்களை விட்டு வைத்திருக்கிறது என்பது தான் ஆச்சரியம்!

2016-ம்  ஆண்டிலிருந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. அது தான் அரசாங்கத்தின் கொள்கை என்றால் யார் என்ன செய்ய முடியும்? ஆனால் சிங்கப்பூர் என்னும் போது அவர்கள் சுயநலவாதிகள் என்பதை மலேசியா மறந்து விடக் கூடாது என்பதில் மட்டும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!

இப்போது சம்மன்களைக் கட்டாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்கிற அறிவிப்பு கொஞ்சம் ஆறுதலளிக்கிறது! இதே கடுமை தொடர வேண்டும்!

No comments:

Post a Comment