நாகேந்திரனின் தாயாரின் கடைசி முயற்சி
நாகேந்திரனின் தாயார் தனது மகனுக்காக செய்த கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்ததாக செய்தியில் கூறுகின்றன.
நாளை (27.4.2022) காலை அவர் தூக்கிலிடப்படுவார் என்று கூறப்படுகின்றது.
நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்பிரமணியம் கடைசி முயற்சியாக அவர் செயத மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இனி தனது மகனின் மரணதண்டனையை நிறுத்த அவருக்குச் சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை என்பதாகச் சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் பிரிட்டீஷ் கோடிஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் நாகேந்திரனின் மரணதண்டனையை நிறுத்தும்படி சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். அந்த அறிவுத்திறன் குறைபாடு உள்ள இளைஞனை மன்னித்துவிடும்படி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரிச்சர்ட் பிரான்சன் எந்த நாடும் மரணதண்டனை கொடுக்கக் கூடாது என்று நீண்டகாலமாகப் போராடி வருபவர்.
ஆனாலும் சிங்கப்பூர் அரசாங்கம் எதனையும் காதுக்குள் போட்டுக் கொள்ளும் என்று தெரியவில்லை. அவர்கள் மரண தண்டனை உறுதி என்பதாகவே பேசி வருகின்றனர். அதிலேயே உறுதியாக நிற்கின்றனர்.
சிங்கப்பூர் தனது கொள்கையை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரு நாடு என்பதை உலகறியும். சிங்கப்பூருக்கு வருபவர்கள் அந்த நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.
நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் கூட அவர் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் செய்தது தவறு தான் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம். இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் குறைவான அறிவுத்திறன் உள்ளவர் என்பதாக சிங்கப்பூர் மருத்துவர்களே உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அதை கொஞ்சம் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆயுள் தண்டனையோடு இதனை முடித்திருக்கலாம்.
ஆனால் யார் சொல்லியும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு வழிகளும் இல்லை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.
நாகேந்திரனின் குடும்பத்தார் அவரைச் சந்திக்க இன்று (26.4.2022) இரண்டு மணி நேரம் அவகாசம் நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.
இன்னும் சிலமணி நேரங்களில் ஏதாவது புதுமைகள் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment