Wednesday 31 May 2023

மன அமைதியே முக்கியம்!

                                                கரப்பான்பூச்சியால் வந்த வினை!
இஸ்ராயேலில் நடந்த ஒரு சம்பவம். நகைப்புக்குரிய சம்பவம் தான் என்றாலும்  நிம்மதி இல்லாத மனிதன் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறான்  என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

இஸ்ராயேல் நாட்டில் நடந்த சம்பவம் இது.  தலைநகரில் ஓர் உணவகத்தில் பெண் ஒருவர் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அவர் கண்களுக்குக் கரப்பான்பூச்சி ஒன்று அகப்பட்டுவிட்டது.  போட்டாரே ஒரு அலறல்!  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் திகைத்துப் போயினர்.  எல்லாரும் உணவகத்தை விட்டு அலறிக்கொண்டு வெளியேறினர்!

பிரச்சனை என்னவென்று யாரும் அறிந்திருக்கவில்லை. அந்தப் பெண் கரப்பான்பூச்சியைப் பார்த்து அலறினார் என்பதைப் புரிந்துகொள்ள சில மணித்துளிகள் ஆயிற்று!

ஆமாம். உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் ஏன் ஓடினார்கள்? அது தான் இஸ்ரேல் நாட்டில் வாழ்பவர்களுக்கு உள்ள அச்சம், பீதி என்று சொல்லலாம்.  இந்த மாதிரி ஒருவர் அலறினால், சத்தம் போட்டால் அங்கு ஏதோ பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது என்கிற உளவியல் இஸ்ராயேல் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.  பயங்கரவாதம், தீவிரவாதம் என்று தொடர்ந்து அங்கு நடந்து கொண்டிருப்பதால் இப்படி ஒரு நிலைமைக்கு  இஸ்ராயேலியர்  தள்ளப்பட்டு விட்டார்கள்.

நினைத்துப் பாருங்கள். இஸ்ராயேல் மக்கள் உலகத்தையே ஆளுகின்ற மக்கள்.  அவர்கள் இல்லாமல் அமேரிக்கா இல்லை. சண்டைக்கான அனைத்து ஆயுதங்களும்  அவர்களிடம் உண்டு.  நவீன ஆயுதங்கள். எல்லாப் போர்க்கருவிகளும் அவர்களிடம் உண்டு.  உலகப் பணக்காரர்கள் என்றால் அவர்கள் தான். அவர்களை மிஞ்ச ஆளில்லை. உலகத்தையே  ஒரு சில மணித்துளிகளில் அழிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. புதுப்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தினசரி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படி எவ்வளவோ இருந்தும்  "ஆனால் பாவம்!" என்று தான் அந்த மக்கள் மீது நமக்கு அனுதாபம் ஏற்படுகிறது. பாவம் நிம்மதியாக வாழ்வதற்குத் தான் அவர்களுக்கு வழியில்லை. என்ன இருந்து என்ன பயன்? பணமே கையில் இல்லாதவன் கூட நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகிறான்!

இதனை நினைக்கும் போது,  மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்  இலஞ்சம் வாங்கும் இலஞ்சப் பேய்கள், காலாகாலமும் திருட்டுத் தனத்தையே மூலதனமாகக் கொண்டவர்கள் இவர்கள் நிலைமை எப்படி இருக்கும்?  நிம்மதி இருக்குமா? இப்படி அலறிக் கொண்டிருக்கும் சூழலோடு தான் வாழ்ந்து கொண்டிருப்பார்களோ!

ஒன்று நிச்சயம். மன நிம்மதி என்பதைத் தவிர மற்ற அனைத்தும் இவர்களிடம் இருக்கும்!

No comments:

Post a Comment