யாரோ என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். 2014-ம் ஆண்டு பலர் பலவிதம் அதுவும் குறிப்பாக ஜோஸ்யர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று உற்று உற்று நோக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் எப்படி இந்த ஆண்டை எதிர்நோக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம்.
வழக்கம் போல 'ஏதோ இன்னொரு ஆண்டு' என்று சும்மா தள்ளிவிடாதீர்கள். ஓரு புதிய ஆண்டு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனையோ பேருக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை. ஆமாம் நேற்று இருந்தார் இன்றில்லை! நாம் இருக்கிறோமே! அதுவே பெரும் புண்ணியல் அல்லவா?
இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான். நமது குடும்பங்களின் வளர்ச்சி நமக்குப் பெருமை அளிக்கும் வகையில் உள்ளதா என்பது தான்.
நாட்டி வளர்ச்சிக்கு - பொருளாதார வளர்ச்சிக்கு - நமது தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஜப்பான், சைனா, அரபு நாடுகள் என்று பல நாடுகளுக்குச் சென்று, இந்நாட்டில் தொழில் செய்ய அழைப்பு விடுக்கின்றனர். அந்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் பணத்தை இந்நாட்டில் முதலீடு செய்தால் தான் நமக்கு வேலை கிடைக்கும். நாம் பிழைக்க முடியும். முதலீடுகளைக் கொண்டு வருவது நமது தலைவர்களின் கடமை.
குடும்பத் தலைவர்களாகிய நமக்கு உள்ள கடமைகள் என்ன? நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு நமது பங்கு என்ன? வேலை செய்வது தான் நமது இலக்கா? தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டால் அத்தோடு நமது வாழ்க்கையும் இழுத்து மூடப்படுமா? அப்படி ஒரு வாழ்க்கை நமக்குத் தேவையா?
இந்நாட்டில் யார் நமக்கு வேலை கொடுக்கிறார்? சீனர்கள் தானே. ஏன் நாம் மட்டும் காலம்பூராவும் வேலை செய்பவர்களாகவே இருக்கிறோம்? அந்த சீனர்கள் போல் ஏன் நமது நிலையை நாம் உயர்த்திக் கொள்ளக் கூடாது?
இந்த புத்தாண்டில் அது பற்றி சிந்திப்போம். இந்நாட்டில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்து பெரும் முதலாளிகளாக ஆக முடியும். நாம் தொழிலாளியாகவே இருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல வில்லை. நாமே தான் அப்படி ஒரு முடிவு செய்து அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வரும் ஆண்டை வெற்றிகரமான ஆண்டாக நாம் பயன்படுத்திக் கொள்வோம். வெற்றியே நமது இலக்காக இருக்கட்டும்!
No comments:
Post a Comment