'நமக்கு ஒற்றுமை தேவை' என்பது ஏதோ இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகிறீர்களா?
நம்மிடம் எப்போதும் ஒற்றுமை உண்டு. இல்லை என்று சொல்ல முடியுமா? அன்று துன் சம்பந்தன் அவர்களால் எப்படி தோட்டங்களை வாங்க முடிந்தது என்று யோசித்தது உண்டா? நம்மிடம் ஒற்றுமை இராதிருந்தால் அது எப்படி பத்து தோட்டங்களுக்கு மேல் அவரால் வாங்க முடிந்தது?
துன் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் ஏன் அந்த ஒற்றுமையைக் கொண்டு இன்னும் பல புரட்சிகளைப் பண்ண முடியவில்லை? வங்கிகளை வாங்கியிருக்கலாம். தொழிற்சாலைகளை வாங்கியிருக்கலாம். பொருளாதார ரீதியில் இந்திய சமூகத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் முடியவில்லையே!
ஏன்? யாரிடம் ஒற்றுமை இல்லை? அட வெட்கங்கெட்ட வெண்டைகளா ஒற்றுமை எங்களிடமா இல்லை? உங்களிடம் ஒற்றுமை இல்லை என்பதால் இந்திய சமூகம் ஒற்றுமையாக இல்லை என்று சொல்வதா? நீங்கள் எந்தக் காலத்தில் ஒற்றுமையாக இருந்தீர்கள்? பங்கு போடுவதற்காகத் தானே இந்திய சமுதாயத்தையே பிரித்து வைத்தீர்கள்!
இன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் அனைத்து அவலங்களுக்கும் நீங்கள் தானே காரணம். ஏதோ நாங்கள் தான் தவறு செய்தது போல பேசுகிறீர்களே?
ஒன்று எங்களுக்குத் தெரியும். இந்தியர்களின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் தான் அன்று போலவே இன்றைய இந்திய அரசியல்வாதிகளும்! எல்லாரின் இலட்சியமுமே இன்னும் எப்படி அதிகம் சம்பாதிக்கலாம் என்கிற குறிக்கோளைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே!
நமக்கு ஒற்றுமை இல்லை என்றெல்லாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள். ஒற்றுமைப்படுத்த உங்களுக்கு வக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். இந்த சமுதாயம் எப்போதுமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. இப்போது இருக்கிற சில வெற்றிகள் கூட எங்களது ஒற்றுமையால் தான்.
நீங்கள் -தலைவர்கள் - எந்தக் காலத்திலும் ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். சும்மா எங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள். தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் இருந்து இந்த சமுதாயத்தை உயர்த்த என்ன வழி பாருங்கள். பணம் பணம் என்று அலையாதீர்கள்.
இருக்கும் ஒற்றுமையையும் குலைத்தை விடாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment