நமது நாட்டின் கறிபாப் உலக அளவில் புகழ்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத் தரவரிசையில் இந்த பலகாரம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நான் சிரம்பானின் உள்ள சென்பால் பள்ளியில் எனது கலவியை ஆரம்பித்த போது இந்த கறிபாப் எனக்கு அறிமுகமானது. தமிழர் ஒருவர் ஒரு நீண்ட மூங்கிலால் செய்யப்பட்ட கூடையில் இந்த பலகாரத்தை சுமந்து கொண்டு வருவார். பள்ளி இடைவேளையில் நாங்கள் வாங்கிச் சாப்பிடுவோம். அற்புதமாக இருக்கும். அதன் உள்ளே உருளைக்கிழங்கும் ஒரு சிறிய துண்டு கோழி இறைச்சியும் இருக்கும். அது போதும். வீடு போய் சேரும்வரை பசி எடுக்காது! அது தானே நமக்குத் தேவை?
அதன் விலையை இப்போது ஞாபத்திற்குக் கொண்டுவர முடியவில்லை என்றாலும் ஐந்து காசாகத்தான் இருக்க வேண்டும். கிடைப்பதோ பத்து காசு - ஐந்து காசு கறிபாப் ஐந்து காசு ஐஸ் தண்ணீர். காலை சிற்றுண்டி முடிந்தது!
அந்தப் பெரியவர் அதன்பின்னர் சிரம்பான் பேரூந்து நிலையத்தில் தொடர்ந்து கறிபாப் விற்றுக் கொண்டிருப்பார். "சத்து மாக்கான் டுவா மவ்" என்று கூவி கூவி விற்றுக் கொண்டிருப்பார்! அதாவது ஒன்று சாப்பிட்டால் இரண்டு கேட்பீர்கள் என்பது அதன் பொருள்
ஆரம்ப காலத்தில் தமிழர்கள் தான் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். சிரம்பானில் இன்றளவிலும் இந்த வியாபாரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கறிபாப், ஓமப்பொடி, வறுத்த கச்சான், வடை எல்லாமே உண்டு. ஆனால் இந்த கறிபாப் மட்டும் வெவ்வேறு வடிவங்களில் பல கலவைகளில் வெளி வருகின்றன. சீனர்கள், மலாய்க்காரர்கள் புதுமைகளைப் புகுத்திவிட்டதினால் வந்த மாற்றங்கள் இவை. எனக்கென்னவோ தமிழர்கள் செய்கின்ற கறிபாப்புக்குத்தான் முதலிடம்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் அந்த காலகட்டத்திலேயே ஏதாவது விசேஷம் என்றால் கேக் மற்றும் பல்வகைப் பலகாரங்கள் செய்து தருவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் சீனர்கள் கேக் வியாபாரம் செய்வதைப் பார்த்ததில்லை. நம்முடைய பிரச்சனை எல்லாம் நமது வியாபாரங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதை தவிர்த்துவிட்டோம். காரணம், "நான் பட்ட கஷ்டத்தை எனது பிள்ளைகள் படக்கூடாது" என்கிற நொண்டிச் சாக்கால் ஒன்றும் இல்லாமல் போனோம்!
எந்த ஒரு வியாபாரமும், அது மிகச் சிறிய அளவாக இருந்தாலும், அதனை விட்டுவிடக் கூடாது என்பதை நாம் சீனர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அங்கு ஒரு வருமானம் வருவதை ஏன் விடவேண்டும்? அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். ஒரு வேளை அதனை அவர்கள் பெருந்தொழிலாக மாற்றி அமைக்கலாம், அன்றோ?
எல்லாச் சிறிய தொழில்களும் அடுத்து பெரிய தொழில்களுக்கான பாதையைப் போட்டுத்தரும். கறிபாப் சிறிய தொழில் அல்ல. இன்று அது இல்லாத இடமே இல்லை. சாதாரண வியாபாரிகள் தொட்டு பெரும் வியாபாரிகள் வரை ஒங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment