நாம் அதிகம் அரசியல் பேசுபவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு! அது உண்மையா?
மலாய்க்காரர் அரசியல் பேசினால் அவர்களுக்கு ஆதாயம். கல்வியிலே சலுகை, வியாபாரத்தில் இன்னும் வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கும். சீனர்கள் அரசியல் பேசினால் பொருளாதாரம் உயர்த்தப்படும். இதில் பிரச்சனைக்கு உரியவர்கள் இந்தியர்கள் தான்.அதுவும் குறிப்பாகத் தமிழர்கள். அரசியல் பேசினால் அதிகம் பேசுகிறார்கள் என்பார்கள். கோச டப்பாக்கள் என்பார்கள். நாம் என்ன தான் பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாத போது ஆள்பவர்கள் என்ன செய்வார்கள்?
நாம் என்ன தான்பேசினாலும் அது குடிகாரன் பேச்சு என்பதாக மாறிவிடும். நம் குரல் ஒரே குரலாக மாறுவதில்லை. ஆயிரம் பேரும் பேசுவார்கள் ஆயிரம் கருத்துக்களைச் சொல்லுவார்கள். ஆளாளுக்குப் பேசுவார்கள். கடைசியில் என்ன தான் சொல்ல வருகிறோம் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. சொல்ல வந்த கருத்தும் எங்குப் போய் சேர வேண்டுமோ அங்குப் போய் சேருவதில்லை.
நாம் சொல்ல வருவதெல்லாம் ஒரு கருத்தை மட்டும் தான். நாம் அனைவரும் ஒரே கருத்தைத் தான் பேசுகிறோம். அதைத்தான் வலியுறுத்துகிறோம். ஆனால் ஒரே குரலாக ஒலிக்கவில்லை. அஞ்சடியில் பேசுகின்ற பேச்சாக மாறிவிடுகிறது!
எந்தக் குறையும் இல்லாமல் ஏகப்பட்ட கட்சிகளை வைத்திருக்கிறோம். தலைமை தாங்குகிறவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். எப்படியாவது அமைச்சர் பதவியை எட்டிவிட வேண்டும் என்கிற ஆசை தான். மக்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற எண்ணம் யாருக்கும் இல்லை.
இப்படியே ஆளுக்கு ஆள் பேசியே கடைசியில் நாம் என்ன நினைத்தோமோ அது போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. இதைத்தான் வெற்று அரசியல், வெத்துவேட்டு அரசியல் ஒரு பயனும் இல்லாத அரசியல் என்கிறோம்.
நாம் அனைவரும் ஆளாளாலுக்குப் பேசுவதைவிட நமது குரலாக ஒரு தலைவர் ஒலிக்கட்டும். நமக்கு எந்தக் காலத்திலும் தலைவர் பஞ்சம் இருந்ததில்லை. நமது கருத்தை அரசாங்கத்திடம் போய் ஒரு குழுவினராகச் சென்று கூற வேண்டிய கருத்தைக் கூறட்டும். எல்லாரும் அவரவருக்குத் தனிபட்ட முறையில் வெளியே இருந்து கத்திக்கொண்டு இருப்பதைவிட நமது சார்பில் யாராவது பேசட்டும்.
இப்போது நமது குரல் அரசாங்கம் வரை கொண்டு செல்ல யாருமில்லை. நாம் அரசியலில் செல்லாக்காசுகள். ஒத்த குரலாக ஒலிக்காதவரை நாம் ஒதுக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்போம்.
அரசியல் பேச வேண்டும் ஆனால் அளவாக இருக்கட்டும். ஒரே குரலாக ஒலிக்கட்டும். அதே பிழைப்பாக இருக்க வேண்டாம்! வேறு வேலைகளும் நமக்குண்டு!
No comments:
Post a Comment