Saturday 10 September 2016

கேள்வி-பதில் (30)


கேள்வி

விஞ்ஞானக் கல்வியில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்களே!


பதில்

உண்மைதான்! இளம் ஆய்வாளர்கள் போட்டியில் உலக அளவில் பல விருதுகளை  வாங்கிக் குவிக்கின்றனர். நமது வாழ்த்துகள்!

குறிப்பாக நமது தமிழ்ப்பள்ளிகளின் விஞ்ஞான ஆசிரியர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் கடுமையான உழைப்பை நாம் போற்ற வேண்டும்.

தேசியப் பள்ளிகள் சாதிக்க முடியாததை தமிழ்ப்பள்ளிகள் சாதிக்கின்றன.

இந்தச் சாதனைகளை தேசியப்[பள்ளிகள் சாதித்திருந்தால் இந்நேரம் பள்ளிப்பாடப் புத்தகங்களில் அவர்களின் அருமை பெருமைகளைப் போட்டு மலேசிய மாணவர்கள் அனைவரையும் படிக்க வைத்திருப்பார்கள்! தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பதால் எந்தச் சலனமும் இல்லை! அதற்குப் பதிலாக பொறாமைதான் பளிச்சிடுகிறது!

தாய்மொமொழிப் பள்ளிகள் இனங்களிடையே வேற்றுமைகளைத் தான் வளர்க்கின்றன என்பதாக அரசியல் அரைவேக்காடுகள் அலறுகின்றன! அப்படிச் சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தாய்மொழிப்பள்ளிகளின் கல்வி தேர்ச்சி விகிதம், சாதனைகள் அனைத்தும் அவர்களைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்க வைக்கின்றன. அதனாலேயே தேவையற்ற இந்த அலறல்கள்!  தேசியப் பள்ளிகளில் ஒரு இந்திய மாணவரை பல மலாய்க்கார மாணவர்கள் சேர்ந்து தாக்குகின்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. அது மட்டுமல்லாமல் மலாய் ஆசிரியர்கள் இந்திய மாணவர்களைக் காலணியால்  அடிக்கின்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன!  மாணவர்களை "இந்தியாவுக்குப் போ!, சீனாவுக்குப் போ! என்று சொல்லப்பபடுகின்ற நிலையும் உருவாகியுள்ளது! பல இன மாணவர்கள் கல்வி கற்கின்ற தேசியப் பள்ளிகளில் ஆசிரியர்களே இன ஒற்றுமையைக் குலைப்பவர்களாக இருக்கின்றனர்.  தரமற்றக் கல்வியைக் கொடுப்பதில் தேசியப்பள்ளிகளே முதன்மை வகிக்கின்றன! இவர்கள் தான் தாய்மொழிப்பள்ளிகள் இன வேற்றுமையை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடுகின்றனர்!

எந்தவொரு அரசாங்கத்தின் ஊக்குவிப்பும் இல்லாமல் நமது  தமிழ்ப்பள்ளிகள் செய்கின்ற சாதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன.

சமீபத்தில் சுராபாயா , இந்தோனேசியாவில் நடபெற்ற இளம் ஆய்வாளர் போட்டியில் புலோ ஆக்கர் தமிழ்ப்பள்ளி தங்கப்பதக்கத்தையும், காஜாங் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கத்தையும், மெந்தகாப் தமிழ்ப்பள்ளி வெண்கல பதக்கத்தையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தன..

 குறிப்படத்தக்க ஒன்று: மூன்று விருதுகளைப் புலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி தட்டிச் சென்றது.. அவைகள்: 1) இளம் ஆய்வாளர்களுக்கான ஒட்டுமொத்த சிறந்த விருது, 2) இளம் ஆய்வாளர்களுக்கான தங்க விருது. 3) இளம் ஆய்வாளர்களுக்கான  கொரிய நீதிபதியின் சிறப்பு விருது.  விருதுகள் பெற்ற புலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நமது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.

இந்த நேரத்தில் இந்தச் செய்தியும் சொல்லப் பட வெண்டும். சென்ற  ஆண்டு (2015) ஹாங்காங்கில் நடைபெற்ற உலக அளவிலான இளம் ஆய்வாளர்களுக்கானப் போட்டியில் 6 பதக்கங்களைப் பெற்று வாகை சூடிய இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியையும் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களும் நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.

இதற்கு முன்னரும் சில  தமிழ்ப்பள்ளிகள் இது போன்ற உலக அளவிலான ஆய்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கின்றனர்.

அனைவரையும் நாம் வாழ்த்துகிறோம். ஆய்வுகளில் ஆர்வம் காட்டிய மாணவர்களையும் வாழ்த்துகிறோம். அதே சமயத்தில் தங்களது கடும் உழைப்பினைத் தந்து பள்ளிகளுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த ஆசிரியப் பெருமக்களையும் நாம் வாழ்த்துகிறோம். காரணம் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் பெருமைகள் கிடைக்க வாய்ப்பில்லை.

வாழ்த்துகள்!







!

No comments:

Post a Comment