Wednesday 21 September 2016

கேள்வி - பதில் (31)


கேள்வி

காவேரி நீர்ப்பிரச்சனையில் ஓர் இளைஞனின் தீக்குளிப்பு  ஏற்புடையதா?


பதில்

எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தீக்குளிப்பு என்பது சாதாரணமானதல்ல. . ஒரு கொடூரமான சாவு.  பார்க்கபோனால் இது போன்ற தீக்குளிப்புக்களை திராவிடக்கட்சிகள் சில ஆண்டுகளாக வளர்த்துக்கொண்டு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவுக்காக எத்தனை பேர் செத்தார்கள், கருணாநிதிக்காக எத்தனை பேர் செத்தார்கள் என்பதையெல்லாம் இவர்களின் சாதனைகளாக இவர்கள் நினைக்கின்றனர். இறந்த பிறகு அந்தக் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் கொடுத்து மற்றவர்களையும் இது போன்ற செயல்களைத் செய்யத் தூண்டுகின்றனர்.

ஆனால் இளைஞன் விக்னேஷ் அந்தப் பட்டியலில் வருபவன் அல்ல. அவன் உண்மையான இனப்பற்று உள்ளவன். அவனின் இனப்பற்றை தவறான முறையில் காண்பித்திருக்கிறான். அது அவன் செய்த பிழை.

வேறு ஒரு கோணத்திலும் இதனை நாம் பார்க்க வேண்டும். தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகின்றனர். அந்த மாநிலத்தில் அதனை அங்குள்ள அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கின்றன.. திரைப்படத் துறையினர் அவர்களை ஆதரிக்கின்றனர். ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ அனைவரும் ஒருமித்த குரலில் தமிழகத்தை எதிர்க்கின்றனர்.

ஆனல் தமிழக நிலையோ வேறு! யாரும் எவரும் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவில்லை. எவன் செத்தால் எங்களுக்கு என்ன என்று இங்குள்ள ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நினைக்கின்றன. இதில் வேறு கர்நாநாடக ஆளுங்கட்சி தமிழக்த்தில் உள்ள கன்னடர்களைத் தாக்கக் கூடாது என்பதாக முதல்வருக்குக் கடிதம் எழுதுகிறது! இது தமிழரகளைக் கிண்டல் செய்வதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தில் ஒரு இயலாமை நிலவுகிறது. காவேரி நீர் யாருக்குக் கிடைக்கவில்லையோ அந்த விவசாயிகள்  குரல் எழுப்புகிறார்கள். அந்த விவசாயிகளுக்காக ஒரு சில தமிழர் அமைப்புக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கிகின்றனர். அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்தால் அவர்களுக்குச்  சிறை வாசம்! எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!

அரசாங்கமும் கர்நாடகத்திற்கு எந்த பதிலடியும் கொடுக்க முடியவில்லை! இங்குள்ள தமிழர்கள் குரல் எழுப்பினால் அதனையும் தடுத்து நிறுத்துகிறது அரசு.

இன உணர்வு இல்லாதவனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இன உணர்வு உள்ளவனால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு வகையில் தனது எதிர்ப்பைக் காட்ட நினைக்கிறான்.

ஆக, தமிழர்கள் தங்களது உணர்வுகளை எந்த வகையிலும் வெளிப்படுத்த முடியவில்லை. தமிழக  அரசின் ஆதரவும் இல்லை! தமிழன் என்ன செய்வான்? எங்கே போவான்?

இப்படி ஒரு இயலாமை நிலையில் ஒரு சில தமிழர்கள் இது போன்ற - தீக்குளிப்பு    சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலைமையில் தான் விக்னேஷ் போன்றவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

எந்த வகையிலும் இந்தத் தீக்குளிப்பை நாம் நியாயப்படுத்த முடியாது. இந்தத் தீக்குளிப்பினால் கர்நாடகாவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஏன்? தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை!

நமக்குத் தமிழன் என்னும் உணர்வு இல்லை என்றால் எந்தத் தீக்குளிப்பும் எதையும் அசைக்க முடியாது.  தமிழனுக்கு அப்படி ஒரு உணர்வு வரக்கூடாது என்பதற்காக தமிழரல்லாதார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் தான் நம்மை  திசைத்திருப்ப எத்தனையோ வழிகளைக் கையாளுகின்றார்கள்.  கள்ளுக்கடை, சினிமா, தொலைக்காட்சி என்பவைகளெல்லாம்  நமது தமிழ் உணர்வை மழுங்களுக்கடிக்க அவர்களுக்கு உதவுகின்றன.

வாழ்க! வளர்க! வையகம் போற்றும் தமிழினம்!




No comments:

Post a Comment