Tuesday 27 September 2016

கபாலி: ஆளப்பிறந்தவண்டா...!


கபாலியில் ரஜினி பேசுகின்ற வசனம் இது! "ஆளப் பிறந்தவண்டா, நாங்க!" இதனை ஏதோ ஒரு சினிமா வசனமாக நினைத்து குப்பையில் வீசிவிட்டுப் போய்விட்டீர்களா?

அது தான் இல்லை. அது சும்மா பொழுது போக்குக்காக சொல்லப்பட்ட சினிமா வசனம் இல்லை. நம்மைப் பார்த்து சொல்லப்பட்ட வசனம். இந்தத் தமிழ் சமுதாயத்தைப் பார்த்து சொல்லப்பட்ட வசனம்.

ஆளப்பிறந்த தமிழர் இனம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்னும்  வயிற்றெரிச்சலில்  சொல்லப்பட்ட  வசனம். உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்த இனம் இன்று அநாகரீகம் சொல்லிக் கொடுக்கும் இனமாக மாறிப்போனதே என்னும் அவலத்தைச் சுட்டிகாட்டுகின்ற வசனம்.

உலகத்தின்  பல பகுதிகளை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். நாம் அந்த நாடுகளை - வெள்ளையனைப் போல - ஆளவில்லை. ஆனால் வர்த்தகத்தின் மூலம் நமது ஆளுமையை வலுவாக வைத்திருந்தோம்.

அந்த ஆளுமை, அந்த அதிகாரம் எங்கே போனது? எங்கே பறிபோனது? யாரிடம் பறிகொடுத்தோம்?
பரவாயில்லை! போனதைப் பற்றிப் பெசுவதில் பயனில்லை.

அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?  அது தான் நமது கபாலியே சொல்லிவிட்டாரே: நாங்க, ஆளப்பிறந்தவண்டா! எதனை, ஆளப்போகிறோம்? வர்த்தகம் ஒன்று தான் நமக்குக் கை கொடுக்கும்.  நம்மை ஆள வைக்கும். நம்மை வாழ வைக்கும். வர்த்தக பலம் என்பது மகத்தான சக்தி. அது தான் நாம் ஆளப்பிறந்தவர்கள் என்பதற்கான் ஆக்க சக்தி!

முதலில் நமது நாட்டில் நமது வர்த்தகத் திறனை அதிகரிப்போம். சிறிய தொழில்,  பெரிய தொழில் என்னும் பாகுபாடு இல்லாமல் எல்லாத் தொழிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுவோம்.

ஒரு சிலர்,  நாம் சிறிய இனம் நம்மால் எப்படிப் பெரிய அளவில் தொழிலில் பெரும் வெற்றி அடைய முடியும் என்றெல்லாம் கணக்குப் போடுகிறார்கள். தொழில் செய்வதற்குச் சிறிய இனம் பெரிய இனம் என்பதெல்லாம்  அவசியமில்லை.

இன்று MYDIN பேரங்காடியைப் பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம்.  கிட்டத்தட்ட மலேசிய நாடெங்கும் முன்னுறு கிளைகளுடன் இயங்குகின்ற ஒரு பெரிய நிறுவனம்.. அதன் உரிமையாளர் யார்? சிறுபன்மை வட இந்திய முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்.. அதனை ஆரம்பித்தபோது அவரின் இலக்கு இந்தியர்கள் தான். ஆனால் இன்று அது அசைக்க முடியாத கோபுரம் ஆகிவிட்டதே! அதே போலத் தான் GLOB SILK STORE என்னும் மாபெரும் நிறுவனம். அதனை ஆரம்பித்தவர்  குஜாராத்தி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியர். . சைக்களில் துணிகளைச் சுமந்து கொண்டு தோட்டம் தோட்டமாக, வீடு வீடாகச் சென்று துணிகளை விற்றவர். அன்றைய நிலையில் அவருடைய இலக்கு இந்தியர்கள் தான். ஆனால் இன்று  அது உலகளவில் பேசப்படும் ஒரு நிறுவனம்.  ஏன்? ஆர்.கே.நாதன் ஒரு தமிழர். சிறுபான்மை சமூகமான நம்மைச்  சார்ந்தவர். மிகச்சாதாரண நிலையிலிருந்து இன்று உயர்ந்த, உலகிலேயே உயர்ந்த, உயர்ந்த கட்டங்களைக் கட்டிக் கொண்டிருப்பவர். உலகையே வலம் வருகிறார்!

இதில் சிறிய, பெரிய என்ன? இன்று தமிழர்களில் பலர் இந்த சிறுபான்மை சமுகத்தைச் சார்ந்துதான் தங்களது தொழில்களைத் தொடங்கினர்.. ஆனால் இன்று எல்லாச் சமுகத்திற்கும் பயன்படும்படியான அளவுக்குத் தங்களது தொழில்களை வளர்த்துவிட்டனர்.

இந்தோனேசியா 26 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் சீனர்கள் சுமார் மூன்று (3) விழுக்காடு தான். இதில் என்ன அதிசயம்? இந்த மூன்று விழுக்காடு சீனர்கள் தான் இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்! ஆக, 97 விழுக்காடு இந்தோனேசிய மக்கள் இந்த மூன்று விழுக்காட்டினரை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்!

பொருளாதாரம் என்பது அவ்வளவு சக்தி வாய்ந்தது.  கபாலி சொல்லுவது போல நாம் ஆளப் பிறந்தவர்கள். ஆள்வது நமது உரிமை. பொருளாதாரத்தை ஆள வேண்டும். . தொழில்களை  ஆள வேண்டும். மாபெரும் தொழில்களை ஆள வேண்டும். பெரும் பெரும் கட்டடங்களை ஆள வேண்டும். சுரங்கங்களை ஆள வேண்டும். சீனி ஆலைகளை ஆள வேண்டும். கடல்களில் ஓடும் கப்பல்களை ஆள வேண்டும். வானத்தில் பறக்கும் வானூர்திகளை ஆள வேண்டும்.

நாம் ஆளப்பிறந்தவண்டா ......! என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும். யார் காட்டுவார்?  நானும், நீங்களும், ஏன். அனைத்துத் தமிழருக்கும் இதில் பங்கு உண்டு.  தமிழனத்தை உயர்த்துவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து தான் உழைக்க வேண்டும். நம் குடும்பத்திற்கு நாம் உழைத்தால் போதும். அவரவர் குடும்பத்தின் மேம்பாட்டிற்கு அவரவர் உழைத்தால் போதும். நமது தமிழர் சமூகம் முன்னேறுவதில் எந்தத்  தடையும் இல்லை.

அரசாங்கம் கொடுக்கின்ற வர்த்தக வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். யார் யாருக்குக் கிடைத்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதீர்கள். உங்களுக்குக் கிடைக்கிறதா என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கிடைக்காவிட்டால் ஏன் கிடைக்கவில்லை, எங்கே தவறு செய்தோம் என்று கண்டுபிடித்து மீண்டும் அந்தத் தவறுகளைக் கலைந்து மனு செய்யுங்கள். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். தொடர் முதற்சிகளை சலிக்காமல் தொடர்ந்தால் எதுவும் நகரும்!

கபாலில் மூலம் ப.ரஞ்சித் எழுதி ரஜினி பேசும் அந்த வசனம் "ஆளப்பிறந்தவண்டா...!" என்பது யருக்கோ அல்ல. உலகில் உள்ள தமிழர் அனைவருக்கும் தான். உயர்வு தாழ்வு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழர் அனைவரும் ஓர் உயரிய வாழ்க்கை வாழ வேண்டும். இன்று உலகெங்கிலும் மாபெரும் தொழில் சாம்ராஜ்யங்களுக்கு அதிபதிகள் யூதர்கள்.  அந்த இடம் தான் நமது குறிக்கோளாக இருக்க வெண்டும். முதலில் நமது நாட்டில் உள்ள சீனர்கள் தான் நம் கண்முன் இருப்பவர்கள்.இவர்களின் தொழில் நெளிவுசுழிவுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தை எழுதிய ப.ரஞ்சித் சும்மா பொழுது போக்குக்காக அதனை  எழுதவில்லை என்பதை நாம் உணரவேண்டும். வசனத்தைப் பேசிய ரஜினி அதனை பொழுது போக்குக்காக அவர் பேசவில்லை.  தமிழர் முன்னேற்றம் என்பது ஒரு கூட்டு முயற்சி. நம் அனைவரின் முயற்சியும் இதில் இருக்க வேண்டும். ரஜினியோ, ரஞ்சித்தோ எந்த முயற்சியும் இல்லாமல்  அவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்துவிடவில்லை. எல்லாம் தனிமனித உழைப்புத் தான்.

வாருங்கள்! நாம் ஆளப்பிறந்தவர்கள் என்பதை இந்த உலகிற்குக் காட்டுவோம்!

நாம் "ஆளப்பிறந்தவண்டா ....!"










No comments:

Post a Comment