Monday 5 September 2016

ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை!


என்ன தான் மலேசியத் தமிழர்கள் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்தாலும் அந்த எதிர்ப்பை ஏதோ ஆங்காங்கே ஒரு சிறிய அளவில் தான் காட்ட முடிந்ததே தவிர பெரியதொரு எதிர்ப்பைக் கொண்டு வரமுடியவில்லை! அந்த அளவுக்குத் தமிழர்கள் அடக்கி வைக்கப் பட்டியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை! தமிழர்களை ஒரு பொருட்டாகக் கூட அரசாங்கம் மதிக்கவில்லை.

அரசாங்கத்தின் கொள்கையெல்லாம் ஒன்றே ஒன்று தான். அரசாங்கத்தைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் நல்ல உறவுகள் உண்டு. நல்ல உறவுகள் மூலம் வர்த்தகத்தைப் பெருக்க வேண்டும். மற்றபடி  சொல்லும்படியான வேறு காரணங்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்கின்ற ஒரே ஒரு காரணமே அவர்களுக்குப் போதும்! இனப்படுகொலை என்பதெல்லாம் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை வைத்துத்  தான் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கப்படும்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நமது இனத் தலைவர்களின் கொள்கையைப் பொருத்தவரை அரசாங்கத்தின் கொள்கை எதுவோ அதுவே அவர்களின் கொள்கை! மிக உயரியக் கொள்கை!  ஏதாவது கேள்வி கேட்டால் அந்தோ! அவர்களின் பதவி பறி போய் விடும் என்னும் பயம் அவர்களுக்கு உண்டு! அரசாங்கத்தில் ஏதோ ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என நினைப்போர், அமைச்சர் பதவி இல்லையென்றால் எனக்குத் தூக்கம் வராது என்று நினைப்போர், அடுத்த அமைச்சர் பதவி எனக்குத்தான் என்று நினைப்போர் - இப்படியாகப் பலர் அரசாங்கப் பதவிக்காக வரிசைப் பிடித்து நிற்போர் - நிச்சயம் வாயைத் திறக்கமாட்டார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

அரசாங்கக் கொள்கை என்பது ஒன்றே ஒன்று தான். ராஜபக்சேயின் வருகைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எழுதங்கள்.  கொட்டை எழுத்துக்களில் போடுங்கள். உங்கள் எதிர்ப்பை தமிழ் பத்திரிக்கையோடு வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலப்  பத்திரிக்கைகளில் போட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! தமிழ்ப்பத்திரிக்கைகளை எந்த மலாய்க்காரரோ சீனரோ படிக்கப் போவதில்லை!  அது உலகச் செய்தியாகவும் ஆகப்போவதில்லை! அதனால் அதனைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை!  அதே சமயத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!  இது தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

ஆர்ப்பாட்டம் என்றால் எப்படிச் செய்வது? ஒருவனைக் கைது செய்தால் 'சும்மா வேண்டுமென்றே' அவனைப் பிடித்து யாரும் நெருங்க முடியாதவாறு சில வாரங்களாவது  அவனைச் சிறையில் போடுவது. ஏதோ ஐ.எஸ். பயங்கரவாதியைப் போல நடத்துவது!வேலைச் செய்கின்ற நபராக இருந்தால் அவன் வேலை பறி போகும்! குடும்பம் நடு வீதிக்கு வரும்! இவைகளெல்லாம் தமிழருக்காகவே விசேஷமாக செய்யப்படுபவை! எல்லாமே ஒரு பயமுறுத்தல்! மற்ற இனத்தவரிடம் இதெல்லாம் செல்லுபடியாகாது! செய்யவும் மாட்டார்கள்! தமிழனை என்ன செய்தாலும் கேட்க நாதியில்லை என்னும் நிலைமை!

இவைகளை எல்லாம் மீறியும் சில எதிர்ப்புக்கள் நடந்தன! நடக்கின்றன!  ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை! உள்ளே மண்டபத்தில் பிருமாண்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.  மண்டபத்தின் வெளியே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவரின் உருவ பொம்மை எரிக்கப் படுகின்றது1 மாநாட்டின் ஏற்பாட்டாளரான அனமைச்சர் வெளியே வந்து ஆர்ப்பாட்டாளர்களைச் சந்திக்கிறார். "ராஜபக்சேவை நாங்கள் அழைக்கவில்லை! கொரிய அரசாங்கம் தான் அவருக்கு அழைப்பை விடுத்தது. அவர்களின் அழைப்பை ஏற்றுத்தான் அவர் இங்கு வந்தார்! இப்போது அவர்  நாட்டில் இல்லை! நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்!" என்று புதிய கதையைச் சொல்லுகிறார்!  ராஜபக்சே மண்டபத்தில் உள்ளே உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்! அவருக்கு அழைப்பை விடுத்ததும்  மலேசிய அரசாங்கம் தான் என்பதும் தெரியும்!

இதனிடையே அமைச்சர் ஒருவரை வழியனுப்ப விமான நிலையம் சென்றிருந்த இலங்கைத் தூதர் இப்ராஹிம் அன்சாரைத் தாக்கியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், காவல் துறையினர் இவர்களை விசாரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜபக்சே தமிழர்களின் எதிரி என்பது அரசாங்கத்திற்குத் தெரியாதது அல்ல. இலட்சக்கணக்கானத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ஒரு கொடுங்கோலன் என்பது அரசாங்கத்திற்குத் தெரியாத புதிய செய்தி அல்ல. அப்படி ஒரு மாபாவியை இருகரம் நீட்டி வரவேற்பதும், அவருக்கு ராஜ மரியாதை செய்வதும், மாநாட்டில் உரையாற்ற வைப்பதும் ஒரு சாதாரணமான  நிகழ்வாக  நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

இங்குள்ள  தமிழர்களைக்  கேவலப்படுத்தும் ஒரு சம்பவமாகவே நமக்குத் தோன்றுகிறது.  ஒரு மூன்றாவது பெரிய இனமாக இருக்கும் தமிழர்களை - இந்தியர்களை -  அவமதிக்கப்படுகின்ற ஒன்றாகவே நாம் இதனை எடுத்துக் கொள்ளுகிறோம்.

வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் தொடரக் கூடாது என்பதே அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். ஏற்கனவே விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை. இனி மேலாவது இது தொடராது என நம்புவோம். வாழ்க, வெல்க தமிழினம்!












No comments:

Post a Comment