Friday 23 September 2016

தமிழுக்குச் செய்கின்ற அநீதி!


நான் சின்னத்திரை ரசிகன் அல்ல. ஏன்? பெரிய திரை ரசிகன் கூட அல்ல! அவைகளைப் பார்க்கக் கூடிய பொறுமை எனக்கு இல்லை! அப்படியே பார்த்தாலும் ஒரு பத்து நிமிடம் தாக்குப் பிடிப்பேன். பிறகு தூக்கம் வந்துவிடும்!

சமீபத்தில் திடீரென, எதைச்சையாக சின்னத்திரை நாடகமான "தெய்வமகள்" ஓடிக்கொண்டிருந்த போது நான் ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. அம்மா, அப்பாவிடம் சொல்லுகிறார்: நம்ம குழந்தை என்னமாய் பாடுகிறான்! எங்க,  அப்பாவுக்குக் கொஞ்சம் பாடிக்காட்டு? குழந்தை பாடுகிறான். பாலர் பள்ளிகளில் பாடுகின்ற ஒரு பாடல். அது ஒரு ஆங்கிலப் பாடல்!

நான் அது ஒரு தமிழ்ப் பாடலாய் இருக்கும் என நினைத்து ஏமாந்து போனேன்!

பாலர் பள்ளிக்குச் செல்லுகின்ற ஒரு குழந்தை ஆங்கிலத்தில் பாடுகிறான் என்றால் என்ன அர்த்தம்? பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைக் கொடுங்கள் என்று ஆங்கிலக் கல்வி நிலையங்களுக்கு இலவச விளம்பரம்  கொடுக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?  மறைமுகமாக தமிழர்கள் தமிழைப் படிக்க வேண்டாம் ஆங்கிலம் படியுங்கள் என்று தமிழர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள் என்று தானே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது?

கொஞ்சம் கவனியுங்கள். தமிழைப் படித்தவர்கள். தமிழாலேயே வாழ்பவர்கள். தமிழை வைத்துப் பிழைப்பவர்கள். . வசனம் எழுதுபவர், இயக்குனர் அனைவருமே தமிழால் வாழ்பவர்கள்.   பல இலட்சம் தமிழர்கள் பார்க்கின்ற ஒரு நாடகத்தில் எவ்வளவு துணிச்சலாய்  தமிழைப் புறந்தள்ளுகின்றனர்.!

இந்நேரத்தில் வேறொன்றும் எனது ஞாபத்திற்கு வருகின்றது. நான் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் தீவிர இரசிகன். அவருடைய "தீபம்" மாத இதழை ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து படித்து வந்தவன்.. அந்த மாத இதழில் ஒவ்வொரு மாதமும் தொழில் அதிபர்களைப் பேட்டி எடுப்பார்கள். அதில் ஒரு கேள்வி ஒவ்வொரு தொழில் அதிபரிடம் கேட்கப்படுகின்ற  - அவர்களுக்குச் சம்பந்தமில்லாத - ஒரு கேள்வி:  "ஒர் சிலர் சொல்லுவது போல தமிழ் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?"  கேள்வி கேட்கப்படும் தோரணை அவர்களை எதிர்மறையாகவே பதில் சொல்ல நேரிடும். ஆசிரியர் நா.பா. வுக்குத் தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தமிழில் பண்டிதர் பட்டம் பெற்ற அவருடைய இதழிலேயே இப்படி ஒரு கேள்வி!

இதனை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் தமிழ் மொழியைத் தமிழ் மண்ணிலிருந்து  அகற்றுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாகவே தொடரப்பட்டிருக்கின்றன. ஆனால் சமீகாலமாகத்தான் நமக்கு அது பெரியளவில்  புரிய ஆரம்பித்திருக்கிறது..

இப்போது அச்சு ஊடகங்கள் மட்டும் அல்ல, சின்னத்திரை, சினிமா, தொலைக்ட்சிகள் அனைத்தும் தமிழுக்கு எதிராகவே செயல் படுகின்றன. அவர்கள் பேசுகின்ற மொழியே அதற்குச் சான்று பகர்கின்றது.

இந்த அநீதிகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.!

அதுவும் விரைவில் வரும்!

No comments:

Post a Comment