Friday 16 September 2016

காவேரி நீர்ப் பிரச்சனைத் தீருமா?


காவேரி நீர்ப் பிரச்சனையைப் பற்றி எழுதவதற்கே நமக்குக் கூச்சமாகத் தான் இருக்கிறது.

ஒரே நாடு.  உலக அளவில் இந்தியர் என்னும் ஒரே இனம். கர்நாடகா, தமிழ் நாடு இரண்டு மாநிலங்களும் ஒரே நாட்டில் உள்ள  மாநிலங்கள். வெவ்வேறு நாட்டில் உள்ள மாநிலங்கள் அல்ல. ஒரு மாநிலத்தில் கன்னடர்களும் இன்னொரு மாநிலத்தில் தமிழர்களும் வாழுகின்ற மாநிலங்கள்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் இந்தக் காவேரி நதிநீர் பிரச்சனை இப்போது பூதாகாரமாக வெடித்து தமிழர்களைத் தாக்கும் அளவுக்கு எங்கோ போய்விட்டது. காவேரி நதியிலிருந்து குறிப்பிட்ட அளவில் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர வேண்டும் என்பது நீதிமன்ற ஆணை. ஆனால் கர்நாடக அரசு நீதிமன்ற ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை

இப்போது இந்த மோதல் கர்நாடக மக்களிடமிருந்து வரவில்லை. சில ரௌடிகளை வைத்துக்கொண்டு இந்த மோதல்களை ஆரம்பித்து வைத்தவர்கள் அரசியல் கட்சியினர். ஆளுங்கட்சியினர்  ஒரு பக்கம் தங்களது அரசியல் பலத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம். இன்னொரு பக்கம் எதிர்கட்சியினர் தங்களது பலத்தை கூட்டுவதற்கான ஒரு முயற்சி.

உண்மைச் சொன்னால் இந்த நதிநீர் பிரச்சனை என்பது கர்நாடக அரசியல்வாதிகளின் தங்களது பலத்தைக் காட்டுவதற்கான ஒரு முயற்சி. அவர்களுக்கு இந்தக் கலவரம்  என்பது யார் பலசாலி "காங்கிரசா! பா.ஜ.க.வா" என்னும் ஒரு பலப்பரிட்சை! எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளே பொறுப்பு.

தமிழக எண் கொண்ட கார்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர். பேரூந்துகளையும் கனரூந்துகளையும் எரித்து சாம்பலாக்கியிருக்கின்றனர்.  தமிழர்களை அடித்திருக்கின்றனர்; நிர்வாணப் படுத்தியிருக்கின்றனர். தமிழர்கள் பலர் அவமானத்திற்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றனர்.

இது வரை தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவில் தமிழர்கள் தாக்குதல் பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவருடைய டசட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது குறைந்தபட்சம் அ.தி.மு.க. தொண்டர்களோ அவர்களுடைய தலைவரைப் போலவே  மௌனம் காக்கின்றனர். அதே போல தி.மு.க. தலைமையும் சரி அவர்களது தொண்டர்களும் சரி எந்த விதமான சலனமும் இல்லை. இந்த இரு கட்சிகளிலும் தமிழர்கள் இல்லை என்பது இப்போது நமக்குப் புரிகிறது!

கர்நாடக முதல்வர் தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்! தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிராக எந்த ஒரு சம்பவமும் இதுவரை நிகழவில்லை!

ஆமாம், இந்த நதிநீர் பிரச்சனையில் உலகத்தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? வன்முறையை  வன்முறையால்  தீர்வு காண முடியாது என்பது உண்மை தான். அதற்காகத் தமிழன் அடி வாங்கிக்கொண்டே இருக்க வேண்டுமா என்பது தான் நமது கேள்வி. ஒரு பக்கம் ஆந்திரா, ஒரு பக்கம் கேரளா, ஒரு பக்கம் கர்நாடகா - எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவனுக்க அடி விழுகிறது.  இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!

நம்மைப் பொறுத்தவரை இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். தமிழர்கள் ஒரு பலவீனமான அரசை ஆட்சியில் வைத்திருக்கிறார்கள். ஒன்று அவர்கள் செயல்பட வேண்டும்.அல்லது மக்களைச்செயல்பட விட வேண்டும்.

எதற்குமே இலாயக்கில்லாத ஒரு அரசை பதவியில் அமர்த்தினால் தமிழன் அடி வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை! ஒன்று அடி அல்லது மடி!

No comments:

Post a Comment