Friday 19 May 2017

கேள்வி - பதில் (45)


கேள்வி

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று மீண்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவே?

பதில்

கேள்விகள் மக்களால் எழுப்பப்படவில்லை. இந்த முறை அவரே அந்தக் கேள்வியை எழுப்பினார். அவர் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இது நாள்வரை தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு எழாமல் இருந்திருக்கலாம்.. ஆனால் ஏனோ அப்படி ஓர் ஆசை இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கிறது! அவரே முதலில் அந்தக் கருத்தை வெளியிட்டுவிட்டு இப்போது அது பற்றி பேச வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்!

அப்படி ஒரு ஆசை அவருக்கு ஏற்படக் காரணம் ஜெயலலிதாவின் மரணமாக இருக்கலாம்.  அல்லது கருணாநிதி முடங்கிப் போனதும் ஒரு காரணமாக  இருக்கலாம்.

இப்போதைக்கு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் காலியாக இருக்கிறது. சொல்லும்படியான தலைவர்கள் யாரும் இல்லை. அப்படியே இருந்தாலும் அனைவருமே ஜெயலலிதாவைப் போலவே, கருணாநிதியைப் போலவே ஊழலில் சிக்கியவர்கள்! அதனால் தான் நாங்கள் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று அனைவருமே போட்டிப் போட்டுக் கொண்டு சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள்! அம்மாவின் ஆட்சி என்றாலே புரிந்து கொள்ள வேண்டும்! அது ஊழல் ஆட்சி தான்! அப்படியே ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தாலும் அதுவும் அப்பாவைப் போலவே ஊழல் ஆட்சி தான்!

இப்போதைய வெற்றிடம் ரஜினிக்குச் சாதகம் என்பது உண்மை. ஆனால் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்னும் குரல் தமிழக இளைஞர்களிடையே இப்போது ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் உண்மை. நிச்சயமாக ரஜினி இன்னொரு கருணாநிதியாகவோ, ஜெயலலிதாகவோ இருக்கமாட்டார் என்றும் நம்பலாம். அவருடைய நேர்மையைப் பற்றி நாமும் கேள்விப் பட்டிருக்கிறோம்.

ஆனால் அரசியல் என்பது அனைவரையுமே மாற்றிவிடும்! ஒரு நேர்மையான மனிதர் என்று சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். கூட அவருடன் இருந்த ஊழல்வாதிகளால் மாறிப்போனாரே!  ஏன், ஜெயலலிதா மீது அவருக்கு இருந்த மயக்கத்தினால் இன்று தமிழகமே குடிமயக்கத்தினால் மயங்கிப்போய் இருக்கின்றதே! ஒரு நேர்மையான மனிதரால் ஒரு நேர்மையற்ற அரசியலைத் தானே கொடுத்துவிட்டுப் போக முடிந்தது! அன்று அவர் செய்த பிழையினால் இன்று தமிழகம் தலைநிமிர முடியாமல் தடுமாறுகிறதே!

தொடர்ச்சி..........கேள்வி-பதில்  (46)

No comments:

Post a Comment