Friday, 5 May 2017
நீங்கள் கஞ்சனா....? அப்படியே இருங்கள்..!
நீங்கள் கஞ்சனா.....? இருந்துவிட்டுப் போங்கள்! உங்களை நான் பாராட்டுகிறேன்! அது உங்கள் வீட்டுப் பணம்; அதனை செலவழிப்பது என்பது உங்கள் விருப்பம். நீங்கள் தான் அதன் உரிமையாளர். உரிமையாளர் என்ன விரும்புகிறாரோ அதனை அவர் செய்துவிட்டுப் போகட்டும்! நாம் ஏன் அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டும்?
ஒரு நண்பரை எனக்குத் தெரியும். வாலிப வயதிலேயே அனைவரும் அவரைக் கஞ்சன் என்றார்கள்! பிறகு அவர் பெயரே கஞ்சனாக மாறிவிட்டது! சாகும் வரை அவர் கஞசன் தான்! அவருடைய பெயரோடு சேர்த்துக் கஞ்சன் என்று சொன்னால் தான் அவர் யார் என்று மற்றவர்களுக்குப் புரியும்!
ஆனால் அவர் இறக்கும் போது அவருக்குக் கடன் இல்லா சொந்த வீடு இருந்தது. அவர் பிள்ளைகள் எந்த அளவுக்குப் படிக்க முடியுமோ அந்த அளவுக்குப் படிக்க வைத்திருந்தார். அதில் ஒருவர் 'டிப்ளோமா" பெறும் அளவுக்குப் படித்திருந்தார். அவர் பிள்ளைகள் அனைவரும் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள்.. எல்லாரிடமும் கார்கள் இருக்கின்றன.. சாதாரணத் தோட்டத் தொழிலாளர் தான் அவர். அவரைக் கேலி பேசிய பலருக்கு சொந்த வீடுகள் இல்லை! அப்படியே இருந்தாலும் வங்கியில் கடன் உள்ள வீடுகள் தான்!
என்னுடைய உறவு முறையில் ஒருவர். அவர் மகா மகாக் கஞ்சப் பிரபு! தோட்டத் தொழிலாளி தான். கஞ்சப் பிசினாரி என்பார்களே அதன் அர்த்தம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவரைப் போன்றவர்களாகத்தான் சொல்லுவார்களோ? எதற்கும் அசராதவர். தோட்டத் தொழிலாளியாக இருந்த போதே அவரிடம் அனைவரும் வட்டிக்குக் கடன் வாங்குவார்கள்! உறவு முறைகள் யாரும் அவரை நெருங்க முடியாது! சீனி என்கிற அல்லது சர்க்கரை என்று சொன்னாலும் சரி அவரின் குடும்பத்தினர் கண்ணால் கூடப் பார்த்ததில்லை!
அவருக்குப் பெரிய மனிதர் வாழ்கின்ற ஒரு தாமானில் வீடுகட்ட ஒரு நிலம் வைத்திருந்தார். அந்த இடத்திலேயே ஒரு வீடும் கட்டிக் கொண்டார். காய்கறிகள் பயிரிட வீட்டைச் சுற்றி போதுமான நிலம் இருந்தது. காய்கறிகள் பயிரிட்டார். பக்கத்தில் இருந்த பெரிய மனிதர்கள் எல்லாம் அவரது வாடிக்கையாளர்கள். அங்கும் அவருக்கு ஒரு வருமானம். அவரது பிள்ளைகள் நன்கு படித்து அரசாங்க உத்தியோகத்தில், வெளி மாநிலங்களில் இருக்கிறார்கள். வீட்டில் தொலைபேசி இல்லை; கைப்பேசி இல்லை. தொலைக்காட்சி பெட்டி இல்லை. கார் இல்லை. சனிக்கிழமைகளில் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் வரட்டும், வராவிட்டால் "போங்கடா!, போங்க!" அவ்வளவு தான்! எப்படியோ அவர்களே வருவார்கள்!
இப்படிப்பட்ட மனிதரிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது என்ன? அருகில் இருக்கும் ஒரு சீனர் கடையில் காலையில் போய் காப்பி குடிப்பது! எப்படி? "அங்குப் போனால் பத்திரிக்கை படித்து விடுவேன், ஓசியில்! இன்னொன்று அங்கு சீனர்கள் வருவார்கள். அவர்களிடன் எங்கு நிலம் வாங்கலாம், எங்கு வீடு வாங்கலாம் என்று அவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுவேன்! தமிழனிடம் போனால் அரசியல் தான் பேசுவான்! முன்னேறனும்'னா சீனப் பயல்களிடம் தான் பேசனும்!" இன்னும் அவரிடம் அந்தத் தேடல் இருக்கிறது! வயதோ 90 ருக்கு மேலே! வியாதி என்று ஒன்றுமில்லை. அப்படியே வந்தாலும் வியாதிக்குத் தீனி போடாமலே வியாதியையே கொன்று விடுவார்!
இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. குறிப்பாக நாம் நினைவில் கொள்ள வேண்டியவை ஒரு சில, இவர்களுக்குச் சொந்த வீடுகள் உள்ளன. பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கிறார்கள். கையில் பணம் எப்போதும் இருக்கும். வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் புதிதாக வேறு ஒரு வருமானத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள்! இவர்கள் அரசியல்வாதிகளை நம்புவதில்லை!
இப்போது சொல்லுங்கள். கஞ்சர்கள் கேலிக்குறியவர்களா? இல்லவே இல்லை! இவர்களால் தான் நமது பொருளாதாரம் இப்போது இருக்கிற நிலைமையில் இருக்கிறது! இல்லாவிட்டால் அதுவும் பூஜியம்! அவர்கள் மற்றவர்கள் பணத்தை திருடவில்லை; கொள்ளையடிக்கவில்லை! அது அவர்கள் பணம். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதனை அவர்கள் செய்யட்டும்.
அதனால்: நீங்கள் கஞ்சனா? அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்! யாருக்கு என்ன நஷ்டம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment