Monday 1 May 2017

கொலைக் கைதி எம்.பி.ஏ.பட்டம் பெற்றார்!


படித்து பட்டம் பெறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதே போல நாம் எங்கிருந்தாலும் படிப்பு  என்பது ஒரு தடையல்ல!.

இந்த முறை காஜாங் சிறைச் சாலை ஒரு கொலைக் கைதியை ஒரு எம்.பி.ஏ. பட்டதாரியாக மாற்றி இருக்கிறது!

அவரது அறியாத வயதில் - 14 வயது - கொலைக் குற்றவாளியாக 2005 - ம் ஆண்டு  காஜாங் சிறைக்குள் புகுந்த அந்த சிறுவன், ஆதம், (உண்மைப் பெயர் அல்ல)  இன்று 2017 ஆண்டு, மலாயாப் பல்கலைக் கழகத்தில்  நடந்த பட்டமளிப்பு விழாவில் வர்த்தக நிர்வாகத்  துறையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். ஆதாம் திறந்த வெளி பல்கலைக்கழக (ஒப்பன் யூனிவர்சிட்டி) மாணவர் ஆவார்.. அவருக்குக் கல்வித் தாகம் இன்னும் தணியவில்லை. அடுத்து முனைவர் பட்டத்துக்கும் தன்னைத் தயார் செய்து வருகிறார்.

தனது குடும்பத்தினரை ஒருசேரப்  பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக ஆதம் கூறுகிறார். பட்டமளிப்புக்கு முன்னர் தனது குடும்பத்தினரோடு ஒன்று சேர்ந்து உணவருந்தியது மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்கிறார் ஆதம்.

தன்னுடைய விடுதலை என்பது எப்போது என்பதை அறியாத நிலையில் - ஒரு நாள் தான் விடுதலையாகி வந்ததும் - தனது தாய்க்கும் குடும்பத்துக்கும் உதவியாக ஏதேனும் தொழில் செய்து காப்பாற்றுவேன் என்கிறார் அவர். மற்றவரிடம் நான் வேலை செய்தால் தான் ஒரு கொலைக் குற்றவாளி என்கிற முத்திரை எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும் என்கிறார்.


இப்போது முப்பது வயதாகும் ஆதம்  சபா மாநிலத்தைச்  சேர்ந்தவர்.இவரை போன்றே இன்னும் 33 பேர் பட்டதாரிகள் ஆவதற்காக காஜாங் சிறையில் வரிசையில் நிற்கின்றனர். அவர்களும் தங்களது இலட்சியத்தில் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்! நல்ல குடிமக்களாக அவர்கள் வாழ வேண்டும் என்பதே நமது ஆசையுங் கூட!

இந்த நிமிடத்தில் நாம் ஒருவரைப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். தினம் தினம் தூங்கி தூங்கி எழுந்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை அன்று அந்தச் சிறையில் துவான் அஜிப் என்கிற ஒரு சிறை அதிகாரி "சும்மா தூங்கிக் கொண்டிருக்காதே, உன்னுடைய எதிர்காலத்தை நினைத்து உன்னை வளர்த்துக் கொள்ளப் பார்" என்று கூறிய அந்த அறிவுரை தன்னை மாற்றி அமைத்துவிட்டது என்கிறார் ஆதம்.

ஒரு காடு எரிய ஒரு தீக்குச்சி போதும்!

No comments:

Post a Comment