Sunday 7 May 2017

இன்றைய பொழுது இனிய பொழுதாகட்டும்!

இன்று காலையில் நான் முதலில் சந்தித்த நபர் என்னைப் பார்த்து முதலில் கேட்ட கேள்வி: நல்லா இருக்கிங்களா...?

நான் கொடுத்த பதில்:  ஓ! அற்புதமாக இருக்கிறேன்! நீங்கள்...?

எனது பதிலில் அவருக்குத் திருப்தி இல்லை போலும்!  ஏற இறங்க பார்த்துவிட்டு ஒன்று பேசாமல் போய்விட்டார்!

அவர் என்னிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை!  காலை நேரம். அப்போது தான் விழித்தெழுந்து வெளி உலகைப் பார்க்கின்ற நேரம்.

நாம் எப்படி இருந்தால் என்ன?   நாம் நல்லா இருக்கிறோம் என்னும் நினைப்பாவது நமக்கு இருக்க வேண்டும் அல்லவா? நாம் நல்லாத்தான் இருக்கிறோம் என்று சொல்லுவதைக் கூட சிலர் விரும்பவதில்லை!  அப்படி சொன்னால் கூட ஒரு சிலர் "கண்பட்டு விடும்" என்று  நினைக்கிறார்கள்!

மற்றவர்கள் கண்பட்டு விடுமாம்! அப்படிச் சொல்லுவதால் அன்றைய தினம் பூராவும் அல்லல் பட வேண்டி வருமாம்!

அடாடா...! மனிதர்களில் சிலர் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்! நமக்கு வராத எண்ணங்கள் எல்லாம் அவர்களுக்கு வருகின்றனவே!

காலை நேரத்தில் நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். நல்லதையே சிந்திக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். போகின்ற போக்கில் நல்ல வார்த்தைகளையே விதைக்க வேண்டும். அப்படியே அன்றைய தினம் முழுவதும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதின் மூலம் நிச்சயமாக நமக்கு நல்லதொரு திருப்தி ஏற்படும். இன்றைய தினத்தில் நாம் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறோம் என்று மனைதிலே ஒரு மகிழ்ச்சி!

இப்படியெல்லாம் மற்றவர்களை நாம் மகிழ்ச்சிப் படுத்துவதால் நமக்கு என்ன லாபம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்ன லாபம்?  மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதன் மூலம் நாமும்  மகிழ்ச்சி அடைகிறோம். நமக்கும் மனதிலே ஒரு தெம்பு ஏற்படுகிறது.  நம்மாலும் நாலு பேருக்கு உதவியாக இருக்க முடிகிறதே என்னும் நம்பிக்கை ஏற்படுகிறது.

இன்று மனிதர்களிடம் மகிழ்ச்சி என்பது அருகிவிட்டது. எந்நேரமும் ஏதோ ஒரு பிரச்சனை. ஏதோ ஒரு புலம்பல். ஏதோ ஒரு கஷ்டம். ஏதோ ஒரு நஷ்டம். ஆமாம்! அது என்ன? அந்த ஒரு மனிதருக்குத் தானா கஷ்டம், நஷ்டம் எல்லாம்? கஷ்டம், நஷ்டம் என்பதெல்லாம் எல்லாருக்கும் பொதுவானது தான்.

பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை! பிரச்சனைகளோடு தான் மனிதன் வாழ வேண்டும்! பிரச்சனைகளாகவே இருக்கின்றனவே என்று மூலையில் முக்காடு போட்டா உட்கார்திருக்க முடியும்? நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள், நல்ல செய்திகள் எல்லாமே நல்ல....நல்ல..... என்று யோசியுங்கள் அனைத்தும் நல்லதாகவே முடியும்!  அது தான் நல்ல வார்த்தைகளுக்குள்ள சக்தி!

இன்றைய பொழுது மட்டும் அல்ல ஒவ்வொரு பொழுதையும் இனிய பொழுதாகட்டும்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment