Thursday 25 May 2017

எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்!


எவரஸ்ட் சிகரத்தை ஏறியவர்கள் பலர் இருக்கிறார்கள்; பல  இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் என்று எடுத்துக் கொண்டால் முதன் முதலில் எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டவர்கள் மலேசியத் தமிழர்களான எம்.மகேந்திரேனும், என். மோகனதாஸ் அவர்களும் தான்.

இந்தச் சாதனை அந்த இரு தமிழர்களால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1997 ஆண்டு, மே மாதம், 23-ம் தேதி, காலை மணி (மலேசிய  நேரம்) 11.55 க்கு மகேந்திரன் முனியாண்டி அந்தச் சிகரத்தில்  தனது முதல் காலடித்தடத்தைப் பதித்தார். அவருடன் சென்ற மோகனதாஸ் நாகப்பன் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து 12.10 க்கு மகேந்திரனுடன் சேர்ந்து கொண்டார். அதுவே எவரஸ்ட் சிகரத்தின் தமிழனின் முதல் காலடித்தடம்! அந்த எவரஸ்ட் சிகரம் சுமார் 8,848 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த இருவருமே அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மலேசிய மலை ஏறும் பத்து பேர் கொண்ட குழுவில் இடம் பெற்ற மலையேறிகள். அந்தக் குழுவில் மலயேறி வென்றவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்.


                          டத்தோ மோகனதாஸ்       டத்தோ மகேந்திரன்

இந்த இருபது ஆண்டு நிறைவு  விழாவினை இந்திய விளையாட்டு மன்ற அறவாரியம் அந்த வெற்றியினை நினைவு கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தது. எவரஸ்ட் சிகரத்தில் முதல் காலடியைப் பதித்த எம்.மகேந்தரன், இரண்டாவது தடம் பதித்த என்.மோகனதாஸ்  ஆகியோருடன் மற்றும் அந்தக் குழுவில் இடம் பெற்ற மற்றவர்களுக்கும் சிறப்புக்கள் செய்யப்பட்டன.

வென்றவர்கள் தமிழர்கள் என்பதாலேயே இவர்களின் சாதனை அரசுத் தரப்பில் ஏற்றுக்கொள்ளப் பட வில்லை! இவர்களுக்குக் கிடைத்த டத்தோ விருது கூட எதிர்கட்சி ஆட்சியுலுள்ள பினாங்கு மாநிலம் கொடுத்த பின்னர் தான் கூட்டரசு அரசாங்கம் கொடுக்க முன் வந்தது! பினாங்கு மாநில அரசங்கம் 2010 - ம் ஆண்டு டத்தோ விருது கொடுத்து இருவரையும் கௌரவித்தது. அதன் பின்னர் தான் 2011-ல் கூட்டரசு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது!

இன்றையச் சூழலில் எத்தனையோ வேதனைகளச் சுமந்து கொண்டு தான் நாம் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் சமய அடிபபடையில் இயங்கும் அரசாங்கம் நமது சாதனைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

நமது சாதனைகள் சரித்திரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. அதனால் நம்முடைய சாதனைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே இன்றைய நமது நிலை. அதனையே இந்திய விளையாட்டு மன்ற அறவாரியம் செய்கிறது. நாம் அவர்களைப் பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment