Monday 15 January 2018

தோல்வியில் முடிந்த நட்சத்திரக் கலை விழா!


சமீபத்தில் நடந்த நட்சத்திரக் கலை விழாவைப் பற்றி பல்வேறு கருத்துக்கள்,பல்வேறு சர்ச்சைகள்,பல்வேறு அபிப்பிராயங்கள் - என்று இப்படி இழுத்துக் கொண்டே போகலாம்!

இதில் ஒன்று "மக்கள் ஓசை"  நாளிதழின் கடுமையான விமர்சனம்! அதற்கும் நமக்கு ஒரு பதில் கிடைத்து விட்டது. இந்த நட்சத்திரக் கலை விழா சம்பந்தமான விளம்பரங்கள்  அவர்களுக்குக்  கொடுக்கப் படவில்லையாம்! அவர்களும் சில ஆயிரங்களை இழந்திருக்கலாம்! அதனால் வந்த கோபம்! ஆக, தங்களுக்கு இலாபம் இல்லை என்றால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை.  ஆனால் அவர்கள் அதனைச் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையாக மாற்றிக்கொண்டார்கள்! அவ்வளவு தான்! தனக்கு இலாபம் இல்லையென்றால் அது சமுதாயப் பற்று! இது தான் தமிழனின் நிலை!

இந்த நிகழ்ச்சி வெற்றி பெறாதது எனக்கு மகிழ்ச்சியே. நமது சமுதாயம் நடிகர்களுக்குப் பால் அபிஷேகம் செய்வது, அவர்களுக்காகத் தற்கொலை செய்வது, தமிழர் சமுதாயத்திற்குத் தலைமை தாங்க சினிமா நடிகர்களைத் தேடுவது - இவைகளெல்லாம் தமிழனைத் தலைகுனிய வைக்கிறது. நம்மைக் கேவலப் படுத்துகிறது. சினிமா நடிகர்களைத் தமிழன்  புறக்கணிக்கின்றான் என்றால் அதனைப் பொன் எழுத்துக்களால் பொறிக்கைப்பட் வேண்டிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

மேலும் இன்னோரு ஐயமும் நமக்குண்டு. தமிழ் நாட்டில் தேர்தல் காலத்தில் வாக்குச் சேகரிக்க சினிமா நடிகர்களைப் பயன் படுத்தும் பழக்கும் கட்சிகளுக்கு உண்டு. அதனை இங்கேயும் பரிட்ச்சித்துப்  பார்க்கிறார்களோ என்று ஐயுறுகிறோம்.  விமான நிலையத்தில் ஓர் ஆளுங்கட்சி அரசியல்வாதி போய் நடிகர்களை   வரவேற்க வேண்டிய அவசியம் என்ன? ஓர் சராசரி சினிமா ரசிகன் இப்படிச் செய்வதையே நாம் எதிர்க்கிறோம். ஆனால் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இப்படித் தரம் கெட்டுப் போய் அவர்களை வரவேற்பது என்பது இந்தச் சமுதாதயத்திற்கும் தலைகுனிவு தான்! மேலும் ரஜினி  வந்தால்...கமல் வந்தால்... உங்களின் வாக்கு வங்கி  அதிகரித்து விடுமா? 

மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமானால்  அதற்காக உழைக்க வேண்டும். நமது உரிமைகளைக் கேட்டு நமக்கு வாங்கித் தர வேண்டும். நீங்கள் எதுவுமே செய்வதில்லை. எங்களின் தாய் மொழியைக் கூட, உங்களின் பதவி காக்க, தானம் செய்து விட்டீர்கள். நாங்கள் ஏன் உங்களை ஆதரிக்க வேண்டும்? 

உள்ளுர் அரசியல் நிலவரம் தெரியாமல், ம.இ.கா. வுக்கு ஆதரவாக செயல்பட்டதன் விளைவு தான் இந்தக்கலை விழாவின் தோல்வி!

இந்தத் தோல்வியை நான் மனமாற வரவேற்கிறேன். சினிமா மோகம் நமக்கு வேண்டாம். சினிமா நட்சத்திரங்களின் மீதும் மோகம் வேண்டாம்.  இனி சினிமா நட்சத்திரங்கள் இங்கு வந்தால் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடாதீர்கள். அவர்கள் வரட்டும், போகட்டும்! நாம் பின்னால் ஓட வேண்டாம்!

No comments:

Post a Comment