Wednesday, 3 January 2018
சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி..?
நெகிரி செம்பிலான், சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பற்றி நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் (முதலைமைச்சர்) துணைக்கல்வி அமைச்சர், கமலநாதனிடம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். மந்திரி பெசார் இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுப்பதற்குக் காரணம் அது அவரின் ரந்தோ சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு பள்ளி! தேர்தல் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளில் அக்கறை என்பது தானாகவே வரும்! அது மந்திரி பெசாருக்கும் வந்திருக்கிறது!
ஆனாலும் மந்திரி பெசார் கேட்பது போலவே நாமும் கமலநாதனைப் பார்த்துக் கேட்கிறோம். இந்தத் தாமதத்திற்கான காரணம் என்ன? மந்திரி பெசாரே காரணம் என்ன என்கிறார். காரணங்கள் தெரியவில்லை என்கிறார்! இந்த இணைக்கட்டடப் பிரச்சனையில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்நோக்கினால் 'அந்தப் பிரச்சனையை என்னிடம் கொண்டு வாருங்கள், நான் தீர்த்து வைக்கிறேன்' என்கிறார் மந்திரி பெசார். ஆனாலும் கமலநாதன் இது வரை வாய்த் திறக்கவில்லை! மந்திரி பெசாரிடம் கமலநாதன் எந்தப் பிரச்சனையையும் கொண்டு செல்லவில்லை. அப்படி என்றால் எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகத்தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. மந்திரி பெசாரும் அப்படித்தான் நினைத்திருப்பார்.
பொதுவாக இன்றைய நிலையில் தமிழ்ப் பள்ளிகளில் இது போன்ற கட்டடப் பிரச்சனைகள் - பூர்த்தி ஆகாமல், அரைகுறையாக, இழுத்துப் பறித்துக் கொண்டும் - இருப்பதற்கு அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் துணைக்கல்வி அமைச்சர் கமலநாதன் தான்! வேறு யாரும் பொறுப்பல்ல!
ஒரே காரணம் அவர் தான். அவர் தான் தமிழ்ப் பள்ளிகளைக் காக்க வந்த காவலன்! இவருக்கு முன்னர் இந்தப் பதவியில் யாரும் இருந்ததில்லை.அப்படி இல்லாத நிலையிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமான பாதிப்பில்லை. ஆனால் என்று துணைக்கல்வி அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு அவர் பதவி ஏற்றாரோ அன்றிலிருந்தே தமிழ்ப்பள்ளிகளுக்குப் பல விதமான ஆபத்துக்கள் வரத் தொடங்கி விட்டன. தமிழ் ஊடகங்கள், தமிழ் அமைப்புக்கள் தமிழ் ஆர்வலர்களும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை! கோடிக்கணக்கில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பணம் அரசாங்கம் ஒதுக்கியும் அந்தப் பணம் பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை.
அம்னோ என்ன சொல்லுகிறார்களோ அதற்கு மட்டும் தலை ஆட்டும் அவர் தமிழ் சார்ந்த அமைப்புக்கள் சொல்லுவதை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை! பதவி அவன் கொடுத்தாலும் ஓட்டு போடுகிறவன் நாம் தானே!
சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி மட்டும் அல்ல இந்தப் புதிய ஆண்டில் பல பள்ளிகள் பிரச்சனைகள எதிர்நோக்குகின்றன. பள்ளி ஆண்டு தொடங்கும் போதே ஆர்ப்பாட்டம், கண்டனம் என்று பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்றன! இவை அனைத்தும் கமலநாதனின் கமலபாதத்திற்குஅர்ப்பணம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment