Thursday, 4 January 2018
இது என்ன கலாச்சாரம்?
ஏதோ ஒரு சில சமயங்களில் காலை நேரத்திலேயே நம்மைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன.
ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பல இல்லங்கள் நாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. அவர்களின் சேவையை நாம் பாராட்டத்தான் வேண்டும். அப்படி ஒன்றும் அது ஓர் எளிதான சேவை அல்ல என்பது அங்குப் போய் வருபவர்களுக்குத் தெரியும்.
அதில் ஒரு சேவை இல்லம் ஆங்காங்கே மரப்பெட்டிகளால் ஆன சிறு சிறு கூடாரங்களை அமைத்து நம் வீடுகளில் பயன்படுத்தாதப் பொருட்களை அந்தக் கூடாரங்களில் போட்டு வைத்தால் அவர்கள் அதனை மறுபயனீடு செய்ய எடுத்து செல்வார்கள். அதில் உள்ள சிரமங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. இருந்தாலும் தங்களது இல்லங்களின் வளர்ச்சிக்காக அவர்கள் அதனை செய்தே ஆக வேண்டும் என்னும் நிலையில் இருக்கிறார்கள்.
நான் வேறு ஒரு வீடமைப்புப் பகுதியில் உள்ள ஒரு கூடாரத்தில் எங்கள் வீட்டில் உள்ள - பயன்படுத்துக் கூடிய நல்ல நிலையில் உள்ள - துணிமணிகளை அங்குப் போட்டு வைப்பது வழக்கம், சமீபத்தில் நாங்கள் இருக்கும் பகுதியிலேயே அந்த இல்லத்தினர் ஒரு கூடாரத்தை அமைத்திருக்கின்றனர். அமைத்து ஓர் ஆறு மாதங்கள் இருக்கும்.
இன்று காலை அங்கு போன போது ஓர் ஆச்சரியம் காத்துக் கிடந்தது! அந்தக் கூடாரத்தைச் சுற்றிலும் பயன்படுத்தாத உணவு பொருட்கள் கொட்டிக் கிடந்தன. சுருக்கமாக, எல்லாக் குப்பைகளையும் அங்குப் போட்டு நிறைத்து விட்டார்கள். அதுவும் அல்லாமல் அந்தக் கூடாரத்தினுள்ளேயும் குப்பைகளைப் போட்டு அடைத்து விட்டார்கள்.
அறிவில்லாத ஜென்மங்களா, இப்படியா செய்வீர்கள்? ஓர் ஏழையை நம்மால் காப்பாற்ற முடியாது. அவர்களைக் காப்பாற்றும் இந்த இல்லங்களுக்கு நாம் ஆதரவும் கொடுப்பதில்லை. ஏதோ நம்மால் ஆன சின்ன உதவிகளைக் கூடவா செய்யக் கூடாது? அந்த அளவுக்குக் கூடவா நமக்குக் கல்வி அறிவு இல்லை? அல்லது பொது அறிவு இல்லை? உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை ஏன் உபத்திரவு படுத்த வேண்டும்?
இவர்களை நினைக்கும் போது மனம் நொந்து போகிறது. முன்பு நான் பயன்படுத்திய அந்தக் கூடாரம் சீனர்கள் வாழுகின்ற ஒரு பகுதி. இப்போது நான் பயன்படுத்தியது மலாய்க்காரர், இந்தியர் வாழுகின்ற ஒரு பகுதி. சீனர்களிடம் கொஞ்சமாவது அந்தப் பொது நோக்கு உண்டு. மலாய்க்காரர்- இந்தியர் இடையே ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! என்று தான் இவர்கள் திருந்துவார்களோ!
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்ன செய்வது?
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment