Tuesday 9 January 2018

என்ன கேவலமான அரசியல்!


தேர்தல் வரும் போது நமது காலில் வந்து விழுகிறார்கள்! ஐயோ! பாவம்! நமக்காகத் தொண்டு செய்ய எவ்வளவு ஆர்வதோடும், ஆசையோடும் நமது காலில் விழுகிறார்கள்! வெற்றி பெற்றப் பிறகு அவர்கள் காலில் நம்மை விழ வைக்கிறார்கள்! ஐந்து ஆண்டுகள் நமது தொகுதிப் பக்கம் தலை காட்டுவதில்லை! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காலில் விழுவது, கெஞ்சுவது, அஞ்சி அஞ்சி சாவது இதனை செய்பவர்கள் சீனர்களோ, மலாய்க்காரர்களோ அல்ல! நாம் மட்டும் தான்! 

ஒரு காலத்தில், ம.இ.கா. சார்பில், நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட  ஒரு பஞ்சாபியர் சொன்ன பொன் மொழி இது: "தமிழர்கள் தானே!  அவர்கள் நல்லவர்கள்! கள் வாங்கிக் கொடுத்தாலே போதும், நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள்!"

நான் சொல்லுவது ஐம்பது வருஷத்துக் கதை! இப்போது ஏதாவது நாம் மாறியிருக்கிறோமா? உண்மையைச் சொன்னால் இல்லை! இப்போதும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது! கிளைகள் அளவிலோ, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பீர், பிராந்தி என்று பணம் தண்ணீராகக் கரைந்து கொண்டிருக்கிறது! பொது மக்கள் என்று வரும் போது அரிசி, ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி என்று ஒரு திருவிளையாடல்!

அடாடா! என்னமாய் நமது அரசியல்வாதிகள் நமது மக்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்! இவர்களே குடிகாரர்கள் தானே! குடிகாரனுக்குக் குடிகாரப் புத்தி தானே இருக்கும்! அவனும் குடித்து மக்களையும் குடிகாரராக்குகிறான்!

ஐந்து ஆண்டுகள் வீணே காலத்தைக் கழித்து விட்டு தேர்தல் வரும் போது மீண்டும்  எந்த  முகத்தை வைத்துக் கொண்டு மக்களைச் சந்திப்பது? அதனால் கவர்ச்சி அரசியலைப் பயன் படுத்துகிறார்கள்! தமிழ் நாட்டிலிருந்து சினிமா நடிகர்களைக்  கொண்டு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்!  இப்படிச் செய்வதால்  இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறார்கள்!  ஏன் இந்த வீண் வேலை என்று தான் நாம் கேட்கத் தோன்றுகிறது! உங்கள் கடமையைச் செய்ய எது தடையாக இருந்தது? சீனர், மலாய்க்காரர்கள், அவர்கள் சமுகத்திற்கு,  செய்யும் போது உங்களால் ஏன், தாழ்ந்த நிலையில் இருக்கும் இந்த இந்திய சமூகத்திற்குச்   செய்ய முடியவில்லை?  உங்களுக்குக் கல்வி அறிவு இல்லையென்றால் நீங்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? 

உங்களுடைய நடவடிக்கைகளினால் இந்த சமுதாயம் இழந்தது ஏராளம். கொஞ்ச நஞ்சமல்ல அனைத்தையும் இழந்தோம். இப்போது தமிழ்க்கல்விக் கூட கையை விட்டுப் போகும் நிலையில் இருக்கிறது. தமிழ்க்கல்விக்காக ஒரு அரசியல்வாதியும் பேசத் தயாராக இல்லை. துணிச்சல் இல்லாதவன் அரசியலுக்கு வரக்கூடாது. பொதுத் தொண்டு என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவது மகா மகா பாவம்!  அது ஒரு சாபம். ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நமது அரசியல் - குறிப்பாக ம.இ.கா. அரசியல் - மிகவும் கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது. "நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நாங்கள் சொல்ல வருவதெல்லாம் கலை நிகழ்ச்சி என்று சொல்லிப் பணத்தை வீணடிக்காதீர்கள். அந்தப் பணத்தை தமிழின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.

கேவ அரசியல் நமக்கு வேண்டாம்!





No comments:

Post a Comment