Thursday, 18 January 2018

இது ஒரு கொலை!


இது ஒரு கொலை.  மிகவும் கொடுரமான ஒரு கொலை. அலட்சியத்தின் காரணமாக நேர்ந்த ஒரு கொலை. 

நாம் எவ்வளவு பொறுப்பற்றவர்களாக அன்றாட வாழ்க்கையில் நடந்து கொள்ளுகிறோம் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம். மற்றவர்களுக்கு நாம் இடைஞ்சலாக இருக்கக் கூடாது; நம்மால் மற்றவர்களுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதை நம் வீட்டிலும் நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் நம் மண்டையில் நாம் ஏற்றிக் கொள்ளுவதுமில்லை.   எல்லாவற்றிலும் ஓர் அலட்சியம். 



  

நாம் காட்டுகின்ற அலட்சியம் காரணமாக ஓர் உயிர் அநியாமாகப் பறிக்கப்பட்டு விட்டது.

ஸ்ரீபந்தாய்,  இருபத்தோரு  அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடி ஒன்றிலிருந்து வீசப்பட்ட நாற்காலி ஒன்று ஓரு சிறுவனின் தலை மேல் விழுந்து அந்த இடத்திலேயே அவன் தாயின் கண் முன்னாலேயே  துடிதுடித்து இறந்து போனான். மூன்றாம் பாரம் படிக்கும் 15 வயது மாணவன்,  சதீஸ்வரன் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமுற்றான்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போதுதான் அடுக்குமாடி வீடுகளில் வாழ்கின்ற மக்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் வாழ்கிறார்கள் என்று நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் நடைபெறுவது இது தான் முதல் முறை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே நடந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் தப்பித்தோம். அங்கு குடியிருக்கும் மக்களும் அதனை ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதவில்லை. அடிபடும் போது தான் பிரச்சனை வெளி வருகிறது. முதலில் மேல் மாடிகளில் குப்பைகளை வீசினார்கள். இப்போது நாற்காலிகளும்  குப்பைகளாகி விட்டன. அதனால் வீசி எறிவது சர்வ சாதாரணம் என்றாகி விட்டது. ஆனால் இப்படி ஒருவர் அடிப்பட்டு இறக்கும் போது தான் பிரச்சனை விசுவரூபம் எடுக்கிறது.

ஒன்று மட்டும் உண்மை. மலேசியர்களாகிய நாம் பொறுப்பற்றவர்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் மட்டும் அல்ல; நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் நாம் பொறுப்பற்றவர்கள் என்பதைக் காட்டும். வெயிற் காலங்களில் புகை போட வேண்டாம் என்பார்கள். அப்போது தான் தாரளமாக எல்லாவற்றையும் போட்டு எரித்துக் கொண்டிருப்போம்! டிங்கி காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால் அரசாங்கம் சொல்லுகின்ற எதனையும் நாம் கேட்பதில்லை. எல்லாவற்றிலும் அலட்சியம்.

நமது அலட்சியத்தினால் ஓர் உயிரை இழந்திருக்கிறோம். வேறு என்ன சொல்ல? மகனை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


No comments:

Post a Comment