Thursday, 31 March 2022
தொழிற்சாலை மூடப்பட்டது!
Wednesday, 30 March 2022
அற்பனுக்கு வாழ்வு வந்தால்....!
Tuesday, 29 March 2022
எச்சரிக்கிறோம்! விலகி இருங்கள்!
LOW SIEW HONG
பாஸ் கட்சியிலிருந்து கடுமையான எச்சரிக்கை ஒன்று முஸ்லிம் அல்லாத மலேசியர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது!
ஒரு பக்கம் தனித்து வாழும் இந்து தாயான லோ சியு ஹொங் + அவருடைய மூன்று குழந்தைகள். இன்னொரு பக்கம் இஸ்லாமிய பாஸ் கட்சியினர்.
இஸ்லாமிய கட்சியின் எச்சரிக்கை என்பது: இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட லோ-வின் மூன்று குழைந்தைகள் மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாங்கள் அதனை எதிர்ப்போம்.. அவர்களின் மதமாற்றத்திற்காக யார் பாடுபட்டாலும் இந்நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பொங்கி எழுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்பு லோவின் மூன்று குழந்தைகளின் புகைப்படங்களைப் பத்திரிக்கைகளில் போட்டு அவர்களை அவமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை அனைத்து ஊடகங்களும் பின்பற்றுகின்றன. அது ஒரு தடை.
இப்போது பாஸ் கட்சியிடமிருந்து இப்படி ஓர் எச்சரிக்கை. மதமாற்றும் விஷயத்தில் எங்களுக்கு எந்த நியாயமும் தேவையில்லை! நீதிமன்றம், வழக்கறிஞர்கள் - அது யாராக இருந்தாலும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர். வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே அவர் தரப்பு தோல்வியைத் தழுவும் என்று அவரே முன்னறிந்துவிட்டார்! ஆக, அவர் செய்வதோ சொல்வதோ தவறு என்பது அவருக்கே தெரியும் என ஊகிக்கலாம்!
மனிதர்களால் தீர்த்துக் கொள்ளப்பட முடியாத விஷயம் என்று ஒன்று இருந்தால் அதைத் தீர்த்து வைக்க வேண்டிய இடம் நீதிமன்றங்கள் தான். நியாயம் கிடைக்கும் என்பதால் தான் நாம் நீதிமன்றம் போகிறோம்.
ஆனால் பாஸ் கட்சியினர் அதற்கும் உலை வைக்கின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தை இஸ்லாமியர் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்கின்றனர் பாஸ் கட்சியினர்.
ஒன்றை அவர்கள் உணரவில்லை. நல்லவர்கள் என்கிற ஒரு பிரிவினர் எல்லா சமயங்களிலும் இருக்கின்றனர். எல்லா இனத்தவர்களிலும் இருக்கின்றனர். நல்லவர்களுக்கு எப்போதுமே காலம் உண்டு.
சத்தியமே வெல்லும்!
Monday, 28 March 2022
புதிய கூட்டணி உருவாகுமா?
Gerakan Pejuang Nasional (GPN) - the next Ruling Party?
நாட்டில் பெரிய அரசியல் மாற்றங்கள் வருமா என்று மலேசியர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிதாக மாபெரும் கட்சியாக மாறக் கூடிய வாய்ப்புகள் டாக்டர் மகாதிரால் ஆரம்பிக்கப்பட்ட பெஜுவாங் கட்சிக்கு உண்டா என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்!
சமீபத்தில் நடைபெற்ற ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பெஜுவாங் வேட்பாளர்கள் அனைவரும் சரியான அடிவாங்கியிருக்கிறார்கள் என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல!
அவர்கள் வெகு வரைவில் எதிர்பார்க்கப்படும் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் நிலைமை என்னவாகும்? பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை! அதே அடி தான்! டெபாசிட் பறி போகும் நிலை தான் அதிகம்!
மலேசிய அரசியலில் டாக்டர் மகாதீரின் சகாப்தம் முடிந்து போன கதை. மேலும் அவருடைய வயதுக்கு அவரிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்கவும் முடியாது.
இப்போது அவர் ஓர் அகண்ட கூட்டணியை அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். அந்த கூட்டணியில் பெஜுவாங், பெர்சத்து, பியாகம் ராக்யாட், பாஸ், கெரக்கான், வாரிசான் போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு "கெராக்கான் பெஜுவாங் நேஷனல்" என்னும் பெயரில் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த கட்சிகள் எல்லாமே ஏதோ வயதானவர்களைக் கொண்ட ஒரு கட்சியாகத்தான் நமக்குத் தெரிகின்றன. டாக்டர் மகாதிர் ஓடி ஆடி கட்சிக்காக வேலை செய்யும் நிலையில் இல்லை! மற்றத் தலைவர்களும் ஏறக்குறைய அவருடைய நிலைமையில் தான் இருக்கின்றனர். இளம் இரத்தம் என்பது குறைவு. எவ்வளவு தான் பெரும் ஆளுமைகளைக் கொண்டிருந்தாலும் அடிமட்ட வேலைகளைச் செய்ய தொண்டர்கள் வேண்டும். இந்தப் புதிய கட்சியால் அத்தகைய அடிமட்டத் தொண்டர்களை ஈர்க்க முடியுமா என்பதும் ஒரு கேள்வி.
மக்களிடையே உள்ளே இன்னொரு கேள்வி. இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக வந்த டாக்டர் மகாதீர் திடீரென அரசாங்கம் கவிழ்ந்து போகும் அளவுக்கு ஏன் காரணமாக அமைந்தார்? அப்போது ஏற்பட்ட அந்த அமளி இன்னும் ஓயவில்லையே! இத்தனைக்கும் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஓர் அரசாஙத்தை அவர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவர அவரே காரணமானாரே!
வயது மூப்பின் காரணத்தால் அவர் இப்படி எல்லாம் தடம் புரண்டு போனார் என்று சொல்வதற்கில்லை. அவர் திட்டம் போட்டே செயலாற்றினார் என்பது தான் உண்மை!
டாக்டர் மகாதிர் உண்மையில் ஒரு நம்பகமான மனிதர் அல்ல. அவரால் ஆரம்பிக்கப்படும் கட்சியும் நம்பக்கூடியதாக இல்லை! அவருடன் கூட்டுச் சேர்பவர்களும் அவரைப் போன்றே ஒத்தக்கருத்து உடையவர்கள்! அவர்கள் மேல்மட்டு மக்களின் பிரதிநிதிகள்! கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் உயர்வுக்குப் பாடுபடும் அளவுக்கு அவர்கள் கீழே இறங்கி வரமாட்டார்கள்!
புதிய கூட்டணி உருவாகாது! வெறும் செய்தியாகவே போய்விடும்!
Sunday, 27 March 2022
இனத் துரோகிகள்!
Saturday, 26 March 2022
ஆசிரியர் இல்லை! வகுப்பு இல்லை!
ஆசிரியர் இல்லையாம்! அதனால் தமிழ் வகுப்பு இல்லையாம்!
அதுவும் இத்தனை ஆண்டுகள் தமிழ் வகுப்புகள் நடந்து கொண்டு வந்த ஒரு பள்ளியில் அந்தப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மாற்றப்பட்டதினால் இனி தமிழ் வகுப்பு இல்லை என்று கைவிரித்து விட்டதாம் பள்ளி நிர்வாகம்!
அதனால் சொல்லுகிறார்கள் தலை சரியில்லை என்றால் வால் தலையாகிவிடும்! கல்வி அமைச்சில் வேலை செய்கின்றவர்கள் வாலாக செயலாற்றுகிறார்கள்! அதனைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பார்த்து வியந்து போகிறார்!
இப்படி எல்லாம் முட்டாள்தனத்தை எங்காவது பார்த்திருப்போமா? நம் நாட்டில் கண்முன்னே பார்க்கிறோம். என்னமாய் பதிலை வைத்திருக்கிறார்கள்! ஆசிரியர் இல்லையாம்! அதனால் வகுப்புகள் இல்லையாம்!
அப்படியென்றால் தலைமையாசிரியரின் வேலை தான் என்ன? அவர் காலில் போட்டிருக்கும் பூட்ஸ்ஸை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாரா? ஆசிரியர் இல்லையென்றால் இனிமேல் ஆசிரியர் கிடைக்கமாட்டாரா? நாட்டில் வேறு ஆசிரியர்களே இல்லையா?
நாட்டில் ஆசிரியர் பாற்றாக்குறையா? அப்படியென்றால் கல்வி அமைச்சின் வேலை தான் என்ன? வெட்டிப் பிளக்கிறார்களோ! ஆசிரியர் பற்றாக்குறை என்பது கல்வி அமைச்சின் வேலை. ஆசிரியர் இல்லையென்றால் தலைமை ஆசிரியரின் வேலை. தலைமை ஆசிரியர் ஏன் தனது கடமையைச் செய்யவில்லை என்பது தான் கேள்வி.
ஆசிரியர் பற்றக்குறையைத் தீர்க்க சுலபமான வழி மற்ற நாடுகளிலிலிருந்து ஆசிரியர்களைத் தருவிப்பது தான். சிங்கப்பூர், இலங்கை, தமிழ் நாடு போன்ற இடங்களிலிருந்து வருவித்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கையேந்துவதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லவே!
காலங்காலமாக நம்மைத் தூக்கி சுமக்கும் ம.இ.கா. வினர் எங்கே ஓடி ஒளிவார்கள் என்று பார்ப்போம்! எதிர்கட்சியினர் பேச்சு சபை ஏறாது என்பதை நாம் உணர்ந்த்திருக்கிறோம்.
ஆசிரியர் உண்டு! வகுப்பு உண்டு!
Friday, 25 March 2022
பெண்களே! படித்தது போதும்!
Girls' High Schools closed in Afghanistan.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!
பாவம்! தாலிபான்கள் ரொம்பவம் தடுமாறுகிறார்கள்! பயங்கரவாதிகளாக இருந்தவர்கள்! இப்போது அவர்கள் நினைத்தது போலவே ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றிவிட்டார்கள்! அடுத்து என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை! அவர்களை ஆதரித்து வந்த ஒருசில இஸ்லாமிய நாடுகளுக்கும் புரியவில்லை!
அதென்னவோ தாலிபான்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல! பெணகள் கல்வி கற்கக்கூடாது என்பது அவர்களின் வாதம். அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் வரக்காரணம் என்ன, நமக்குத் தெரியவில்லை!
கடந்த ஏழு மாதங்களாக இடைநிலைக் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டு இப்போது தான் மீண்டும் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆனால் பள்ளிகள் தொடர முடியவில்லை. ஓரிரு நாட்களே இயங்கிய பள்ளிகள் உடனடியாக தடை செய்யப்பட்டன.
இப்போது மீண்டும் முன்பு போலவே ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பெண்களின் கல்விக்குத் தடையைக் கொண்டுவந்திருக்கிறார்கள் தாலிபான்கள். இதன் பின்னணி என்ன என்பது பரம இரகசியம்!
ஏற்கனவே உலகில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளனன. எல்லா நாடுகளிலும் பெண்கள் கல்வி கற்கத்தான் செய்கின்றனர். பெண்களின் கல்விக்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா நாடுகளிலும் உயர்கல்வி அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. பெண்கள் டாக்டர்கள், இஞ்சினியர்கள், கணக்கர்கள் என்று எல்லாத் துறைகளிலும் அவர்கள் ஆளுமை செலுத்துகின்றனர். ஏன் நமது நாட்டிலேயே நாட்டின் மிக உயர்ந்த பதவியான மத்திய வங்கியான, பேங்க் நெகாரா மலேசியா ஆளுநராக ஒர் பெண்மணியான டாக்டர் ஸெட்டி அக்தார் அஸிஸ் இருந்திருக்கிறாரே!
ஏனைய நாடுகளில் பெண்களின் முன்னேற்றம் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. பெண் டாக்டர்கள் இல்லையென்றால் பெண்களுக்கான பிரசவத்தைப் பார்ப்பவர்கள் யார்? அப்படியானால் இன்னொரு சட்டத்தையும் கொண்டு வரலாம்! திருமணத் தடை சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே!
இவர்களைப் போன்ற கோமாளிகளை ஆதரிக்க நம் நாட்டிலும் பாஸ் போன்ற அரசியல்கட்சிகள் இருப்பது வெட்கக் கேடானது! அப்படியானால் பாஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்கள் கல்விக்குத் தடை போடலாமே! போட்டுப் பார்க்கட்டுமே, என்ன ஆகும் எனப் பார்க்கலாம்!
இது போன்ற முட்டாள்தனங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கக் கூடாது. பெண்கள் முன்னேற வேண்டும்.
நாம் சொல்ல வருவதெல்லாம் சக இஸ்லாமிய நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு நெருக்கதல்களை ஏற்படுத்த வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். மீசை தாடி, கரடுமுரடான முகம், கையில் ஏந்நேரமும் துப்பாக்கி, எறிக்குண்டு - இப்படியே வாழ்ந்துவிட்ட அவர்களுக்கு வெளி உலகத்தோடு ஒத்துப்போக முடியவில்லை!
பெண்களே! உங்கள் கல்வியை நிறுத்தாதீர்கள்! முடிந்தமட்டும் படியுங்கள்! நீங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை!
Thursday, 24 March 2022
சாலைகளைக் கவனியுங்கள்!
Wednesday, 23 March 2022
ரம்லான் மாதம் வரை பொறுத்திருங்கள்!
Tuesday, 22 March 2022
நாடாளுமன்றம் நிராகரித்தது!
No bail under SOSMA!
Monday, 21 March 2022
பொறுப்பற்ற பாதுகாவலர் நிறுவனங்கள்!
பள்ளிக்கூடங்களில் பாதுகாவலர்களாக வேலை செய்பவர்கள் யாருடைய பொறுப்பில் இருக்கிறார்கள் என்கிற கேள்வி இப்போது எழுகிறது!
நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூடங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டவரகள் அல்ல. ஆனால் அவர்கள் குறைந்தபட்சம், பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.
பாதுகாவலார்கள், பாதுகாப்பு நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள். வேலைக்கு அமர்த்தும் முன் அவர்கள் பாதுகாவலர்களாக வேலை செய்யும் தகுதி உடையவர்களா என்பதை காவல்துறையுடன் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி இருந்தால் அவர்கள் பாதுகாவலர்களாக வேலை செய்யும் தகுதியை இழந்துவிடுவார்கள். பாதுகாவலர் வேலைக்கு முக்கியத்தகுதி என்பது எந்தக் குற்றப்பின்னணியும் இருக்கக் கூடாது என்பது தான்.
சமீபத்தில் பள்ளிக்கூட பாதுகாவலர் ஒருவர் குற்றப்பின்னணி உடையவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். ஏற்கனவே அவர் பாலியில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர். கடைசியாக ஒரு பெண்ணை பள்ளியில் மறைவான இடத்தில் எரியூட்டி கொலை செய்திருக்கிறார்.. இந்த விசாரணையின் போது அவர் மீதான குற்றங்கள் தெரிய வந்திருக்கின்றன.
பள்ளிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தினசரி போய் வருகின்றனர். இது போன்ற பாதுகாவலர்களால் எந்த நேரமும் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது தான் பெற்றோர்களின் கவலை.
இதில் முக்கிய குற்றவாளிகள் என்றால் பாதுகாவலர் நிறுவனங்கள் தான். காவல்துறையின் அனுமதி இல்லாமல் அவர்களால் யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது. அப்படி அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்றால் அந்த நிறுவனங்கள் குற்றம் புரிகின்றன என்று பொருள். அந்த நிறுவனங்கள் குற்றம் புரிந்தாலும் யாருடனோ அந்த நிறுவனங்கள் சமரசம் செய்து கொள்கின்றனர் என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஆனால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அத்தகைய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பது தவறு அல்ல.
குற்ற இழைத்தவர்கள் எந்தவித தயக்கமுமின்றி ஆங்காங்கே வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். சமீபத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரித்ததில் அந்த ஓட்டுனர் மீது ஏற்கனவே கஞ்சா அடித்துவிட்டு பேருந்து ஓட்டி விபத்துகளைச் சந்தித்தவர் என்று தெரிய வந்தது! அதில் விசேஷம் யாதெனில் அவர் போலிசாரால் தேடப்பட்டு வந்தவர்! அது தான் டாப்!
என்னவோ நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கு! நாம் சொல்லுவதை சொல்லிக் கொண்டிருக்கிறோம். எது எப்படி இருந்தாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர்கள் பொங்கி எழுவார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை!
காவல்துறை அலட்சியம் காட்டினால் பொது மக்களுக்கு வருவது என்னவோ துன்பம் தான்!
Sunday, 20 March 2022
போரை நிறுத்துக!
"போரை நிறுத்துக!" என்பது தான் உலக மக்களின் ஒன்றுபட்ட குரலாக இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது!
Saturday, 19 March 2022
இளையோர்களே! கொஞ்சம் உதவுங்கள்!
35 விழுக்காட்டினர் பூஸ்டர் ஊசி இன்னும் செலுத்தவில்லை!
Friday, 18 March 2022
ஜொகூர் சுல்தான் பாராட்டுக்குரியவர்!
"Declare your Assets" says Johor Sultan
Thursday, 17 March 2022
பொதுத் தேர்தலுக்கு அவசரமில்லை!
No Rush for GE 15 - PM
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நல்ல நேரத்தில் தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
ஆமாம், பொதுத்தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மை தான். என்ன அவசரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். பொதுத் தேர்தல் நடத்த வேண்டியது அடுத்த ஆண்டே தவிர 'உடனடியாக' என்று எதுவுமில்லை!
அதுவும் அம்னோ உதவித்தலைவர் பேசுவது ரொம்ப ரொம்ப அதிகம்! மலாக்கா தேர்தலில் ஜெயித்துவிட்டால் என்ன? ஜொகூர் தேர்தலில் ஜெயித்துவிட்டால் என்ன? அதற்காக இந்த நாடே அவர் பேசுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா? மிகவும் அபத்தமான ஓர் அரசியல்வாதி!
இவர்கள் நினைக்கும் போதெல்லாம் தேர்தல் வைப்பதற்கு இங்கு என்ன மக்களாட்சி நடக்கிறதா அல்லது அம்னோவின் கோமாளி ஆட்சி நடக்கிறதா? இரண்டு மாநில சட்டமன்றத்தில் வெற்றி என்பது இந்த அளவுக்கு அகம்பாவத்தைக் கொண்டுவரும் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
இந்த அளவு வாய்கிழிய பேசுகிறவர்களுக்கு இந்த வெற்றியின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தார்களா கொரோனா தொற்று பெரும்பாலான வாக்காளர்களை வாக்களிக்க முடியாமல் செய்துவிட்டது என்பது உண்மை தானே! எதிர்க்கட்சிகள் மக்களைச் சந்திக்க முடியவில்லை. கூட்டங்கள் நடத்த முடியவில்லை. காவல்துறை கெடுபிடி வேறு எதிர்க்கட்சியினருக்கு!
உண்மையைச் சொன்னால் இந்த இரண்டு மாநில வெற்றிகள் அம்னோவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கக் கூடாது! இது ஒரு கேவலமான வெற்றி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஆமாம் தலைவர்கள் மேல் பல ஊழல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதே கேவலமானது தான்!
நல்ல வேளை! பிரதமர் சரியான நேரத்தில் சரியாகக் கடிவாளம் போட்டிருக்கிறார். "ஆடாதடா ஆடாதடா மனிதா! ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!" என்கிற பாடல்வரிகள் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியவில்லை!
இவர்களுடைய ஆட்டம் பாட்டம் எப்படி திசையை மாற்றிக்கொள்ளும் என்பது தெரியவில்லை! அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம்! அது அவர்கள் கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம்! ஆனால் அந்த ஆயுதம் கைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காரணம் நாடாளுமன்றத்தின் மேல் மாமன்னரின் கடைக்கண் பார்வையும் உண்டு என்பதும் அம்னோவுக்கும் தெரியும்! அதனால் கவிழ்ப்பதற்கு வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்!
நம்மைப் பொறுத்தவரை பொதுத் தேர்தலுக்கான தருணம் இதுவல்ல. அடுத்த ஆண்டு தான் அதன் காலம் முடிவடைகிறது. அப்போது, அந்தக் காலகட்டத்தில், தேர்தலை வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை. அது தான் ஜனநாயக மரபு. இதில் எந்த மாற்றமும் தேவையில்லை! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிவிட முடியாது!
இந்த விடயத்தில் அம்னோவுடன் நாம் கைகுலுக்க முடியாது!
Wednesday, 16 March 2022
எங்களைவைச்சி காமடி கீமடி பண்ணலியே!
அதற்குள் பயமுறுத்தலா!
15- வது பொதுத் தேர்தல் நடத்த அம்னோ முடிவு எடுக்குமா!
ஆனால் இந்த முறை அம்னோ கூடுவது என்பது அடுத்த 15-வது பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று பிரதமரைப் பயமுறுத்துவது தான் நோக்கம்!
சமீப காலங்களில் நடந்து முடிந்த மலாக்கா, ஜொகூர் சட்டமன்றத் தேர்தல்கள் அம்னோவுக்கு ரொம்பவும் தெனாவெட்டை அளித்திருக்கிறது என்பதை அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அழிவின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு கட்சி தீடீரென இரண்டு மாநில வெற்றிகளால் தனது வழக்கமான அட்டூழிய அரசியலைக் கையில் எடுத்திருக்கிறது! அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானான்! அதே கதை!
அவர்கள் பேசுகின்ற பாணி கூட மாறிவிட்டது. ஒரு வகையான எச்சரிக்கை! பிரதமருக்கு எச்சரிக்கை! பொது மக்களுக்கு எச்சரிக்கை! அடிமட்ட அம்னோ தொண்டர்கள் அடுத்த பொதுத் தெர்தலை வைக்க வேண்டும் என விரும்புகிறார்களாம்! அதனால் யாவரும் அவர்களுக்கு அடிபணிய வேண்டுமாம்!
உண்மையைச் சொன்னால் 15-வது பொதுத்தேர்தல் என்பது அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் நடைபெற வேண்டும். இன்னும் ஓர் ஆண்டு இருக்கையில் எந்த அவசரமும் தேவை இல்லை. இப்போது அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு எந்த ஆபத்திலும் அவசரத்திலும் இல்லை. எதிர்க்கட்சிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, சுமுகமாகவே அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுத்தேர்தல் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. இன்னும் ஓர் ஆண்டு இருக்கையில் ஏன் இந்த அவசரம் என்பது தான் கேள்வி.
இப்போது அரசாங்கமும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற ஒரு நேரம். கொரோனா தொற்றும் முற்றிலுமாக ஒழிந்தது என்று சொல்ல முடியாது. தொழிற்சாலைகள் இப்போது தான் ஆங்காங்கே மீண்டும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களும் பல நெருக்கடிகளில் இருக்கின்றனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இது தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பதும் தெளிவில்லை.
இந்த நேரத்தில் ஏன் இந்த கூப்பாடு? அம்னோ மட்டும் தேர்தலை வையுங்கள் என்றால் போதாது. எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் அதனை யோசிக்கலாம்.
அம்னோ செய்வது அராஜகம் என்றே நமக்குத் தோன்றுகிறது. இது தான் சரியான நேரம் என்று நீங்களாகவே முடிவெடுத்து முக்கி முணகிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லாக் கட்சிகளுக்குமே அடுத்த ஜூலை மாதம் தான் சரியான நேரம் என்று சொல்லும் போது உங்களுக்கு மட்டும் அப்படி யென்ன இப்போது தான் நல்ல நேரம்?
பிரதமர் இஸ்மாயில் அனைவருக்கும் பிரதமர். அம்னோவுக்கு மட்டும் அல்ல! இதை உணர்ந்து கொண்டு அவர் செயல்பட வேண்டும்.
Tuesday, 15 March 2022
உப்புதானா பிரச்சனை?
அதிக உப்பு? ரொம்ப தப்பு!
குறைந்தபட்ச சம்பளம் அமல்!
குறைந்தபட்ச சம்பளமான ரி.ம. 1500 வெள்ளி சிக்கிரம் அமலுக்கு வரும் என்பதாக மனிதவள அமைச்சர் கூறியிருப்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி தான்.
Monday, 14 March 2022
இனி உங்கள் பாடு!
MIC President Tan Sri SA. Vigneswaran
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ம.இ.கா. வினருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது உண்மைதான்!
இனி வருங்காலங்களில் அவர்களின் "உண்மை" தான் அவரகளுக்குக் கை கொடுக்கும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். இது நாள் வரை அது மட்டும் தான் அவர்களிடம் இல்லாத ஒரு குறை! இந்த வெற்றியின் மூலம் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருந்த சில சில்லறைக்கட்சிகள் "சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்!" என்று தெறித்து ஓடும் என நம்பலாம்!
இந்த வெற்றியைப் பற்றி கருத்துரைக்கையில் ம.இ.கா. தலைவர் "இதற்கு முன் ஆதரவு வழங்குவதிலிருந்து ஒதுங்கியிருந்த இந்திய சமூகத்தினர் இப்போது மீண்டும் ம.இ.கா.வை ஆதரித்ததோடு அவர்களது நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது" என்பதாகக் கூறியிருக்கிறார்!
இந்த ஆதரவை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்திய சமூகத்தினர் ஏன் ஒதுங்கி இருந்தனர் என்பது உங்களுக்குத் தெரிந்த கதை தான். அதன் விரிவான பட்டியலே உங்களிடம் உண்டு. அதனை நீங்கள் இப்போது எடுத்துப் பார்த்தாலும் இந்திய சமூகம் ஒதுங்கி இருந்தது சரிதான் என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்!
எது எப்படியோ தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே இந்தத் தேர்தலின் மூலம் எதிர்பாராத அளவுக்கு நல்ல அறுவடை செய்திருக்கின்றன! வாழ்த்துகிறோம்!
ஆனால் இத்தோடு உங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். இது நாள்வரை அப்படித்தான் உங்கள் செயல்கள் அமைந்திருந்தன. இப்போது நீங்கள் மாற வேண்டும்.
இங்கு நாம் பெரும்பாலும் ம.இ.கா. வைப்பற்றிதான் பேசுகிறோம். ஒன்றை ம.இ.கா.வினர் புரிந்துகொள்ள வேண்டும். சீனர்களைப்பற்றி நாம் பேச ஒன்றுமில்லை. சீனர்களைப் பிரதிநிதித்து யார் வந்தாலும் சீனர்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்குத் தூக்கவும் தெரியும் தொப்பென்று போடவும் தெரியும்!
ஆனால் இந்தியர்களின் நிலை வேறு. காலங்காலமாக ம.இ.கா.வினரால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம். அதனால் தான் ம.இ.கா. என்றாலே சாமிவேலுவின் பெயர் இன்றும் அடிபடுகிறது! இப்போது அவரது பாணி அரசியல் நமக்குத் தேவை இல்லை! நம்முடைய எடுத்துக்காட்டு என்றால் அது வீ.தி.சம்பந்தன் அவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை சாமிவேலுவின் பெயர் தான் அடிபடுகிறது!
இந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ம.இ.கா. விற்கு ஒரு புதிய அத்தியாயமாக இருக்க வேண்டும். ஒரு புதிய பாதையை அமைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இந்தியர் நலன் சார்ந்த விஷயங்களில் விட்டுக் கொடுக்கும் போக்கு இனிமேலும் இருக்கக் கூடாது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரால் பள்ளிக்கூடத்திற்கு ஒரு பாதை போட்டுக் கொடுக்க முடியவில்லை. இறந்த பின் 31-வது நாள் சடங்குகள்செய்ய இடமில்லை. இதெல்லாம் சாதாரண விஷயங்கள். இதைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏன் அந்தப் பதவி என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.
இனி மேலும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை. கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
வேறு என்ன? பந்து உங்கள் கைகளில்! இனி உங்கள் பாடு!
Sunday, 13 March 2022
மாபெரும் வெற்றி!
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ஒரு முடிவுக்கு வந்தது!
ஒரு இக்கட்டான சூழலில் நடந்த இந்தத் தேர்தல் ஆளும் பாரிசான் கட்சிக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தேர்தலாக அமைந்துவிட்டது. பாரிசான் கட்சியினரே எதிர்பாராத ஒரு வெற்றி என்று சொல்லலாம்.
பொதுவாகவே கொவிட்-19 தொற்று பாரிசான் கட்சியினருக்கு மிக நல்ல சகுனத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். மலாக்கா மாநிலத்தில் கிடைத்த வெற்றியையும் இதனோடு சேர்த்துக் கொள்ளவும் செய்யலாம்.
வாக்குப் பதிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. தொற்று நோயின் காரணமாக பலர் வீட்டைவிட்டு வெளியாகவில்லை. இது எதிர்பார்த்தது தான்! புதிய வாக்காளர்களான 18-வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அவ்வளவாக வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை! இன்னும் அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை!
இது போன்ற காரணங்கள் எல்லாம் பாரிசான் கட்சிக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இந்த வெற்றியின் காரணத்தினால் இன்னும் ஓரிரு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வரக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு. அல்லது நாடாளுமன்ற தேர்தல் கூட வரலாம்.
இந்த சமீபகால வெற்றிகள் பாரிசான் கட்சிக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு புதிய உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஆமாம் அவர்கள் எதிர்பார்ப்பது அதே மலாக்கா பாணி, அதே ஜொகூர் பாணி அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வரும் என நினைக்கிறார்கள். அதே பாணி அவர்களுக்கு வெற்றியை வாரிக் கொடுக்கும் என்றால் ஏன் வேறு மாநிலங்களுக்கும் அதே பாணியை விரிவுபடுத்தக் கூடாது? இது அரசியல்! நேர்மை, நியாயம் பற்றிப் பேசினால் இருக்க வேண்டிய இடம் வேறு!
எப்படியோ பாரிசான் கட்சியின் வெற்றிக்கு நாம் எதிரியல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது நடக்க வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். விலைவாசிகளைக் கட்டுப்படுத்தாமல் மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கக் கூடாது. விலைவாசி மட்டும் அல்ல, வேலை வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும், உயர்கல்வியில் சம வாய்ப்புக்களை வழங்க வேண்டும், அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும், இலஞ்ச ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் - இது போன்ற விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நாம் ஏன் அரசாங்கத்தை எதிர்க்கிறோம்?
இந்த மாபெரும் வெற்றி மக்கள் பாரிசானுக்குக் கொடுத்த மாபெரும் அங்கீகாரம். அதை நன்மையாக்குவதும் தீமையாக்குவதும் பாரிசான் கையினிலே!
Saturday, 12 March 2022
தேர்தல் களம் காணும் ஜொகூர் மாநிலம்!
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
இப்போது அந்த மணியோசை வருவதற்காகத் தான் மலேசியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜொகூர் யானை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமையலாம்! அதனால் தான் ஜொகூர் மாநிலம் அதிக எதிர்பார்ப்பை, இன்றைய நிலையில், கொண்டிருக்கிறது!
ஆமாம், ஜொகூர் மாநிலத்தின் 15-வது பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை 12-3-2022. கடந்த காலங்களில் ஒரே கட்சி ஆட்சி தான் தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. எந்த அளவுக்கு அக்கட்சி மாநிலத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றன!
நல்ல கேள்வி தான்! ஆனால் முன்னாள் ஆட்சியாளர்கள் அது பற்றி அதிக அக்கறைக் காட்டவில்லை! ஒரே காரணம் தான். அவர்களது குடிகளுக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைப்பதையே பெரிய பாக்கியமாகக் கருதி வந்திருக்கின்றனர்! மற்றபடி இவர்கள் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டவில்லை! ஆனாலும் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்தில் மட்டும் அதிகம் முனைப்புக் காட்டியிருக்கின்றனர். ஆளும் அரசியலில் இருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்கள்! அது தான் அவர்களது சாதனை!
அரசியலில் பழையவர்களை ஓரங்கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களிடம் பண பலம் உண்டு. அதனை வைத்தே அவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்து விடுகிறார்கள். மக்களும் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் காரியம் ஆனால் போதும் என்கிற மன நிலையில் தான் இருக்கிறார்கள். பொதுவான, நாட்டுக்கு நன்மை தரும் விஷயங்களில், யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ஆனாலும் இந்த மாநிலத் தேர்தலில் நல்ல முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்றே கருதுகிறோம்.
Friday, 11 March 2022
முகக்கவசங்கள்
கோவிட்-19 தடுப்புக்காக நாம் அணியும் முகக்கவசங்கள் இன்று மானுடத்துக்கே பெரும் சவலாக வளர்ந்து கொண்டிருக்கிறது!
மக்கள் நாலாப்பக்கமும் பல இடையூறுகளைச் சந்தித்து வருகிறார்கள். அனைத்துக்கும் நாமே தான் காரணம். நாம் எந்த ஒரு ஒழுங்கு முறையையும் கடைப்பிடிக்காததால் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம்!
இப்போது நாம் அணிந்து கொள்ளும் முகக்கவசங்கள் கூட மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியாத மாறி வருகிறது! ஏதோ ஒரு வியாதிக்கு முகக்வசம் அணிந்தால் ஏதோ ஒன்று புதிதாக முளைத்துக் கொண்டு வருகிறது! ஒன்றிலிருந்து இன்னொன்று ஆரம்பம்! இதற்கு முடிவே இல்லையோ!
நமது நாட்டில் மட்டும் கடந்த 2020 ஆண்டில் சுமார் 90 டன் எடை கொண்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்திருக்கின்றன!
இது நமது நாட்டு நிலவரம் மட்டும் தான். இதையே உலக அளவில் பாருங்கள். ஐயோ! நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! இவைகளையெல்லாம் எரித்துப் போட்டுவிடலாம் என்றால் அதன் மூலம் வேறு என்ன வியாதி வருமோ என்கிற அச்சமும் வருகிறது! இதையே கடலில் கொண்டு போய் கொட்டினால் கடலில் உள்ள நீந்துவன அனைத்தும் ஏதோ ஒரு புதிய உணவு என்று நினைத்து சாப்பிடவும் சாத்தியம் உண்டு!
ஏற்கனவே பாவம்! நாம் சாப்பிடுகின்ற கடல் மீன்கள், மீன்களாகவே தெரியவில்லை! ஏதோ பிளாஸ்டிக் பொருள்களைச் சாப்பிடுவது போல் மீன்களையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்! மீன்களுக்கு எது உணவுப் பொருள், எது பிளாஸ்டிக், எது முகக்கவசம் என்கிற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்தையும் வெளுத்து வாங்குகின்றன! கடைசியில் அங்குச் சுற்றி இங்குச் சுற்றி மீண்டும் நமது வயிற்றுக்குத் தான் போகின்றன!
நமது கவலையெல்லாம் நாட்டில் இப்போது இல்லாத குப்பைகளா? இருக்கின்ற குப்பைகளுக்கே ஒரு தீர்வு காணமுடியாத நிலையில் இப்போது புதிதாக இன்னொன்று வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என்ன செய்ய?
மேற்கு நாடுகளின் நிலை வேறு! அவர்கள் அவர்களின் குப்பைகளைத் தூக்கி ஏதோ ஒரு வெளி நாட்டுக்கு, தங்களுக்கு வேண்டிய நாடுகளுக்கு, பணத்தைக் கொடுத்தாவது அனுப்பி விடுவார்கள்! இதெல்லாம் அவர்களுக்கு சகஜம்! நாம் எங்கேயும் அனுப்ப முடியாது!
பார்ப்போம்! இதற்கான தீர்வு காணப்படும் வரை பொறுத்திருப்போம்!
அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியுமா?
வட்டி முதலைகளின் பயமுறுத்தும் வேலை!
Thursday, 10 March 2022
வாருங்கள்! மலை ஏறுவோம்!
"எவரஸ்ட்" ரவி தனது மலையேறும் குழுவினருடன்!
மலை ஏறுவது அதுவும் உலகில் உயரமான எவரஸ்ட் மலையை ஏறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
மலை ஏறுபவர்களுக்கெல்லாம் அவர்கள் வெற்றி பெற நினைப்பது எவரஸ்ட் மலையை அடைவது தான். உலகில் உயரமான மலையை அடைவது என்பது மலையேறுபவர்களின் கனவு!
ஆனால் நமது ரவிசந்திரன் தர்மலிங்கம் இரண்டுமுறை எவரஸ்ட் சிகரத்தை அடைந்திருக்கிறார். 2006 - 2007 - ம் ஆண்டு அந்த சாதனையைப் புரிந்திருக்கிறார். அதனால் தான் அவரை அனைவரும் எவரஸ்ட் ரவி என அழைக்கிறார்கள்.
இந்த எவரஸ்ட் பயணங்களின் போது அவர் தனது கைகளில் உள்ள எட்டு விரல்களை இழந்திருக்கிறார். ஆனால் அந்த இழப்பு என்பது அவரது மலையேறும் ஆர்வத்தைக் குறைத்துவிடவில்லை! அவருக்கு அது ஊக்குவிப்பாகவே அமைந்தது! அது தான் மலையேறுபவர்களின் தன்னம்பிக்கை!
வருகிற மார்ச் 24-ம் தேதி மீண்டும் எவரஸ்ட் பயணத்தை மேற்கொள்கிறார் எவரஸ்ட் ரவி. இந்தப் பயணம் இரண்டு மாதங்கள் நீடிக்கும். இம்முறை அவரோடு ஐந்து பேர் மலையேறுகின்றனர். இதில் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த இரு பெண்களும் கலந்து கொள்கின்றனர். எவரஸ்ட் சிகரத்தை எத்தனையோ பெண்கள் ஏறி இறங்கியிருக்கின்றனர். இந்த இரு மலேசியப் பெண்களும் சிகரத்தை அடைய நமது வாழ்த்துகள்!
இன்னொரு விசேஷமும் உண்டு. இந்த முறை இளங்கோவன் ராஜமுத்து என்கிற 63 வயதான மலையேறியும் கலந்து கொள்கின்றார். இந்தக் குழுவில் இவரே அதிக வயதான மனிதர். அப்படி இவர் சிகரத்தை ஏறி வெற்றி பெற்றால் மலேசியாவின் மிக அதிக வயதான மனிதர் என்கிற சாதனைக்குரிய மனிதராகத் திகழ்வார்! அவர் அந்த சாதனையைப் புரிய வேண்டும் என நாம் வாழ்த்துவோம்!
எவரஸ்ட் ரவியும் இளங்கோவனும் வருகின்ற காலங்களில் நல்ல நோக்கங்களைக் கொண்டுள்ளனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலையேறுதலில் ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க பல திட்டங்களை வைத்துள்ளனர். வருங்காலங்களில் நமது சந்ததியினர் தொடர்ந்து சாதனைகள் புரிய வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அதே ஆசைகள் உண்டு.
இளைய தலைமுறையினர் மலையேறுதலில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா! வாருங்கள் இளைஞர்களே! நாமும் மலையேறுவோம்!
வங்காள தேசிகள் தேவைதானா?
நமது நாட்டில் மீண்டு வங்களாதேசிகளின் 'படையெடுப்பு' நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை முதாலாளிகளே நேரடியாக வங்களாதேசிகளைத் தருவிப்பார்கள் என்று அரசாங்க கூறினாலும் முதலாளிகளே முகவர்களைத் தான் நாடுவார்கள் என்பது ஒன்றும் இரகசியமில்லை!
ஆனாலும் ஒரு சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே நமது நாட்டில் நாட்டிற்குள் திருட்டுத்தனமாக புகுந்தவர்கள் என்று சொல்லி பலரைச் சிறைப்படுத்தி சோறு போட்டு வளர்க்கிறோம்.
இன்னும் பலர் அகதிகள் என்று சொல்லி அவர்களும் நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களைப் பிச்சை எடுக்கவும் அனுமதி கொடுத்திருக்கிறோம்!
இதில் ஒரு பகுதியினர் தான் மியான்மார் நாட்டு அகதிகள். அவர்கள் அகதிகள் என்றாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுக்கலாம். சமீபத்தில் கூட ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. இரண்டு மியான்மார் சிறுவர்கள் குப்பைகளிலிருந்து எடுத்து சாப்பிட்ட பின் வாந்தியெடுத்து இறந்து போனதாக செய்திகள் வெளியாயின.
இந்த மியான்மார் அகதிகள் இஸ்லாமிய மதத்தினர். நமது நாடு இஸ்லாமிய நாடு என்று மார்தட்டுவதில் யாருக்கும் பெருமை இல்லை. ஏன் இந்த அகதிகளுக்கு நாம் உதவுவதில் மட்டும் தயக்கம் காட்டுகிறோம்? இங்குள்ள இஸ்லாமியர்களை விட அவர்கள் கீழ்த்தரமானவர்களா? ஏதோ ஒன்று இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே சீனப்பெருஞ்சுவரை எழுப்புகிறது!
இந்த அகதிகளுக்கு இங்கு தங்கும் இடம் கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுத்து அவர்களைக் கௌரவமாக வாழவைப்பது நமது கடமையாகவே நான் நினைக்கிறேன். அவர்களும் பல இடங்களிலும் வேலை செய்து வருகின்றனர். அதனை அவர்கள் அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டும். அவர்களும் இந்நாட்டில் வாழ வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
யாரோ ஒரு சில அரசியல்வாதிகள் பயன்பெறுகிறார்கள் என்பதற்காக வங்களாதேசிகளையே கட்டிக்கொண்டு அழுவது நமது நாட்டிற்கு அவப்பெயரைத் தான் கொண்டு வரும்!
நமது நாட்டிற்குத் தேவை வங்காளதேசிகள் அல்ல! இங்கு ஏற்கனவே அகதிகள் என்கிற பெயரில் பல நாட்டு மக்கள் இருக்கின்றனர். அவர்களையும் வாழவைப்பது நமது கடமை.
Wednesday, 9 March 2022
இவர்களை விசாரிக்க ஏன் தாமதம்?
வழக்கம் போல ஒரு சில விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை!
யாரையோ காப்பாற்றுவதற்குத் தாமதம் செய்யப்படுகிறதோ என்று நமக்குத் தோன்றுகிறது.
தனித்து வாழும் தாய் லோ, அவரது மூன்று குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளும் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்தக் குழந்தைகளை மதமாற்றம் செய்தவர்கள் சட்டம் அறியாதவர்கள் என்று சொல்லவிட முடியாது. சட்டம் அறியாதவர்கள் என்றால் அவர்களுக்கு மதமாற்றம் செய்ய உரிமை இல்லை!
சட்டம் அறியாதவர்களால் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. சட்டத்தை அறிந்தவர்களே பிரச்சனையை ஏற்படுத்தி, குழப்பங்களை ஏற்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்!
சட்டம் அறிந்தவர்கள் தான் இப்போது அந்தத் தாய்க்கு நிம்மதி இல்லாமல் செய்கின்றனர்.
கஞ்சா அடிக்கும் கணவனுக்குக் கொடுக்கும் மரியாதையை ஒரு தனித்து வாழும் தாய்க்கு அவர்கள் கொடுக்க மறுக்கிறார்களே என்னும் போது இவர்களுக்கு ஒரு தாய் அனுபவிக்கும் துயரம் என்ன என்பது ஏன் தெரியவில்லை என்பது தான் நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!
சமயம் என்று பேசும் போதே ஒரு தாயின் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்திருக்க வேண்டும். சமயப் போதகர்கள் தாயைப்பற்றி அறியாதவர்களா? "தாயின் காலடியில் சொர்க்கம்" என்பதை அறியாதவர்களா நாம்? நாமே அறிந்திருக்கும் போது சமய அறிஞர்கள் அறியாதவர்களாகவா இருக்க முடியுமா?
ஒரு தாயை இப்படியெல்லாம் அலைக்கழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். தாய் ஒரு மதத்தைச் சார்ந்தவர். அவருடைய அத்துணைக் குழந்தைகளும் வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் என்றால் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்? தாய் எந்த தவற்றையும் செய்யவில்லை. செய்தவர்கள் யார்? அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்று கேட்க நமக்கும் உரிமை இருக்கிறது அல்லவா?
சமய அறிஞர்களும் "இது சரிதானா?" என்கிற கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். நாளை இந்த அவலநிலை உங்களுக்கும் ஏற்படலாம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. வெளி நாடுகளில் உங்கள் பிள்ளைகள் யாரைக் கும்பிடுகிறார்களோ! இப்போது இங்கே உங்கள் அராஜகம் அதிகமாகிக் கொண்டே போகிறது என்பது உங்களுக்கே தெரியும்!
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்! தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி! மறுக்கப்பட நியாயமில்லை என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்!
Tuesday, 8 March 2022
தொற்று தொடரும்!
தொற்று தொடரும்! வாழப்பழகிக் கொள்ளுங்கள்!
Monday, 7 March 2022
இது சரியான கேள்வி?
சிங்கப்பூரால் முடியும்! நம்மால் முடியாதா?