யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
இப்போது அந்த மணியோசை வருவதற்காகத் தான் மலேசியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜொகூர் யானை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமையலாம்! அதனால் தான் ஜொகூர் மாநிலம் அதிக எதிர்பார்ப்பை, இன்றைய நிலையில், கொண்டிருக்கிறது!
ஆமாம், ஜொகூர் மாநிலத்தின் 15-வது பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை 12-3-2022. கடந்த காலங்களில் ஒரே கட்சி ஆட்சி தான் தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. எந்த அளவுக்கு அக்கட்சி மாநிலத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றன!
நல்ல கேள்வி தான்! ஆனால் முன்னாள் ஆட்சியாளர்கள் அது பற்றி அதிக அக்கறைக் காட்டவில்லை! ஒரே காரணம் தான். அவர்களது குடிகளுக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைப்பதையே பெரிய பாக்கியமாகக் கருதி வந்திருக்கின்றனர்! மற்றபடி இவர்கள் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டவில்லை! ஆனாலும் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்தில் மட்டும் அதிகம் முனைப்புக் காட்டியிருக்கின்றனர். ஆளும் அரசியலில் இருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்கள்! அது தான் அவர்களது சாதனை!
அரசியலில் பழையவர்களை ஓரங்கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களிடம் பண பலம் உண்டு. அதனை வைத்தே அவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்து விடுகிறார்கள். மக்களும் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் காரியம் ஆனால் போதும் என்கிற மன நிலையில் தான் இருக்கிறார்கள். பொதுவான, நாட்டுக்கு நன்மை தரும் விஷயங்களில், யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ஆனாலும் இந்த மாநிலத் தேர்தலில் நல்ல முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்றே கருதுகிறோம்.
No comments:
Post a Comment