Friday 18 March 2022

ஜொகூர் சுல்தான் பாராட்டுக்குரியவர்!

 

                                             "Declare your Assets" says Johor Sultan
ஜொகூர் சட்டமன்றத்தேர்தலில்,  பாரிசான் வெற்றிபெற்றால், முன்னாள் மந்திரி பெசார் மீண்டும் பொறுப்புக்கு வருவார் என்று சொல்லப்பட்ட போதிலும், எதிர்பார்த்தபடி, அவரால் வர இயலவில்லை!

அவர் ஏன் வரவில்லை என்பதற்கான காரணிகள் இந்நேரம் பலருக்கும் புரிந்திருக்கும்.

இப்போது ஜொகூர் அரண்மனை  புதிய நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெறுபவர்கள் சுத்தமான கைகளாக இருக்க வேண்டும் என்று அரண்மனை விரும்புகிறது. நல்லது தான். பொது மக்கள் அதனை விரும்புவார்கள். நாட்டை ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி எல்லாக காலங்களிலும் திருடர்களும் கொள்ளையர்களும் தான் பதவியில் அமருகிறார்கள்! நமக்கும் அது ஏமாற்றத்தைத்தான் தந்து கொண்டிருக்கிறது!

ஆனால் ஜொகூர் அரண்மனை இந்த  முறை சில மாற்றங்களைக்  கொண்டு வந்திருக்கிறது.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்களது பின்னணியும் ஆராயப்படும் எனவும் கூறியிருப்பது ஆச்சரியம் தான். அரண்மனை  கூறுவது போலவே பின்னணியும் முக்கியம். இப்போது பணம் உள்ளவர்கள் மிகவும் எளிதாக அரசியலில் புகுந்துவிடுகிறார்கள். இவர்களது பின்னணி யாருக்கும் தெரிவதில்லை.  அதனால் தான் இன்று பல டத்தோக்கள  சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்!

இன்னொன்றும்  முக்கியம்  எனக் கருத இடமிருக்கிறது.  ஆட்சிக்குழுவில் இருப்பவர்களின் கல்வித்தகுதி அத்தோடு இலஞ்ச ஊழலில் சிக்கியிருப்பவர்களா போன்ற விவரங்களை எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வித்தகுதி என்பது நம்மைப் பொறுத்தவரை முக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று நமது ம.இ.கா. வினர் எந்த ஒரு பிரச்சனையிலும் வாய் திறப்பதில்லை! அவர்களின் எதிர்காலத்துக்கு அது  நல்லது என்றாலும் இந்தியர்களின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அது நல்லதல்ல! அதனால் தான் எதிர்கட்சியினர் அனைத்தையும் பேச வேண்டியுள்ளது! இலஞ்ச ஊழலில் சம்பந்தப்படாதவர்களே  ஆட்சிக்குழுவில் இடம்பெற முடியும் என்பது நல்லதொரு திட்டம்!

ஆனால் இப்போது இருக்கும் இந்த வேகமும் துடிப்பும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை. இது நாள்வரை அப்படி இருந்ததில்லை.  இனிமேல் இருக்கலாம். மாநில வளர்ச்சி என்பதே முக்கியம். அதுதான் நமது இலட்சியமும் கூட!


No comments:

Post a Comment