No Rush for GE 15 - PM
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நல்ல நேரத்தில் தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
ஆமாம், பொதுத்தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மை தான். என்ன அவசரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். பொதுத் தேர்தல் நடத்த வேண்டியது அடுத்த ஆண்டே தவிர 'உடனடியாக' என்று எதுவுமில்லை!
அதுவும் அம்னோ உதவித்தலைவர் பேசுவது ரொம்ப ரொம்ப அதிகம்! மலாக்கா தேர்தலில் ஜெயித்துவிட்டால் என்ன? ஜொகூர் தேர்தலில் ஜெயித்துவிட்டால் என்ன? அதற்காக இந்த நாடே அவர் பேசுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா? மிகவும் அபத்தமான ஓர் அரசியல்வாதி!
இவர்கள் நினைக்கும் போதெல்லாம் தேர்தல் வைப்பதற்கு இங்கு என்ன மக்களாட்சி நடக்கிறதா அல்லது அம்னோவின் கோமாளி ஆட்சி நடக்கிறதா? இரண்டு மாநில சட்டமன்றத்தில் வெற்றி என்பது இந்த அளவுக்கு அகம்பாவத்தைக் கொண்டுவரும் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
இந்த அளவு வாய்கிழிய பேசுகிறவர்களுக்கு இந்த வெற்றியின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தார்களா கொரோனா தொற்று பெரும்பாலான வாக்காளர்களை வாக்களிக்க முடியாமல் செய்துவிட்டது என்பது உண்மை தானே! எதிர்க்கட்சிகள் மக்களைச் சந்திக்க முடியவில்லை. கூட்டங்கள் நடத்த முடியவில்லை. காவல்துறை கெடுபிடி வேறு எதிர்க்கட்சியினருக்கு!
உண்மையைச் சொன்னால் இந்த இரண்டு மாநில வெற்றிகள் அம்னோவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கக் கூடாது! இது ஒரு கேவலமான வெற்றி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஆமாம் தலைவர்கள் மேல் பல ஊழல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதே கேவலமானது தான்!
நல்ல வேளை! பிரதமர் சரியான நேரத்தில் சரியாகக் கடிவாளம் போட்டிருக்கிறார். "ஆடாதடா ஆடாதடா மனிதா! ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!" என்கிற பாடல்வரிகள் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியவில்லை!
இவர்களுடைய ஆட்டம் பாட்டம் எப்படி திசையை மாற்றிக்கொள்ளும் என்பது தெரியவில்லை! அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம்! அது அவர்கள் கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம்! ஆனால் அந்த ஆயுதம் கைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காரணம் நாடாளுமன்றத்தின் மேல் மாமன்னரின் கடைக்கண் பார்வையும் உண்டு என்பதும் அம்னோவுக்கும் தெரியும்! அதனால் கவிழ்ப்பதற்கு வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்!
நம்மைப் பொறுத்தவரை பொதுத் தேர்தலுக்கான தருணம் இதுவல்ல. அடுத்த ஆண்டு தான் அதன் காலம் முடிவடைகிறது. அப்போது, அந்தக் காலகட்டத்தில், தேர்தலை வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை. அது தான் ஜனநாயக மரபு. இதில் எந்த மாற்றமும் தேவையில்லை! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிவிட முடியாது!
இந்த விடயத்தில் அம்னோவுடன் நாம் கைகுலுக்க முடியாது!
No comments:
Post a Comment