அதிக உப்பு? ரொம்ப தப்பு!
"உப்பில்லா பண்டம் குப்பையிலே!" நாம் எல்லாரும் அறிந்த பழமொழி தான். உப்பு இல்லாவிட்டால் அது குப்பைக்குப் போக வேண்டிய ஒரு பொருள்! வாயில் வைக்க முடியாது!
"உப்பு மீறினால் மண்ணுக்குள்ளே!" என்று இப்போது எல்லாரும் பேச ஆரம்புத்திருக்கிறார்கள்! நமது சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அவரும் உடல்நலனைக் காத்துக்கொள்ள உப்பைக் குறையுங்கள் என்று அறிவுரைக் கூறியிருக்கிறார்.
தலைமை இயக்குனர் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார். உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் உப்பின் அளவைக் குறிப்பிட வேண்டும் என்பதையும் நினைவுறுத்தியிருக்கிறார். 1983-ம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதனைப் பின்பற்றுவதில்லை என்பதாகத்தான் நாம் விளங்கிக் கொள்கிறோம். அப்படியென்றால் சுகாதார அமைச்சின் பணியாளர்கள் அந்தக் கட்டாயச் சட்டத்தை வழக்கம் போல் கண்டுகொள்வதில்லை என்றாகிறது! அதனால் தான் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் எந்தச் சட்டத்தையும் பின்பற்றுவதில்லை!
யார் என்ன செய்கிறார்களோ செய்யவில்லையோ, சட்டம் சொல்லுகிறதோ சொல்லவில்லையோ நாம் உப்பைப் பொறுத்தவரை சில வரைமுறைகளை வகுத்துக்கொள்வது நல்லது.
உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அது நல்லது. ஆரோக்கியமற்ற உணவு முறைகளினால் ஒரு கோடி பத்து இலட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகைவிட்டு விடைபெறுகின்றனர்! அதில் முப்பது இலட்சம் பேர் உப்பு சம்பந்தமான வியாதிகளினால் மரணம் எய்துகின்றனர்!
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொண்டால் நல்லது. இனிப்பு அதிகம் சாப்பிட்டால் இனிப்பு நீர் வருவதாக நம்மிடையே ஒரு கணக்கு உண்டு. உப்பு அதிகம் சாப்பிட்டாலும் அதே பிரச்சனை தான். அதனால் இனிப்பு நீர் வராது! ஆனால் உப்புநீர் வரலாம் தானே! அல்லது ஏதோ ஒரு வியாதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஓர் எளிமைக்காக உப்புநீர் என்று சொன்னேன்! அவ்வளவு தான்!
உப்பு அதிகம் சாப்பிட்டால் ஆபத்து உண்டு என்பது தான் நாம் சொல்லவருவது. இதையும் "உப்புச் சப்பில்லாத" விஷயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!
No comments:
Post a Comment