15- வது பொதுத் தேர்தல் நடத்த அம்னோ முடிவு எடுக்குமா!
ஆனால் இந்த முறை அம்னோ கூடுவது என்பது அடுத்த 15-வது பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று பிரதமரைப் பயமுறுத்துவது தான் நோக்கம்!
சமீப காலங்களில் நடந்து முடிந்த மலாக்கா, ஜொகூர் சட்டமன்றத் தேர்தல்கள் அம்னோவுக்கு ரொம்பவும் தெனாவெட்டை அளித்திருக்கிறது என்பதை அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அழிவின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு கட்சி தீடீரென இரண்டு மாநில வெற்றிகளால் தனது வழக்கமான அட்டூழிய அரசியலைக் கையில் எடுத்திருக்கிறது! அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானான்! அதே கதை!
அவர்கள் பேசுகின்ற பாணி கூட மாறிவிட்டது. ஒரு வகையான எச்சரிக்கை! பிரதமருக்கு எச்சரிக்கை! பொது மக்களுக்கு எச்சரிக்கை! அடிமட்ட அம்னோ தொண்டர்கள் அடுத்த பொதுத் தெர்தலை வைக்க வேண்டும் என விரும்புகிறார்களாம்! அதனால் யாவரும் அவர்களுக்கு அடிபணிய வேண்டுமாம்!
உண்மையைச் சொன்னால் 15-வது பொதுத்தேர்தல் என்பது அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் நடைபெற வேண்டும். இன்னும் ஓர் ஆண்டு இருக்கையில் எந்த அவசரமும் தேவை இல்லை. இப்போது அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு எந்த ஆபத்திலும் அவசரத்திலும் இல்லை. எதிர்க்கட்சிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, சுமுகமாகவே அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுத்தேர்தல் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. இன்னும் ஓர் ஆண்டு இருக்கையில் ஏன் இந்த அவசரம் என்பது தான் கேள்வி.
இப்போது அரசாங்கமும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற ஒரு நேரம். கொரோனா தொற்றும் முற்றிலுமாக ஒழிந்தது என்று சொல்ல முடியாது. தொழிற்சாலைகள் இப்போது தான் ஆங்காங்கே மீண்டும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களும் பல நெருக்கடிகளில் இருக்கின்றனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இது தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பதும் தெளிவில்லை.
இந்த நேரத்தில் ஏன் இந்த கூப்பாடு? அம்னோ மட்டும் தேர்தலை வையுங்கள் என்றால் போதாது. எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் அதனை யோசிக்கலாம்.
அம்னோ செய்வது அராஜகம் என்றே நமக்குத் தோன்றுகிறது. இது தான் சரியான நேரம் என்று நீங்களாகவே முடிவெடுத்து முக்கி முணகிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லாக் கட்சிகளுக்குமே அடுத்த ஜூலை மாதம் தான் சரியான நேரம் என்று சொல்லும் போது உங்களுக்கு மட்டும் அப்படி யென்ன இப்போது தான் நல்ல நேரம்?
பிரதமர் இஸ்மாயில் அனைவருக்கும் பிரதமர். அம்னோவுக்கு மட்டும் அல்ல! இதை உணர்ந்து கொண்டு அவர் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment