Monday 11 January 2016

முதலமைச்சர் சகாயம் ஐ.ஏ.எஸ்!


மீண்டும் தமிழ் நாட்டில் தேர்தல் வரப் போகின்றது!

இப்பொழுதே ஆளுங்கட்சியினர்  என்னன்ன இலவசங்களைக்  கொடுக்கலாம்  என்று திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பார்கள்! இது எப்போதும் உள்ள நடைமுறை தான். புதிது என்று சொல்லவதற்கு இல்லை.

ஒரு வேளை இலவசங்கள் மாறுபடலாம்! இப்போது உள்ள நிலையில் "குடிநீர் இலவசம், புதிய வீடு இலவசம், செத்துப்போன குடும்பங்களுக்கு ஒரு லட்சம் இலவசம்"  என்றெல்லாம் அரசியல்வாதிகள் இனி இலவசங்களை அள்ளித்தரலாம்.

ஆனால் நாம் இப்போது அது பற்றிப் பேச வேண்டாம்.

ஒரு நல்ல செய்தி. தமிழக மக்களின் மனதில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது வரவேற்கக் கூடிய மாற்றம்.

சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பொது மக்கள் பலர் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். இதுவே ஒரு பெரிய மாற்றம். நல்ல மாற்றம்.

நிச்சயம் சகாயம் முதலமைச்சர் பதவியை விரும்பமாட்டர். இப்போது அவரின் மாவட்ட ஆட்சியர் பதவியின் மூலம் நல்ல பல காரியங்களை செய்து வருகிறார். அந்த நல்ல காரியங்கள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என மக்கள் நினப்பதில் தவறு ஏதும் இல்லை.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது: மக்கள் நேர்மையான அர்சாங்கத்தை விரும்புகின்றனர். ஊழற்ற, லஞ்சம் இல்லா அரசாங்கத்தை விரும்புகின்றனர். விவசாயம் செய்வோர் நல்ல வாழ்க்கை வாழவேண்டும். ஏழைகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்.

இலவசங்கள் பிச்சை எடுக்கத்தான் உதவும். பஞ்சாப் மாநில மக்கள் எப்படி தலை நிமிர்ந்து .வாழ்கிறார்களோ அது போன்ற வாழ்க்கை தமிழகத்திலும் வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்பதால் தான் இந்த மன மாற்றம்.

எந்த இலவசங்களும் வேண்டாம். சாராயத்தின் மூலம் வருகின்ற வருமானம் தான் அரசாங்கம் என்றால் அதை விடக் கேவலம் எதுவும் இல்லை என்னும் உணர்வு மக்களுக்கு வர  வேண்டும். ஆட்சியில் உள்ளவர்களுக்குக் கேவலம் என்பது அவர்களது அகராதியில் இல்லை. ஆனால் மக்களுக்கு உண்டு.

சீக்கிரம் அந்த "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து " நாள்  வரத்தான் செய்யும்! வரும் என நம்புவோம்!






No comments:

Post a Comment