Wednesday, 27 January 2016
எங்கே இந்த குறைபாடு?
இன்று நமது இளைஞர்கள் பலவித தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மகிழ்ச்சியளிக்கும் செய்தியே!
வீடுகள் செப்பனிடுவது, பைப்புகளைப் பழுது பார்ப்பது போன்று இன்னும் பல பல தொழில்கள். சிறு சிறு தொழில்கள். இன்னும் பெறும் பெறும் தொழில்கள்.
ஒரு காலத்தில் சீனர்கள் ஆதிக்கத்தில் இருந்த இது போன்ற தொழில்கள் இப்போது நமது இனத்தினரும் பங்கு பெறுவது என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
நம்மிடையே திறமை இருக்கிறது. தொழிற்திறன் இருக்கிறது. யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல.
ஆனாலும் நம்மிடம் ஏதோ குறைபாடுகள் உண்டு. நமது இனத்தவர்களே அவர்களைப் புறக்கணிக்கின்றோம்.
அவர்களிடம் என்ன இல்லை? நேர்மைக் குறைவு.என்பது எனது கணிப்பு. காரணம் நானே இரண்டு மூன்று முறை அவர்களிடம் ஏமாந்து போயிருக்கிறேன்.
அவர்களிடம் நேர்மைக் குறைவு என்பது மட்டும் அல்ல. பெரும்பாலான இளைஞர்கள் குடிகாரர்களாகவும் இருக்கின்றனர். எல்லாவற்றையும் அரைகுறையாகச் செய்வது, முடிந்தால் ஏமாற்றுவது, ஏதோ பொழுது போக்காகச் செய்வது; இவைகளே இவர்களுக்குக் கண்ணிகளாகி விட்டன.
நான் முதன் முதலில் ஏமாந்த கதை: வீட்டின் குளியலறைக் கதவு மாற்ற வேண்டியிருந்தது. ஒருவர் சிபாரிசு செய்த இளஞன் வந்தான். 300 வெள்ளி என்றான். பேசி முடிவாயிற்று. வேலை ஆரம்பிக்கவில்லை. பணம் கொடுத்தாயிற்று. பணத்தோடு போனவன் "போனவன் போனாண்டி" என்றாயிற்று! சிபாரிசு செய்தவரை விசாரித்தோம். "நீங்க ஏங்க மொத்தமா பணத்தைக் கொடுத்தீங்க? அவன் குடிகாரப்பய" என்று அவர் முற்றுப்புள்ளி வைத்தார்!
எனது மகனின் நண்பன் வீட்டில் கொஞ்சம் வேலை இருந்தது. எனது மகனுக்குத் தெரிந்த ஒர் இளைஞனிடம் அந்த வேலை ஒப்படைக்கப்பட்டது. சுமார் ஆயிரம் வெள்ளீ வேலை. வீட்டுக்கார இளைஞர் கையிலிருந்தால் பணம் செலவாகிவிடும் என்பதால் ஆயிரம் வெள்ளியையும் மொத்தமாகக் கொடுத்து விட்டார். காரணம் அவன் நமக்குத் தெரிந்த இளைஞன் என்பதால்.கொஞ்சம் நம்பிக்கையோடு அனைத்தும் நடந்தன. அதன் பின் அந்த இளைஞனைப் பார்க்கவே முடியவில்லை! போனான்! போனான்! போய்க்கொண்டே இருந்தான்! அவன் வீடு தெரியும். அவன் அப்பா, அம்மா அனைவரையும் தெரியும். இருந்தும் என்ன பயன்? வீட்டில் குடிபோதையோடு இருந்தான்.நாளை நாளை என்று சொன்னானே தவிர மற்றபடி எதுவும் நடக்கவில்லை! எந்தப் பயமுறுத்தலும் எடுபடவில்லை! உதைத்தாலும் வாங்கத் தயாராக இருந்தான்!
இந்தச் சூழலில் நமது இன இளைஞர்களை நம்பி எப்படி வேலைகளை ஒப்படைக்க முடியும்?
இங்கு தான் சீனர்கள் முன்னணியில் நிற்கின்றனர். போட்டிகள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. தங்களது கட்டணங்களைக் குறைப்பதில்லை. ஆனால் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி மிக நேர்த்தியாகத் தங்களது வேலைகளைச் செய்து முடிக்கின்றனர்.
நிச்சயமாக சீனர்களிடம் தான் நம்பிக்கையோடு வேலைகளை ஒப்படைக்க முடியும் என்னும் சூழிலலில் நாம் இருக்கிறோம். வேறு வழி?
நல்ல இளைஞர்களும், நல்ல தொழில் முனைவோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைத் தேடி கண்டடைவது ......? எனினும் நம்பிக்கையோடு இருப்போம். நமது இளைஞர்களும் வெற்றி பெறுவார்கள் என நம்புவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment