Friday 15 January 2016

பொங்கலோ பொங்கல்! பொங்கட்டும் புதிய எழுச்சி!

தமிழர் திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாளில் பொங்கட்டும் புதிய எழுச்சி!

நமது வாழ்க்கையில் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் புதிய வாழ்க்கை முறைகள் அனைத்தும் புதியவைகளாகவே இருக்கட்டும்.

பழைய சிந்தனைகளைப் புறந்தள்ளுவோம். வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்னும் கண்மூடித்தனமான சிந்தனைகளிலிருந்து விடுபடுவோம். பெரிய படிப்புப் படித்துவிட்டோம் அதனால் பெரிய வேலை தான் வேண்டும் என்னும் பெருமையை எல்லாம் மூட்டைக்கட்டி வைப்போம்.

நாம் எங்கும் போக வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள சீனர்களைப் பார்த்தாலே போதும். புதிய பார்வைக் கிடைக்கும். புதிய கோணங்கள் கிடைக்கும்.புதிய தெம்பு கிடைக்கும்.

குறைவான சம்பளத்தில் சீனர்கள் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? ஏன்? பெரிய சம்பளத்தில் வேலை செய்யும் தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கும் சீனர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி எப்போதும் உண்டு. குறைவான சம்பளம் என்றாலே அவர்கள் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை. நாமோ குறைவானச் சம்பளத்தைக் கூட ஒரு பெரிய சம்பளமாக நினைக்கும் மனப்போக்கைக் கொண்டிருக்கிறோம்!

இந்தப் பொங்கல் நந்நாளில் நமது எண்ணங்களை மாற்றுவோம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவோம். அதுவும் குறிப்பாக வியாபாரத்துறையில் நமது கவனத்தைச் செலுத்துவோம்.

சிறிய தொழில்கள் தான் பிற்காலத்தில் பெரிய நிறுவனங்களாக மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன.

பணம் இல்லையே என்று ஒலமிடுவதைவிட ஏதாவது ஒரு சிறிய தொழில் ஒன்றைப் பிடித்துக் கொள்ளுவோம். அல்லது நாட்டில் ஏகப்பட்ட நேரடித் தொழில்கள் உள்ளன.

அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்து எடுத்து நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொள்ளுவோம்.

காப்புறுதி தொழில் பற்றி நாம்  அனைவரும் அறிந்தது தான். புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்தத் தொழிலில் வெற்றி பெற்றவர்களை நீங்கள் அறிவீர்களா?  நமது இளைஞர்கள் பலர் காப்புறுதித் தொழிலில் கொடிகொட்டிப் பறக்கின்றனர் என்பதை எத்தனை பேர்  அறிவீர்கள்? பலர் மிகச் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழுகின்றனர்.

நிலங்கள் விற்பனைச் செய்வது, வீடுகள் விற்பனைச் செய்வது போன்ற தரகர்களாக இருந்து செயல் படுபவர்கள் நல்லதொரு வாழ்க்கையை வாழ்கின்றனரே! நாம் தரகர் என்றோ புரோக்கர் என்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்தத் தொழிலுக்காக பல நிறுவனங்கள் இயங்குகின்றன.

எந்தத் தொழில் செய்தாலும் அதற்கான சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் உஙளுக்குத் தேவையான பயிற்சிகளைக் கொடுக்கின்றன.

ஆனால் எந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபட்டாலும் தேவையானது நேர்மை மட்டுமே. நேர்மையற்ற முறையில் செய்யப்படுகின்ற எந்தத் தொழிலும் உங்களுக்குச் சரிவைக் கொண்டு வரும்.

நேரடித் தொழில் என்பது நமது சொந்தத் தொழில். வேலை நேரம் நம்மால் தீர்மானிக்கப்படுகிறது. வருமானம் என்பது நம்மால் தீர்மானிக்கப்படுகிறது. எந்த முதலாளியாலும் தீர்மானிக்கப் படுவதில்லை!

இந்தப் பொங்கல் திருநாளில் புதிய எழுச்சி பெறுவோம். நமது வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவோம்.

பொங்கி எழுவோம்! புத்துணர்வு பெறுவோம்!

பொங்கலோ பொங்கல்!



























No comments:

Post a Comment