Saturday 9 January 2016

வீட்டுக்கடன் முடியும் தருவாயில் இருக்கிறதா?


வங்கியில் உங்கள் வீட்டுக்கடன் என்ன நிலையில் உள்ளது? முடியும் தருவாயிலா?

உங்களை எச்சரிக்கவே இதனை எழுதுகிறேன். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு மனதில் ஒரே நெருடல்.

லாரி ஒட்டுனரான அந்த நண்பரும் அவர் மனைவியும் சேர்ந்து வீடு வாங்கியிருந்தனர். மாதா மாதம் மாதத் தவணையைச்  சரியாகக் கட்டி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அனைத்தும் சரியாகவே போய்க் கொண்டிருந்தது.

ஒரு முறை மாதத் தவணையைக் கட்டுவதற்காக வங்கிக்குச் சென்றார்.

தவணையைக் கட்டும் போது அங்கிருந்த மலாய்க்கார அலுவலர் ஒருவர் நண்பரின் கணக்கையெல்லாம் பார்த்துவிட்டு: நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் அதிகமாகவே செலுத்துகிறீர்கள். பரவாயில்லை! இனி சில மாதங்களுக்கு உங்களின் தவணைப் பணத்தைச் செலுத்த வேண்டாம். நாங்கள் உங்களுக்குக் கடிதம் அனுப்புவோம்.கடிதம் கிடைத்த பிறகு நீங்கள் உங்கள் பணத்தைச் செலுத்தினால் போதும் என்றார்.

வங்கியில் என்ன சொல்கிறார்களோ அதைத் தானே நாம் செய்ய வேண்டும்?

நண்பரும் அதைத் தான் செய்தார். வங்கியிலிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. அவர் போய் 'என்ன, ஏது' என்றும் கேட்கவுமில்லை.

சில மாதங்கள் பறந்தோடின

ஒரு நாள் மலாய்க்காரர் ஒருவர் தான் அந்த வீட்டை வாங்கி விட்டதாகவும் எப்போது நீங்கள் வீட்டைக் காலி செய்கிறீர்கள் என்று கேட்டு வந்தார்.

நண்பருக்குத் தூக்கி வாரி போட்டது. உடனே வங்கிக்குச்  சென்று விசாரிக்க ஆரம்பித்தார்.

அவர்களோ மாதத் தவணையை நீங்கள் சரியாகக் கட்டவில்லை. உங்களுக்குக் கடிதங்கள் அனுப்பி எச்சரிக்கைச் செய்தோம். உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் சட்டப்படி நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்தோம். வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வந்து விட்டோம். இப்போது அந்த வீட்டை வேறொருவர் வாங்கிவிட்டார். இனி எங்களால் எதுவும் செய்ய இயலாது! என்று கை விரித்து விட்டனர்.

வங்கியிடம்,  கடிதங்கள் அனுப்பியதற்கான அத்தாட்சி, வீடு ஏலம் போவதற்கான அத்தாட்சி இப்படி எல்லா அத்தாட்சிகளும் அவர்களிடம் இருந்தன.

நண்பரோ கையில் பணம் இருந்தும் நான் இப்படி ஏமாந்தேனே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

வங்கியில் வேலை செய்பவனெல்லாம் யோக்கியன் என்று நம்பி விடாதீர்கள். அவர்கள் எதைச் சொன்னாலும் கடிதமாகக் கொடுக்கச் சொல்லுங்கள்.  அது தான் உங்களின் அத்தாட்சி.

கோடிசுவரன்

1 comment:

  1. வீட்டுக்கடன் தேவையா??
    சொத்து ஆவணம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் ஆலோசனை தருகிறோம். மற்றும் வீட்டுக்கடன் அனைத்தும் பெற்றிட நாங்கள் உதவுகிறோம்.
    வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் எங்கள் இணையதளத்தை பாருங்கள்.. நீங்கள் விடை பெறலாம்.மற்றும் வீட்டுக்கடன் வாங்க என்ன என்ன தகுதி மற்றும் என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதையும் முழுமையாக அளித்துள்ளோம்..நன்றி… www.mohanconsultant.com
    Mr.Mohan,8489445466

    ReplyDelete