Thursday 21 January 2016

உணவுகளை வீணடிக்காதீர்.......!

உணவுகளை வீணடிக்கும் பழக்கும் நம்மைப் போல வேறு யாருக்கும் இருக்குமா என்பது கேள்விக்குறியே!

பொதுவாக திருமண நிகழ்வுகளில் நடைபெறுகின்ற இந்த அலங்கோலங்களைப் பார்க்கின்ற போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்"  என்று பாடத் தோன்றுகிறது.

உணவுகளை எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள்?

உண்மையைச் சொன்னால் நமது தாய்மார்களுக்கே இந்த வீணடிப்பு செய்வதில் அதிக பங்கு இருப்பதாகச் சொல்லலாம். உணவு என்றாலே ஏதோ அலட்சியம்.

சாப்பிட முடியவில்லையென்றால் சும்மா குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். என்ன அலட்சியம்; என்ன எகத்தாளம்! மனசாட்சி என்று ஒன்று இல்லையா?

உணவு என்ன அவ்வளவு  மலிவாகப் போய்விட்டதா? இந்த உணவுக்காக மனிதன் படுகின்ற பாட்டை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்கிறார்களா இந்த அலட்சியவாதிகள்!

ஏன் வெளிநாடுகளுக்குப் போக வேண்டும்? நமது நாட்டிலேயே பாருங்கள். ஒரு வேளைச் சாப்பாட்டுக்காக பல குடும்பங்கள் பலவித கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையாவது இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா?

உணவை அலட்சியப் படுத்துகிற இவர்கள் யார்? எல்லாம் படித்தவர்கள்! இது தான் மிகவும் ஆச்சரியமான செய்தி. படித்தவர்கள் என்பதை ஏதோ உடை அணிவதில் தான் காட்டுகிறார்களே தவிர அவர்கள் பண்பாட்டில் காட்டுவதில்லை.

பெரியவர்கள் இப்படி உணவை  அலட்சியம் செய்வதால் நாளை இவர்கள் பிள்ளைகளும் அவர்களையே பின்பற்றுவார்கள் என்பது தான் நிதர்சனம்.

இந்த உணவுக்காக மக்கள் படுகின்ற அவஸ்தை, படுகின்ற கஷ்ட நஷ்டங்களைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். உலக நாடுகளைப் பாருங்கள். எதியோப்பியா என்னும் ஒரு ஆப்பரிக்க நாட்டைப் பற்றித் தெரியாதவர் யாரும் இல்லை. அந்த அளவுக்குப் பஞ்சம், பட்டினி. உண்ண உணவு இல்லை; உடுத்த உடையில்லை.

தமிழ் நாட்டில் எத்தனையோ விவசாயிகள் உணவின்றி தற்கொலைச் செய்து கொள்கின்றனர் என்பதைப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன.

இதையெல்லாம் நாம் அனுபவித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.

இன்று,  இந்த உணவை அலட்சியப் படுத்தும் நம்மை,  நாளை இந்த உணவு நம்மை அலட்சியப் படுத்தும் என்பதை நாம் மறக்க வேண்டாம். இதற்குத் தான் இனிப்பு நீர்,இரத்த அழுத்தம் என்று நாம் பல வியாதிகளைக் கொண்டிருக்கிறோம்.

மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன் உணவுகளை வீணடிக்க வேண்டாம். உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் அந்த உணவைப் பொட்டலமாகக் கட்டி உங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுக்குக் கொடுங்கள். யாராவது சாப்பிட்டால் சரி.

உணவில் அலட்சியம் காட்ட வேண்டாம் நீங்கள் அலட்சியப்பட்டுப் போவீர்கள்!

No comments:

Post a Comment