மியன்மாரில், ரோஹிங்யா சமூகத்தினர் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று மலேசிய வெளியுறவு அமைச்சு மியன்மாரை நினைவுறுத்தியது.
தொடர்ந்து மியன்மார் இன, சமய வெறியர்களால் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், நாட்டைவிட்டு அவர்கள் துரத்தப்படுவதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.
இன்று இராணுவத்தினரால் பலவகையானத் துன்பங்களுக்கு உள்ளாகும் இந்த மக்களை எந்த நாடும் வரவேற்பதாக இல்லை. வெளி நாடுகளுக்குப் படகுகள் மூலம் தப்பியோடுவதும், கடலிலேயே சாவதும், கரைக்கு வெளியே அவர்களால் வெளியேற முடியாததும் - அதன் பிறகு அவர்கள் கடலையே சுற்றிச்சுற்றி - நாமே நமது வசதிக்கேற்ப ஊகித்துக் கொள்ள வேண்டியது தான்.
ஆண்டுக் கணக்கில் இந்தப் பிரச்சனை இழுத்துக் கொண்டு போகிறதே தவிர இவர்களுக்கு எந்த ஒரு முடிவும் காணப்படவில்லை.
இவர்கள் ஒரளவு அருகில் உள்ள வங்காள தேசத்தின் உறவுகள். ஆனாலும் வங்காள தேசம் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயாராக இல்லை. எந்த நாடும் ஏற்காத நிலையில், இருக்கின்ற நாடும் இம்சைப் படுத்துகின்ற நிலையில், இவர்கள் நிலை என்ன? எங்கு தான் போவார்கள்? என்ன தான் செய்வார்கள்?
இதனை மியன்மார் தனது உள்நாட்டு விவகாரமாக காண முடியாது என்றும் இது ஒரு அனைத்துலக விவகாரமாக காண வேண்டும் எனவும் மலேசிய வெளியுறவு அமைச்சு கூறுகிறது. இது சமய சம்பந்தமான விவகாரம் அல்ல; மாறாக மனிதாபிமானம் சம்பந்தமான விவாகாரம். அது மட்டும் அல்லாது ஓர் இனத்தை மட்டுமே குறிவைத்து வெளியேற்றும் இந்தச் செயல் இன அழிப்பு விவகாரந்தான் என அது மேலும் கூறியது.
மியன்மார் பதிலடியாக தனது நாட்டுக் குடிமக்கள் இனி மலேசிய நாட்டிற்கு வேலை செய்ய அனுமதி இல்லை என அறிவித்துவிட்டது
வெளியுறவு அமைச்சின் இந்தச் செயல்பாட்டை நாமும் வரவேற்கிறோம். இன அழிப்போ, அல்லது பலவீனப்பட்டுப் போயிருக்கும் ஒரு பகுதி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதோ மிகவும் கொடூரமான ஒரு செயல்.
இலங்கையில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கூட நமது அரசாங்கம், இதுவரை கூட, - மகிந்த ராஜபக்சே, இப்போதைய அதிபர் மைத்திரி பாலா சிரிசேனா வரை - கண்டு கொள்ளவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் அதனை மறந்து விட முடியாது.
இது போன்ற செயல்கள் எங்கு நடந்தாலும் மனிதாபிமானமற்ற செயல்கள் தான். இது சமயம் சார்ந்ததும் அல்ல. இனம் சார்ந்ததும் அல்ல.இது மனிதம் மட்டும் தான்.
ஆனாலும் நமது வெளியுறவு அமைச்சு தெளிவாகவே இருக்கிறது. ரோஹிங்யா சமூகம் என்பது முஸ்லிம்கள் என்னும் கோணத்தில் பார்க்காமல் அவர்களும் மனிதர்கள், மனிதாபிமான கோணத்தில் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்னும் கொள்கையைக் கொண்டிருப்பது நமக்கும் ஏற்புடையதே.
ரோஹிங்யா மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும். குடியிருக்க ஒரு வீடு மட்டும் அல்ல, ஒரு நாடும் வேண்டும். அவர்களுக்கு யார் அடைக்கலம் தருவார்? இஸ்லாமிய நாடுகளுக்கே இதில் அதிக பொறுப்புக்கள் உண்டு. மனிதாபிமானத்தைப் பாருங்கள் - முஸ்லிம்களாகப் பார்க்காதீர்கள் - என்று சொல்லி தப்பிவிட முடியாது!
எனினும் இந்த மக்களுக்கு நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!
No comments:
Post a Comment