Friday, 23 December 2016
இளைஞனே! நீ வெற்றி பெறுவாய்!
இளைஞனே நீ வெற்றி பெறுவாய்! நீ வெற்றி பெற வேண்டும். நீ தான் நமது சமுதாயத்தின் சொத்து. நீ தான் இந்தச் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வேண்டும்.
உன் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு, நீ வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு ஐயமில்லை.
காலையில் ஒரு இளைஞனைச் சந்தித்த போது எனக்கு அந்த நம்பிக்கை பிறந்தது. துடிப்பான இளைஞன். அப்படித்தான் நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்.
ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞன் படிவம் ஆறு முடித்ததும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் போட்டான். அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை. அரசாங்கம், இந்தியர்கள் என்றாலே ஒதுக்குவதும் அலட்சியம் படுத்துவதும் நமக்குத் தெரிந்தது தானே!
வேறு வழியில்லாமல் தனியார்ப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய ஒரு கட்டாயம் அந்த இளைஞனுக்கு. சேர்ந்த பிறகு ஏதேனும் கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்னும் நம்பிக்கையோடு சேர்ந்தான். ஓர் ஆண்டு தான் அவனால் கட்டணம் கட்ட முடிந்தது. எந்தவிதக் கல்விக்கடனும் கிடைத்தபாடில்லை.
வேறு வழியில்லை.. படிப்பைபைத் தொடர முடியவில்லை. கல்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ' முதலில் பணம் சம்பாதிப்போம். பிறகு உயர்கல்வியைப் பற்றி யோசிப்போம்' என்று முடிவெடுத்து ஒரு வேலையைத் தேடிக் கொண்டான். ஆனாலும் கல்வியைத் தொடர வேண்டும் என்னும் அந்த எண்ண்த்தை மனதிலிருந்து அவனால் அகற்ற முடியவில்லை.
அப்போது தான் அவன் கண்ணில் பட்டது OPEN UNIVERSITY. சரியானத் தகவல்களைத் தெரிந்து கொண்டு உடனடியாகச் சேர்ந்து விட்டான் அவனது கல்வியைத் தொடர. இப்போது வேலையைச் செய்து கொண்டே கல்வியைத் தொடர்ந்து விட்டான்.
இதில் என்ன அதிசயம் என்று நினைக்கத் தோன்றும். இப்போது நமது இளைஞர்கள் மிக எளிதில் சோர்ந்து போய் விடுகிறார்கள். முதல் முயற்சியிலேயே அனைத்தும் தங்களது காலடியில் விழுந்துவிடும் என்று நினைக்கிறார்கள்!
அப்படியெல்லாம் ஒன்றும் விழுந்துவிடாது! ஒரு முயற்சி அல்ல. பல முயற்சிகள். யாருமே முதல் முயற்சிலேயே வெற்றிபெற்று விடுவதில்லை. அது கல்விக்கும் பொருந்தும். மேலே சொன்ன அந்த இளைஞனைப் போல விடாமுயற்சி வேண்டும். பணம் இருந்தால் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரலாம். பணம் இல்லாதவர்கள்? இப்படித்தான் பல முயற்சிகள் செய்து கல்வியைத் தொடர வேண்டும். அதற்குக் கடுமையான உழைப்பு வேண்டும்.
ஒரு நம்பிக்கை எனக்குத் தோன்றுகிறது. நமது இளஞர்கள் சரியான பாதையை நோக்கித் தான் செல்லுகிறார்கள். பட்டதாரியாக வேண்டும் என்னும் அந்த இலட்சியம் எல்லா இளைஞர்களிடமும் கனன்று கொண்டு தான் இருக்கிறது.
நமது இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள்! இந்த சமுதாயம் வெற்றி பெறும். நாம் வெற்றி பெறுவோம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment