Saturday 18 March 2017

இந்திய மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள்!


எஸ்.பி.எம். தேர்வு எழுதிய இந்திய மாணவர்களில் பலர் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்றிருக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் 'ஏ' எடுத்து வியப்பை  ஏற்படுத்தியிருக்கின்றனர்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!  இனி அடுத்த கட்டம் ஆரம்பம். பலவிதமான போராட்டங்கள். அதிலும் சிறப்பானத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் அவர்களைத் தேடி வருவதில்லை! சிறப்பானத் தேர்ச்சிப் பெற்றவர்களை உயர் கல்விக் கூடங்கள் - உண்மையைச் சொன்னால் -  கண்டு கொள்வதில்லை! "உன்னை யார் இவ்வளவு புள்ளிகள் எடுக்கச் சொன்னார்கள்" என்பதாகத்தான் அவர்களின் நினைக்கிறார்கள்!  எவ்வளவு மட்டம் தட்டினாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து விடுகிறார்களே! அது தான் இந்திய இனம்! கல்வி என்று வரும் போது நாம் முன் நிற்கிறோம்!

ஆனாலும் அரசாங்க உயர்கல்விக் கூடங்கள் கொடுக்கின்ற வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்பதே நமது ஆலோசனை. வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. குறைச் சொல்லிக் கொண்டிருப்பதை விட கிடைக்கின்ற வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

இன்றைய நிலையில் ஒவ்வொரு இந்திய மாணவனும் பட்டம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பட்டம் பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன.

இந்த நிலையில் கிடைக்கின்ற வாய்ப்புக்களையும் - கல்லூரி வெகு தூரம், வேறு மாநிலம், வீட்டுக்கு வருவதே சிரமம் - போன்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்!  இப்போது பெண் பிள்ளைகள் கூட வெளி மாநிலங்களுக்குச் சென்று படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு என்ன பயம்?

கல்லூரி தூரம் என்று காரணம் சொல்லி, ஏதோ அருகிலுள்ள ஒரு அரசியவாதியால் நடத்தப்படும் கொஞசங் கூட பொருத்தமில்லாத கல்லூரிகளில் சேர்ந்து, எதற்கும் உதவாத கல்வியைக் கற்று. பின்னர் கல்லூரியிலிருந்து வெளியாகும் போது, ஒரு கடன்காரனகத்தான் வெளி வர வேண்டி வரும்! அதனை மறவாதீர்கள்.

அரசாங்கக் கல்லூரிகள் உங்களுக்குக் குறைவானச் செலவில் தரமானக் கல்வியைக் கொடுக்கின்றன.  அதனைப் பயன் படுத்துங்கள். ஒரே பிரச்சனை. பலமுறை அவர்கள் கதவைத் தட்ட வேண்டும்! பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்! மீண்டும் மீண்டும் தட்ட வேண்டும்! அதனாலென்ன? கதவு  திறக்கும் வரை பகுதி நேரமாக வேலைச் செய்யுங்கள். இப்படித்தான் பல மாணவர்களை நான் பார்க்கிறேன். கிடைக்கின்ற சம்பளத்தை அவர்கள் கல்லூரிகள் போகும் போது பயன்படுத்தி பெற்றோர்களின் சுமையைக் குறைக்கின்றனர்..

பட்டதாரி ஆக வேண்டும் என்னும் நோக்கம் மட்டும் நம்மிடம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே!

வெற்றி பெற வாழ்த்துகள்!

No comments:

Post a Comment