Tuesday 28 March 2017

பொன் ஆர் இன உணர்வு அற்றவரா?


சில பிரச்சனைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மத்திய இந்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக இருப்பவர் பொன் ராதாகிருஷ்ணன். இவரால் ஒரு சின்ன செயலையாவது செய்யக்கூடிய திறன் உள்ளவரா என்பது நம்மால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

மீனவர்கள் போராட்டம் நடத்திய போது போரட்டத்தைக் கைவிடும்படி அவர்களிடம் காலில் விழாத குறையாக அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி போராட்டத்தை கைவிடும்படி செய்தார்! இதனால் பிரதமர் மோடியிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும் என்பதைத் தவிர அதனால் மீனவருக்கு என்ன பயன் விளைந்தது?

போராட்டம் கைவிடப்பட்ட சில நாள்களிலேயே மீண்டும் இலங்கை கடற்படை மீனவர்களைத் தாக்கியது! அத்தோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. பொன் ராதாகிருஷ்ணன் இது பற்றி வாய்த் திறக்கவில்லை! தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்!

நெடுவாசல் போராட்டம். நெடுஞ்சான்கிடையாக அவர்களிடம் போய் விழுந்தார்!  காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கதறி அழுது அவர்களையும் அவர்களது போரட்டங்களைக் கை விட வைத்தார்!

அவர்களது போராட்டம் கைவிடப்பட்ட அடுத்த நாளே அங்கு டில்லியில் ஹைட்ரோகார்பன் திட்டம் கையெழுத்து ஆகிறது!

தன்னால் இந்த சமுதாயத்திற்கு உதவ முடியாது என்றால் நல்லத்தனமாக விலகிக் கொள்ள வேண்டும். தன்னால் முடிந்த காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களை ஏமாற்றுவதும், கீழ்த்தட்டு  மக்களை ஏமாறச் செய்வதும் மிகவும் கீழான ஒரு செயல் என்பதை அறியாதவரா அவர்?

மத்திய அளவில் ஓர் இணை அமைச்சராக இருக்கும் ஒருவர் மக்களை ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டும் என்னும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

பொன்.ஆர் அவர்கள் தமிழ் நாட்டை மத்தியில் பிரதிநிதிக்கிறார்  தமிழக மக்களை அவர் பிரதிநிதிக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சனைகளை மத்திய அரசுக்குக் கொண்டு செல்வது அவர் வேலை. அவர் கடமை. ஒரு தமிழனுக்குத் துன்பம் வருகிறது என்றாலும் அதனைக் கலைவது அவரது வேலை. தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ, ஏழையோ பணக்காரனோ  தமிழர்களின் பிரச்சனை என்பது அவரின் பிரச்சனை. இதற்குச் சாக்குப்போக்குகள் தேவை இல்லை. ஏற்கனவே உள்ள கட்சிகள் நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டன.

இனி மேலும் மற்ற கட்சிகளின் மீது குற்றங்கள் கண்டு பிடிக்காமல் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்ய் வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

அவர் தன்னைத் தமிழன் என்கிற உணர்வோடு அரசியல் செய்யுமாறு நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்! அரசியல் இல்லை என்றால் ஏதோ ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என்கிற நோக்கத்திற்காக செயல் பட வேண்டாம்!

No comments:

Post a Comment